திங்கள், 24 பிப்ரவரி, 2020

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். - ஜி.கே.வாசன்


காவிரி நீர் பங்கீட்டில் உரிய மாநிலங்களுக்கு உரிய தண்ணீர் காலமுறைப்படி கிடைத்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். - ஜி.கே.வாசன்


15.02.2020 அன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய நான்கு மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நீர் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டு, நீர் இருப்பு மற்றும் வரத்து குறித்த புள்ளி விவரங்கள் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் சுமார் ஓராண்டு காலத்துக்குப் பிறகு நடைபெற இருக்கிறது.

குறிப்பாக கர்நாடக அரசு காவிரியிலிருந்து ஆண்டுக்கு மொத்தம் 177.25 டி.எம்.சி நீரை தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு குறிப்பாக இந்த மாதத்திற்கும், வருகின்ற கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு காவிரி நீரைத் திறந்துவிடவும், மேகேதாட்டுவில் புதிய அணை கட்டாமல் இருக்கவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதற்குண்டான அறிவிப்பை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 25 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற கூட்டத்தில் உறுதிபட தெரிவிக்க வேண்டும். மேலும் காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கான நீரை அட்டவணைப்படி பெற தமிழக அரசின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி வலியுறுத்த வேண்டும்.

தமிழக அரசும் காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கான நீரை பெறுவதில் தொடர் நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர்ந்து செயல்பட்டு காவிரி நீர் பங்கீட்டில் முறையான, சரியான முடிவை எடுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய நீரை அம்மாநிலம் பெற்று பயன் பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக