புதன், 12 பிப்ரவரி, 2020

இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்கட்சினர் பிரச்சினையை எழுப்பினர்.


மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக உறுப்பினர் பி.வில்சன், கேரளாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பினாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதி மன்றத் தீர்ப்பு குறித்து பிரச்சினையை எழுப்பினர்.


அமைச்சர் தாவர்சந்த் கெலட் பதில் : உத்தரகாண்ட் மாநில வழக்கில் ஒரு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இது முக்கியமான வழக்கு என்பதால் அரசு இத்தீர்ப்பினை பரிசீலித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசை ஒரு தரப்பினராகச் சேர்க்காமல் வழக்கு நடத்தப்பட்டுள்ளது. 5.9.2012 அன்று உத்தரகாண்ட்டில் இருந்த மாநில அரசு தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளது. அதனடிப்படையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. மோடி தலைமையிலான மத்திய அரசு தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளது. எனவே இத்தீர்ப்பை விவாதித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

திமுக உறுப்பினர் பி.வில்சன்  “சீராய்வு மனு போடுவீர்களா?" என்று கேள்வி எழுப்பி "இதில் உறுதி கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதே போன்று மற்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர். ஆனால் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக