செவ்வாய், 6 ஜூலை, 2021

சமூக தொண்டர் ஸ்டேன்ஸ் சுவாமி உயிரிழப்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!.- எம்.எச்.ஜவாஹிருல்லா


 சமூக தொண்டர் ஸ்டேன்ஸ் சுவாமி உயிரிழப்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சமூக தொண்டர் அருட்தந்தை ஸ்டேன்ஸ் சுவாமி அவர்கள் இன்று மும்பை மருத்துவமனை ஒன்றில் மரணித்த செய்தி ஆறாத் துயரத்தை அளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வந்தவர் ஸ்டேன் சுவாமி.ஆதிவாசி மக்களின் நிலத்தை சூறையாடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நீதிமன்றம் உள்ளிட்ட உரிமைப் போராட்டங்களை நடத்திக் காட்டியவர். ஆதிவாசிகளை நக்சல்கள் என்று முத்திரைக் குத்திக் கண்மூடித்தனமாக கைது செய்ததை எதிர்த்தவர். அம்மக்களின் விடுதலைக்காகத் சட்ட போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவர். பழங்குடி மக்களின் உரிமைகளை உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டியவர் ஸ்டேன் சுவாமி அவர்கள்.

 தள்ளாத வயதில் முதியவர் என்றும் பாராமல்  எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பீமா கோரேகான் வழக்கில் ஒன்றிய அரசின் என்ஐஏ ஸ்டேன் சுவாமி அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தது. ஒரு குவளை தண்ணீரைக் கூட தனது கரங்களால் பிடித்து குடிக்க இயலாத நிலையில் இருந்த இந்த உன்னத மக்கள் தொண்டர் மீது கொடிய உபா சட்டம் பாய்ச்சப்பட்டது. ஸ்டேன் சாமி அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் கருத்தரங்குகளில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நானும் பங்கேற்று குரல் எழுப்பினேன். உழைப்பாளி மக்களுக்காக குரல் கொடுத்த சுயநலமில்லாத போராளி அருட்தந்தை ஸ்டன்ஸ் சுவாமி.

 இந்தியாவின் ஜனநாயகத்திற்காகப் போராடும் போராளிகளுக்கு இவர் ஒரு சிறந்த முன்னோடி. இத்தகைய உன்னத மனிதரை சிறையில் அடைத்து கொலை தான் செய்துள்ளார்கள். இதற்கு முழுப் பொறுப்பு மனிதாபிமானமில்லாத மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தான். இந்த கொடிய மரணத்திற்குக் காரணமாக இருக்கும் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு மிக மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட சமூக தொண்டர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோருகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக