திங்கள், 10 பிப்ரவரி, 2020

தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழக விவசாயிகளின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. - ஜி.கே.வாசன்


தமிழக முதலமைச்சர் அவர்கள் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட
 சிறப்பு வேளாண்மண்டலமாக அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, பெரும் பாராட்டுக்குரியது, 
நன்றிக்குரியது. - ஜி.கே.வாசன்

தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழக விவசாயிகளின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது.


தமிழக காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கும் மாண்புமிகு தமிழகமுதல்வர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களுக்கு த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்ந்தவரும், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவருமான தமிழக முதல்வர் அவர்கள் விவசாயிகள் நலன் சார்ந்த வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

தமிழக அரசு தொடர்ந்து தமிழக விவசாயிகள் நலன் காக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், திட்டங்கள் எல்லாம் விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழிலுக்கும் பலன் அளிக்கிறது என்பதற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியிருக்கிறது.

அது மட்டுமல்ல அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தால் டெல்டா பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கும், உயரும், வளரும். மேலும் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி இல்லை என்றும் தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது ஒட்டு மொத்த தமிழக விவசாய வளர்ச்சிக்கும், தமிழக விவசாயிகளுக்கும் பெரும் பயன் தரும்.

இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியதும், இவ்விழாவில் உரையாற்றிய போது காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பதும் விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த விவசாயிகளின் எண்ணங்களை தமிழக அரசு பிரதிபலித்திருக்கிறது.

குறிப்பாக தமிழக விவசாயிகள் நலன் காக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் எல்லோரும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் விவசாயிகளுக்கு சாதகமாக இருப்பதோடு, விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழிலையும் மேம்படுத்தி, விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கும் பேருதவியாக இருக்கிறது.

எனவே தமிழக அ.இ.அ.தி.மு.க அரசு தொடர்ந்து விவசாயிகள் நலன் காக்கும் அரசாக செயல்படுவதை இன்றைய அறிவிப்பும் நிரூபித்திருப்பதால் த.மா.கா சார்பில் தமிழக அரசுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக