திங்கள், 17 பிப்ரவரி, 2020

தமிழக அரசு இப்படியா தேவையற்ற “ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசத்தை” காட்ட வேண்டும்? - கி.வீரமணி


மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம்  அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தையே சிதைப்பதாக இருக்கிறது! இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடி விரும்பத்தகாதது; கண்டிக்கத்தக்கது! - கி.வீரமணி

மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தனக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்ற மிருக பலத்தை வைத்து, அதன் அரசியல் ஆணையரான ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி சில சட்டங்களை - முஸ்லீம்களைக் குறி வைத்தே கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதால், நாடு தழுவிய மக்கள் கிளர்ச்சி  வெடித்துக் கிளம்பி நடந்து வருகிறது.

சட்டம் - ஒழுங்கைக் காக்க வேண்டிய மத்திய அரசு கொண்டு வந்துள்ள, நமது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்படும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களுமே இதனைக் கடுமையாக எதிர்த்து அற வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். எந்த ஒரு சட்டமும் - குடியுரிமைத் திருத்தச் சட்டம் போல - இவ்வளவு கடுமையான எதிர்ப்பை இதுவரை சந்திக்கவே இல்லை. நாட்டின் பொது மனிதர்கள், அறிவுலக மேதைகளும்கூட இச்சட்டத்தை எதிர்த்து அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

கறுப்புச் சட்டங்களால் செயல்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது

ஒரே வரியில் அத்தனைப் பேரும் தேசத்துரோகிகள் என்றோ மற்றபடி பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் என்றோ கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் என்பதில் உள்ள முக்கியமான அடிக்கட்டுமானங்களான மதச் சார்பின்மை, கூட்டாட்சி, சமூகநீதி இவைகளுக்கெல்லாம் முரணாக - இவைகளனைத்தையும் ஓரங்கட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையை இப்படிப்பட்ட கறுப்புச் சட்டங்களால் மத்திய அரசு கொண்டு வந்து செயல்படுத்துவது என்பது வன்மையான மக்களின் கண்டனத்திற்குரியதாகும்.அறவழியில் போராடுவது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அரசமைப்புச் சட்டமுறையே ஆகும்.

அற வழிப் போராட்டத்தைத் தடுக்க முடியாது

அதன் அடிப்படையிலேயேதான் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் டில்லி பகுதியில் தொடர் போராட்டம் நடத்துவதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் “அற வழிப் போராட்டத்தைத் தடுக்க முடியாது. போராடுவதற்கு அவர்களுக்குத் தனி இடம் ஒதுக்கித் தாருங்கள்” என்றுதான் கூறியுள்ளது.
அதுபோலவே மும்பை உயர்நீதிமன்றமும்கூட போராடுவது அவர்களது ஜனநாயக உரிமை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றம் இது சம்பந்தமாக விசாரணைக்கு வந்த வழக்கை அதன் முக்கியத்துவத்தைக் கருதி, உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, இடைக்காலத்தடை ஒன்றை வழங்கியிருந்தால், இத்தனை போராட்டங்களும்கூட தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பது பல நீதிபதிகள், அறிவுச் சான்றோர்கள் கருத்தும்கூட!

ஏற்க இயலாது என பல மாநிலங்கள் தீர்மானம்

பல மாநில சட்டமன்றங்களில், “இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே சிதைப்பதாக இருக்கிறது; மதச் சார்பின்மை, மற்ற அடிப்படை உரிமைகள் பகுதிச் சட்டப் பிரிவுகளைப் பொருட்படுத்தாது புறந்தள்ளியதாக உள்ளது என்ற காரணத்தால், ஏற்க இயலாது” என்று  தீர்மானமாகவே இயற்றி உள்ளன. ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் முதல்முறையாக இந்திய அரசியல் வரலாற்றில் கூட்டாட்சித் தத்துவத்தினை வலியுறுத்தும் முயற்சியின் முகிழ்ப்பாகவே இது காட்டப்பட்டுள்ளது!

எங்கெங்கு காணினும் மக்களின் கிளர்ச்சி!

ஆயிரக்கணக்கான மக்கள்மீது வழக்குப் பதிவு செய்யும் விசித்திரம் இந்நிலையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களே கூடப் போராடும் மக்களுக்கு உரிமை உண்டு - ஜனநாயக அமைப்பில் என்று கூறும் நிலையில்,
தமிழ்நாட்டில் அத்தனை ஆயிரக்கணக்கான மக்கள்மீது வழக்குப் பதிவு செய்யும் விசித்திரம் ஒருபுறம்; மறுபுறம் தாங்கள் அங்கே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்து விட்டு, இங்கே இஸ்லாமிய சிறுபான்மையினர் நலத்தைப் பாதுகாப்போம் என்ற இரட்டை வேடம் ஏனோ?
நேற்றுமுன்தினம் (14.2.2020) அமைதியாக  சென்னை - வண்ணையில் நடைபெற்ற இஸ்லாமியர் போராட்டத்தில் சென்னைக் காவல்துறையினர்  - சில அதிகாரிகள் தடியடிப் பிரயோகம் செய்தது விரும்பத்தகாதது; கண்டிக்கத்தக்கது! பெரும் கூட்டம் கூடும் போது ஊர்வலம் செல்வோர்மீது வழக்குப் பதிவு செய்வதைத் தாண்டி இப்படி வன்முறையை ஏவியுள்ளதற்கு யார் மூலகாரணம்? தாக்கீது எங்கிருந்து?

கருத்துரிமை, பேச்சுரிமையைக்கூட பறிக்கும் ஒரு சார்பு நிலை

அண்மைக்காலத்தில் தமிழகக் காவல்துறை பா.ஜ.க. ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவது போலவே கற்பனை செய்து கொண்டு (அவர்களில் உள்ள கடைசி ஆட்களில் பலர் - அதில் முன்னாள் குற்றவாளிகளும்கூட) குடி மக்களின் நலன் கருதி ஜனநாயக உரிமைக் குரல் எழுப்புவோரைக் கண்டு பாயும் நிலை - மற்ற கட்சிகளின் கருத்துரிமை, பேச்சுரிமையைக்கூட பறிக்கும் ஒரு சார்பு நிலைவெளிப்படையாகவே உள்ளது. நீதிமன்றங்களை நாடியே சாதாரண பொதுக் கூட்டங்களைக்கூட நடத்துவதற்கு அனுமதி பெறும் அவலம் தொடர்கிறது.

இந்நிலையில் வண்ணையில்  நடத்திய வன்முறைகளுக்கு காவல்துறை - ஆளும் அரசின் சார்பில் மனிதநேயத்தோடு வருத்தம் தெரிவிக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுத்தால் இக்கிளர்ச்சித் தீயை அணைக்க வாய்ப்பாகும். இல்லையேல் மேலும் அக்கிளர்ச்சி தீவிரமாகப் பரவவே வாய்ப்பு ஏற்படும்.

தமிழக அரசு இப்படியா தேவையற்ற “ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசத்தை” காட்ட வேண்டும்? இதன் பலன் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதையும் கவனத்தில் வைத்து செயல்படுவது நல்லது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக