செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

“திட்ட நிலை அறிக்கை 2020”யை நிதியமைச்சர் வெளியிட வேண்டும் - செந்தில் ஆறுமுகம்


பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் இன்றைய நிலை குறித்தான “திட்ட நிலை அறிக்கையைத்”(Project Status Report) தாக்கல் செய்ய வேண்டும். 

- செந்தில் ஆறுமுகம்,
 சட்ட பஞ்சாயத்து இயக்கம்


Satta Panchayat Iyakkam demands, the release of "Project Status Report" for the schemes announced in previous budget.....) சட்ட பஞ்சாயத்து இயக்கம் நிதியமைச்சருக்குக் கோரிக்கை..

ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போதும் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதும், சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படுவதும் வழக்கமான நடைமுறை ஆகும். குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், வருகிற பிப்14 தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் ஏராளமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சூழலில், சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திவரும் கோரிக்கை ஒன்றை மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம்.


ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் புதுப்புது திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் எல்லாம் முறையாக செயல்படுத்தப்பட்டனவா, கைவிடப்பட்டனவா என்பது குறித்தான அறிக்கை எதுவும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வெளியாவதில்லை. பட்ஜெட் வாசிக்கப்படும், பின்பு துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும், அரசின் கொள்கை விளக்கக் குறிப்புகள் வெளியிடப்படும். அத்தோடு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்துவிடும். இப்படிப்பட்ட நடைமுறையால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பதை பொதுமக்களால் அறிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, பட்ஜெட் தாக்கலின்போதோ அல்லது பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள்ளோ கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பது குறித்தான “திட்ட நிலை அறிக்கை” யை நிதியமைச்சர் வெளியிட வேண்டும். இந்த அறிக்கையில், திட்டம் தொடங்கப்பட்டு விட்டதா- திட்டமிடல் நிலையில் உள்ளதா - எத்தனை சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளன - எப்போது முழுமையடையும்- தவிர்க்க இயலாத காரணங்களால் திட்டம் கைவிடப்பட்டதா - முழுமையாக நிறைவேற்றப்பட்டுவிட்டதா- என்பது குறித்தான விவரங்கள அடங்கியிருக்க வேண்டும்.

தமிழக பட்ஜெட்டானது 2 இலட்சம் கோடியைக் கடந்துள்ளது. மக்களின் வரிப்பணமான இந்தப்பெருந்தொகையானது எப்படி செலவிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை பொதுமக்கள் அனைவருக்கும் இருக்கிறது. மக்களுக்கு இவ்விவரங்களைத் தெரிவிக்கவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு4ன்படி, அரசின் செயல்பாடுகள் குறித்தான விவரங்களை, ஒவ்வொரு துறையும் ”தானே முன்வந்து பொதுமக்களுக்கு அளிக்கவேண்டும்(Voluntary Disclosure of Information to public). இச்சட்டப்பிரிவின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் மேற்கோரிய “திட்ட நிலை அறிக்கையை” அரசு வெளியிடவேண்டியது அவசியமாகிறது.

கடந்த 2 ஆண்டு (2018-2019,2019-2020)பட்ஜெட் உரை அறிவிப்புகளை ஆய்வு செய்தபோது 2018-2019 ஆண்டில் 26 முக்கிய முக்கிய அறிவிப்புகளும், 2019-2020ம் ஆண்டில் 20 முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன என்பதை அறிகிறோம். ( இணைப்பில் 46 அறிவிப்புகள் குறித்த பட்டியல்)

இதில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது எப்படி பொதுமக்களுக்குத் தெரியும்..?

எடுத்துக்காட்டாக... 

2018-2019 பட்ஜெட் உரையில் கீழ்கண்ட அறிவிப்புகள் இருந்தன:

  • 2 இலட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
  • மாவட்டத்திற்கொரு சைபர் கிரைம் காவல்நிலையம் அமைக்கப்படும் (23.28கோடி செலவில்).
  • அத்திக்கடவு-அவினாசி குடிநீர் திட்டத்திற்கு ரூ250 கோடி ஒதுக்கீடு
  • தாமிரபரணி-கருமேனியாறு நதிநீர் இணைப்புத்திட்டத்திற்கு ரூ.100கோடி ஒதுக்கீடு
  • 19 ஆதி திராவிட மாணவ,மாணவியர் விடுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.46கோடி ஒதுக்கீடு


இதேபோல், 2019-2020 பட்ஜெட்டில் கீழ்கண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன...

  • சென்னை - கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் இடத்தை மீட்டெடுத்து, கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.5259 கோடி மதிப்பிலான திட்டம்.
  • நிலத்தடியில், பன்னடுக்கு வாகன நிறுத்தம்( Underground Multilevel Parking) ரூ.2000 கோடியில்
  • முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 20,000 வீடுகள் கட்டித்தரப்படும்-ரூ.420 கோடி செலவில்
  • சென்னையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மறுகுடியமர்வு செய்ய 38000குடியிருப்புகள் கட்டுதல்( ரூ.4647கோடி செலவில் )
  • இப்படி ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், இவற்றின் தற்போதைய நிலை..??


எத்தன இலட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கப்பட்டது..? ஆதி திராவிட விடுதி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டனவா..? அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்ன ஆனது..? - தாமிரபரணி நதிநீர் இணைப்பின் நிலை என்ன..?

கொடுங்கையூர்,பெருங்குடி மீட்டெடுக்கப்பட்டுவிட்டனவா..? சென்னையில் மறுகுடியமர்விற்கு எத்தனை ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டன..?

தமிழக அரசானது எந்தப்பணியையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவதற்கில்லை. வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் செய்யப்பட்டனவா என்பதுதான் கேள்வி. அதில், ஊழல்-முறைகடுகளால் தாமதமானதா என்பதுதான் கேள்வி. பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படவில்லை என்றால், சில ஆண்டுகளில் திட்டமதிப்பீடு இருமடங்காகிவிடும். ஆகவே, மக்களின் வரிப்பணமானது செலவழிக்கப்படும்விதத்தில் முறையான திட்டமிடல், செயலாக்கம் என்பது மிகவும் அவசியமாகிறது. 4இலட்சம் கோடி கடனில் இயங்கும் தமிழக அரசின் நிதி நிர்வாகத்தை முறைப்படுத்த இதுபோன்ற சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அப்போதுதான், அரசின் திட்டங்கள் யாரால் தாமதமாகின்றன, அதற்குப் பொறுப்பானவர்கள் யார்(Accountability) யார் என்பது அரசுக்கும், மக்களுக்கும் தெரியும். மக்களின் பணம் முறையாக செலவிடப்படுவது உறுதிசெய்யப்படும்.

இதனைக் கருத்தில் கொண்டு, பட்ஜெட் தாக்கலின்போதோ அல்லது பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள்ளோ கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகளின் இன்றைய நிலை என்ன என்பதை விளக்கும் “திட்ட நிலை அறிக்கை 2020”யை நிதியமைச்சர் வெளியிட வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது. ஊடகங்கள் இதுகுறித்து, முதல்வர்-துணை முதல்வரிடம் கேள்விகள் எழுப்பி அவர்களின் விளக்கங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

மத்திய அரசின், நல்லாட்சிக்கான விருதைப் பெற்றதற்காக பெருமிதம் கொண்டுள்ள தமிழக அரசு இதுபோன்ற நிதிச் சீர்திருத்தங்களை உடனே அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக