புதன், 12 பிப்ரவரி, 2020

ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பையும் மீறி புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பையும் மீறி புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இஸ்லாமியர்களை மத ரீதியாக தனிமைப்படுத்தும் நோக்கில் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்தனர்.

இதையடுத்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் நாராயணசாமி, இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளார். புதுச்சேரியிலும் ஒன்றரை லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டத்தை ஏற்க மாட்டோம். அரசை நீக்க வேண்டும் என்று நினைத்தால் அதை செய்து கொள்ளட்டும் என்பதை பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து புதுவை சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஏற்கனவே கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக