திங்கள், 10 பிப்ரவரி, 2020

மே 10 சிப்பாய்க் கிளர்ச்சி, 1857

இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி

       1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர். ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி  இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது. 


     அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக