சனி, 15 பிப்ரவரி, 2020

பாரதிய ஜனதா கட்சியினுடைய பொதுக்கூட்டங்களில் பேச வேண்டியதை நம்முடைய மக்களவையில் பேசியிருக்கிறார் நிதியமைச்சர் - தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ஆற்றிய உரை

மாண்புமிகு அவைத் தலைவருக்கு வணக்கம்,

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் ஏறத்தாழ மூன்று மணி நேரம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார். அவருடைய பேச்சாற்றல் பாராட்டுக்குரியது. ஆனால், அவர் சமர்ப்பித்திருக்கிற நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் இருக்கிறது.

பற்றாக்குறை 3.8 சதவீதம், இந்த பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு இந்த அரசு என்ன முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது என்பதை அவர் தன்னுடைய உரையிலே பதிவு செய்கிறபோது ‘பொதுத்துறைகளை விற்கப்போகிறோம்’ என சொல்லியிருக்கிறார். கடந்தமுறை பொதுத்துறைகளை விற்பனை செய்வதற்கு நிர்ணயித்த  இலக்கான ரூபாய் ஒரு லட்சத்தி ஐயாயிரம் கோடியை இதன் மூலம் நாங்கள் பெறுவோம், பற்றாக்குறையை ஈடுசெய்வோம் என சொல்லப்பட்டது. ஆனால், கடந்த நிதியாண்டில் பதினெட்டாயிரம் கோடி ரூபாய் தான் ‘டிஸ்இன்வெஸ்ட்மென்ட்’ மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம். ஆகவே, அப்படிப்பட்ட பொதுத்துறை விற்பனையின் மூலம் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியாது என்பதை நாம் அறிய முடிகிற இந்தச் சூழலில், இந்த ஆண்டு LIC மற்றும் ஏர் இந்தியா, ரயில்வே போன்றவைற்றையெல்லாம் தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் ஈடுசெய்யப்போவதாக சொல்வது அதிர்ச்சியளிக்கிறது. அது நடைமுறைக்கு உதவாது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அவலமும் ஏற்படும். 

மேலும், இந்திய அரசு பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதுவரை GDP 4.5 சதவீதம் தான் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியினுடைய அதிகாரப்பூர்வமான பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் உள்ளபடியே தனது அறிக்கையில் இந்திய அரசின் GDP என்பது 2.5 சதவீதம் தான் ஆனால் இவர்கள் 4.5 சதவீதமாக மாற்றி கணக்கு காட்டுகிறார்கள் என்று ஒரு வாக்குமூலத்தை அளித்திருக்கிறார் என்றாலும் கூட 4.5% உள்ள GDP யை திடீரென்று 10% சதவீதமாக உயர்த்திக்காட்ட போகிறோம் என நிதியமைச்சர் அறிவித்திருப்பது உள்ளபடியே நகைச்சுவையாக இருக்கிறது. அனைத்துத் தரப்பு பொருளியல் வல்லுனர்களும் இதை கேளி செய்யும் நிலை தான் இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியினுடைய பொதுக்கூட்டங்களில் பேச வேண்டியதை நம்முடைய மக்களவையில் பேசியிருக்கிறார்  நிதியமைச்சர் என்று நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எனவே, இது எளிய மக்களுக்கு, ஏழை மக்களுக்கு, விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான பட்ஜெட் இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் SCSP, TSP துணைத் திட்டங்கள் மூலம் மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து வந்த நிலையை முற்றிலுமாக மாற்றி புறக்கணித்துவிட்டது இந்த அரசு. தலித் விரோத அரசு என நான் குற்றஞ்சாட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

14.6% SC, 8.6% ST, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி. ஆனால், வெறும் 3.5% தான் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2018 -2019 ஆம் ஆண்டில் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப்புக்காகக்காக 5928 கோடி, ஆனால் இந்த 2020 -2021 நிதி ஆண்டிற்கு 2987 கோடி. ஒவ்வொரு ஆண்டும் நிதியை உயர்த்த வேண்டுமே தவிர குறைக்ககூடாது. ஆனால், திட்டமிட்டு நிதியை குறைக்கின்ற முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. கல்விக்கான 2018-2019-ல் 6083 கோடி ஆனால் 2020-2021-ற்கு 3742 கோடி. இங்கே ஏறத்தாழ 1500 கோடியை குறைத்திருக்கிறது இந்த அரசு.         ஆக மொத்தத்தில் தலித் மக்களின் கல்வியில் கை வைக்கிற அரசாக இந்த அரசு இருப்பதால், இது தலித் மற்றும் பழங்குடி மக்கள் விரோத அரசு என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்

இந்த நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வழங்கப்படவிருக்கிற  இடஒதுக்கீட்டிற்கே வேட்டு வைக்கிற அளவில் உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மத்திய அரசு ரிவீவ் பெட்டிசன் தாக்கல் செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். அந்த சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையின் பட்டியலில் இணைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு நான் ஒரு வேண்டுகோளை வைக்க  கடமைப்பட்டுள்ளேன். மிகமுக்கியமாக நமது நிதியமைச்சர் தனது உரையில் சிந்துசமவெளி நாகரீகத்தை பற்றி பேசுகிறபோது இந்த நாகரீகம் சிந்து சரஸ்வதி நாகரீகம் என்று புதிதாக ஒரு பதிவை செய்தார். இது வரலாற்று புரட்டு திரிபு வேலை. இது தமிழர் நாகரீகம் என்பதை மூடிமறைப்பதற்காக இந்த முயற்சியில் நம்முடைய அரசு ஈடுபட்டிருப்பதாக நான் கருதுகிறேன். வேதகால நாகரீகத்தோடு இதை இணைத்து பேசுகிற முயற்சி வரலாற்று திரிபு வேலை என்பதை நான் குற்றமாக சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்

ஆசிச்சநல்லூர் தமிழகத்தில் மிக முக்கியமான ஒரு களம். அங்கே தோண்டியெடுக்கபட்ட பல அகழ்வாய்வு பொருட்கள், முதுமக்கள் தாழி அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இவைகளெல்லாம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. அது தொடர்பான அறிக்கை இது வரையில் வெளியிடப்படவில்லை. ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடந்த நிலையில் கூட ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை இதுவரையில் ஏன் மத்திய அரசு வெளியிடவில்லை என்கிற கேள்வியை நான் எழுப்ப கடமைப்பட்டிருக்கிறேன். இது வேண்டுமென்றே திட்டமிட்டே மூடி மறைக்கின்ற முயற்சி என்றும் நான் குற்றஞ்சாட்ட கடமைப்பட்டிருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் தொடர்பான ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள்விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். அங்கே அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதை வரவேற்று பாராட்டுகிறேன். அதே போல தமிழகத்தில் கொடுமணல், அரிக்கமேடு, அழகர்குளம், காவேரிபூம்பட்டினம், பொருந்தல், கொற்கை போன்ற இடங்களில் அகழ்வாய்வுகள் செய்யப்பட்டு அப்படியே நிலுவையில் இருக்கின்றன. அங்கேயும் அருங்காட்சியகங்கள் அமைக்க வேண்டும். அந்த அகழ்வாய்வை விரிவுப்படுத்த வேண்டும். கீழடி போன்றவற்றில்  அகழ்வாய்வுகளை விரிவுப்படுத்துவதற்கு  உரிய நிதிஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நான் வேண்டுகோள் விடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஏழை எளிய மக்களுக்கு எதிரான பட்ஜெட், விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான பட்ஜெட், சிறுபான்மை மக்களுக்கு எதிரான பட்ஜெட்,  மகளிருக்கு எதிரான பட்ஜெட். எனவே, இந்த பட்ஜெட் எந்த வகையிலும் நம்முடைய நாட்டின் பொருளாதர  வீழ்ச்சியை சீர்செய்வதற்கு பயன்படாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக