திங்கள், 6 செப்டம்பர், 2021

கடற்படையினர் தங்களின் தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை தொடர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.- திரு ராம்நாத் கோவிந்த்


 இந்திய கடற்படையின் விமானப் பிரிவுக்கு குடியரசுத் தலைவரின் கொடியை வழங்குவதற்காக உங்கள் முன் நிற்பது எனக்கு பெருமை. நாட்டுக்கான சேவையில் இப்பிரிவு 68 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ளதால், கடற்படை விமானப்பிரிவு வரலாற்றில் இது உண்மையிலேயே முக்கியமான நிகழ்வு.

இந்த சாதனையை படைத்த கடற்படையின் முன்னாள், இன்னாள் வீரர்களுக்கு வாழ்த்துகள். போர் மற்றும் அமைதி காலத்தில் நாட்டுக்கு ஆற்றிய  தனித்துவமான சேவையை அங்கீகரிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் கொடி இன்று அளிக்கப்படுகிறது.

கடந்த சில தசாப்தங்களாக, இந்திய கடற்படையின் விமானப்பிரிவு சீரான பயணத்தை மேற்கொண்டுள்ளது. கடற்படையின் முதல் விமான தளம் ஐஎன்எஸ் கருடா கடந்த 1953ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து கடற்படையின் விமானப்பிரிவு, நீண்ட சேவையை ஆற்றி வருகிறது. 1961ம் ஆண்டு சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் இந்த கடற்படைக்கு வலுவையும், கவுரவத்தையும் வழங்கியது. 

இது கடந்த 1971ம் ஆண்டு போரில் முக்கிய பங்காற்றியது. கார்கில் மோதலிலும், கடற்படையின் விமானப் பிரிவு முக்கிய பங்காற்றியது. இந்திய பெருங்கடல் பகுதியில், கடற்படை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

இந்த சிறப்பு தருணத்தில், கடற்படையின் விமானப்பிரிவில் உயிர் நீத்த வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நாம் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்.

கடற்படையினர் தங்களின் தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை தொடர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக