வியாழன், 27 பிப்ரவரி, 2020

காற்றை விதைத்துப் ‘புயலை' அறுவடை செய்கிறது! பாஜக - கி.வீரமணி அறிக்கை


தேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்து பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்; ஆனால், தமிழ்நாட்டில்? வரலாற்றுப் பிழைகளை அடுக்கடுக்காகச் செய்து - துடைக்க முடியாத வரலாற்றுக் கறைகளை ஏற்றிக் கொள்ளா தீர்கள்! வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:



காற்றை விதைத்துப் ‘புயலை' அறுவடை செய்கிறது!

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. போன்ற மூவகை குடியுரிமைத் திருத்தச் சட்டங்களும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பை, வழமைபோல் நடத்தாமல் புதுக்கரடி ஆர்.எஸ்.எஸின் கொள்கை அஜெண்டாவை அமலாக்கும் நோக்கத்தோடு அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக நடத்தி, காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்கின்றது மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசு.

அமைதியாக இருந்த நாட்டின் நாலாபகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை, பாதிக்கப்படும் அனைவரும் ஜனநாயக வழியில் - அறப்போராட்டத்தை ஆண் - பெண் சகலரும் திரண்டு வரலாறு காணாத - வன் முறையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்!

துப்பாக்கிச் சூடு கலாச்சாரம்

இந்த கட்டுக்கோப்பைக் குலைக்க திட்டமிட்டே சில காலிகளை - தனி நபர்களை ஏவிவிட்டு கல வரங்களை - துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் (அமெரிக் காவில் இருக்கும் நோய்போல) இங்கும் பரவிடும் வேதனையான நிலை, விபரீதம் ஏற்பட்டு வருகிறது.

பல்கலைக் கழக மாணவர்களின் விடுதிக்குள் - டில்லியில் தனியார்களான குண்டர்களை முகமூடி அணிந்து அதீதமாக மாணவர்களைத் தாக்கியதற்கு சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகள் சில தொலைக்காட்சி ஊடகங்களில்கூட வெளிவந்தன.

இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?

20 உயிர்கள் பலி; ஆழ்ந்த இரங்கல்

வடகிழக்கு டில்லி பகுதியில் கடந்த மூன்று நாள்களாக வன்முறை - வெறியாட்டம் (திட்டமிடப் பட்டு தூண்டி விடப்படுகிறதோ என்று சந்தேகம் பலருக்கும் ஏற்படுகிறது) காரணமாக 150 பேருக்கு மேல் காயம்; 20 உயிர்கள் பலி என்ற கோரத்தின் தாண்டவம் காட்சியளிப்பது வேதனை; ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

இராணுவத்தை வரவழைக்கச் சொல்கிறார் டில்லி முதல்வர் கெஜ்ரிவால்; இதுதான் மத்திய ஆளுமை யின் வெளிப்படை.

டில்லியின் காவல்துறை, சட்டம் - ஒழுங்கு பொறுப்பு - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. (மாநில அரசு பங்கு என்பது வெகு வெகுக் குறைவே!)

இன்று காலை டில்லியில் உள்ள உயர்நீதிமன்றம் - காவல்துறை அதிகாரிகளை நேரில் வரவழைக்க ஆணை பிறப்பித்துள்ளது!

விசாரணை நடக்கிறது.

‘தூண்டி விடுகிறார்கள் எதிர்க்கட்சியினர்' என்பது பொறுப்பற்ற குற்றச்சாற்று. மக்களின் தன்னெழுச்சி என்பது வெளிப்படை.

பழியைத் துடைத்த பீகார் சட்டமன்றம்

ஆளும் கூட்டணியில் இடம்பெற்ற லோக் தளக் கட்சி - அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வான் கட்சி, நிதிஷ்குமாரின் பீகார் ஆட்சி, என்.பி.ஆர்.அய் எதிர்த்து, ஏற்க மறுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ‘பழி'யைத் துடைத்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில்.... சொல்ல வெட்கமாகுது; காரணம் வெளிப்பாடு.

இன்று ஒரு அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் போல, ‘‘டில்லிக்கு ஜால்ரா அடிப்பது உண்மைதான்'' என்று, பல நேரங்களில் வசதியற்ற உண்மைகளை வாய் தவறிக் கூறிடும் அமைச்சர் என்பதால், வெளிப்படையாகக் கூறுகிறார்!

எதற்கும் ஒரு எல்லை இல்லையா?

தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டிய மாநிலம்!

‘அம்மா ஆட்சி' என்பது உண்மையானால், இப்படி ‘டில்லியே சரணம்' என்று சத்துணவு திட்டத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் தருவார்களா? எதற்கும் ஒரு எல்லை இல்லையா?

தமிழ்நாடு மக்கள் தீர்ப்பளிக்கக் காத்திருக்கிறார் கள் என்ற கவலை மத்திய, தமிழக ஆட்சியாளர் களுக்கு இருக்கவேண்டாமா?

வரலாற்றுப் பிழைகளை அடுக்கடுக்காகச் செய்து, துடைக்க முடியாத வரலாற்றுக் கறைகளை ஏற்றிக் கொள்ளாதீர்கள்!

வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - மக்கள் மன்னித்தால்கூட - மறவாதீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக