வியாழன், 2 செப்டம்பர், 2021

தமிழகம் முழுவதும் செயல்படும் பன்முக குவாரிகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்திரவிடவேண்டும்.- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்


 சட்டவிரோத குவாரிகள் நடத்திய குற்றவாளிகள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

தமிழகம் முழுவதும் சட்டவிரோத குவாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்டவிரோதமான தன்மையிலும், விதிகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை முற்றிலும் மீறும் வகையிலும் நூற்றுக்கணக்கான கல்குவாரிகள் இயங்கி வருவதாகவும், இத்தகைய குவாரிகளை நடத்தி வந்தவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என அனைவரின் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.

இம்முறைகேடுகள் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்திய வழக்கறிஞர் அசோக்குமார் அவர்களது அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திற்குட்பட்ட மொரட்டுப்பாளையம், கோவிந்தப்பாளையம், பெரியபாளையம் ஆகிய கிராமங்களில் உரிமம் பெறப்பட்ட 24 கல்குவாரிகளும், எவ்வித உரிமங்களும் பெறாமல் 64 கல்குவாரிகளும் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், இந்த குவாரிகள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதோடு, சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை வளங்களை முற்றிலும் சீரழிக்கும்  தன்மையிலும் செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மேலும் இவை குறித்த முழுமையாக விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனவும், சட்டவிரோதமாக குவாரிகளை நடத்தியவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என அனைவரின் மீதும் பாரபட்சமின்றி சட்டபூர்வமான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமெனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே உரிமம் பெற்றுள்ள 24 கல்குவாரிகளில் பல குவாரிகளின் உரிமங்கள் ஏற்கனவே காலாவதி ஆகிவிட்டதாகவும், 64 கல்குவாரிகள் முறையான அனுமதியின்றி இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள நீதிமன்றமும், விசாரணை ஆணைய அறிக்கையும் மேலும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களையும் அளித்துள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு ஆழத்திலிருந்து கற்கள் வெட்டியெடுக்கப்பட்டிருப்பதால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெருமளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அறிக்கையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் 1957 ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் முற்றிலும் மீறப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இச்சட்ட விரோத குவாரிகள் மூலம் அரசுக்கு பெருந்தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிகளால் அரசுக்கு சுமார் ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக்குழு அறிக்கை அளித்தது. ஆனால் அவ்வறிக்கை மீது உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோன்று தமிழ்நாட்டில் தாதுமணல் கொள்ளை தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் சுரேஷ் அவர்கள் விரிவான விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அவ்வறிக்கையில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கற்பனை செய்ய முடியாதது என குறிப்பிட்டிருந்தார். மேலும் அப்போது நாட்டில் பரவலாக பேசப்பட்ட 2ஜி மற்றும் நிலக்கரி ஊழலை விட பெரியது தாது மணல் கொள்ளை என தெரிவித்திருந்தார்.

இம்முறைகேடு தொடர்பாக தமிழக அரசின் சார்பாக உயர் அதிகாரி திரு.கெகன்சிங்பேடி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு முழுமையாக விசாரித்து அரசுக்கு தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. மேற்கண்ட இமாலய முறைகேடுகள் குறித்து நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும், இதனால் அரசுக்கு ஏற்பட்ட பல கோடி ரூபாய்கள் இழப்பினை மீட்டெடுக்கப்படவில்லை என்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

தற்போது மீண்டும் உயர்நீதிமன்றம் திருப்பூர் மாவட்ட கனிமவள கொள்ளை தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி சுதந்திரமாக நடந்து கொண்டுள்ளது. உயர்அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பின்பலத்துடனேயே இத்தகைய பகற்கொள்ளை பகிரங்கமாக நடைபெற்று வருவது தெளிவு.

நாட்டின் சொத்தான கனிம வளங்களை தனியார் கொள்ளைக்கு அனுமதித்துவிட்டு, அரசுகள் மறுபக்கம் நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டுள்ளது விநோதமாக உள்ளது. கனிம வள வியாபாரத்தை அரசே நேரடியாக கையிலெடுத்து ஊழல் முறைகேடுகளின்றி நிர்வகிப்பதின் மூலம் அரசு வருமானத்தை பலமடங்கு பெருக்குவதுடன் சுற்றுச்சூழல், இயற்கை வளங்களையும் முறையாக பாதுகாத்திட முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

எனவே திருப்பூர் மாவட்டத்தில் முற்றிலும் சட்டவிரோதமாகவும், முறையான உரிமங்கள் பெறாமலும், இயற்கையை சீரழிக்கும் விதத்திலும் செயல்பட்டுள்ள இந்த கல்குவாரிகளை நடத்தியவர்கள்  அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், அனைவரின் மீதும் உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், தமிழகம் முழுவதும் செயல்படும் பன்முக குவாரிகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்திரவிடவேண்டும். அங்கு காணப்படும் முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேறகொள்ள வேண்டும்.

ஏற்கனவே, திருமிகு சகாயம் ஐ.ஏ.எஸ், திரு.கெகன்சிங்பேடி ஐ.ஏ.எஸ்., வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் தலைமையிலான விசாரணைக்குழு அறிக்கைகளை உடனடியாக வெளியிடுவதுடன் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக