புதன், 12 பிப்ரவரி, 2020

" SC, ST மற்றும் OBC இட ஒதுக்கீடு உரிமை எந்தக் காலத்திலும் பறிக்கப்படாது." என்ற உறுதி தர வேண்டும்


"ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் கொந்தளிப்படைந்துள்ளதால் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' - திருச்சி சிவா வேண்டுகோள் 

இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா பேசியதாவது:


அரசமைப்புச் சட்டத்தின் 16-ஆவது பிரிவு ‘அனைவரும் சமம்' என்ற உரிமையை நிலை நாட்டுகிறது. அரசமைப்புச் சட்டம் 16(4) பிரிவு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசாங்கம் காலியாக இருக்கின்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை நியமிப்பதற்கு தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களை நியமிப்பதற்கு அதிகாரம் இருப்பதை உறுதி செய்கிறது.

பின்னர், 77ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் 16(4)(ஏ) பிரிவு சேர்க்கப்பட்டு இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்தின் கூறுகளில் ஒன்று என்பதை உறுதி செய்கிறது.

இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்திய ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு!

1975- இல் தாமஸ் எதிர் கேரள அரசின் வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு உரிமை உண்டு என்பதை உறுதிப் படுத்தியது.

ஆனால், நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம், மாநிலங்களைக் கட்டாயப் படுத்த முடியாது என்று இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தீர்ப் பளித்துள்ளது. ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பினை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு எப்படி மாற்றியது என்பது புரியவில்லை.

மறுசீராய்வு மனுதாக்கல் செய்க!

இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டது தொடர்பாக, ஒடுக்கப்பட்டவர்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகியுள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை எந்தக் காலத்திலும் பறிக்கப்படாது என்ற உறுதியினைத் தந்திடுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக