வியாழன், 13 பிப்ரவரி, 2020

டெல்லி தேர்தல்: பாசிசத்திற்கு எதிரான மக்களின் வெற்றி - SDPI



செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது:

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கின்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த வெற்றியை வெறுப்பு அரசியல் மற்றும் பாசிசத்துக்கு எதிரான மக்களின் வெற்றியாகவே பார்க்க வேண்டும். ஏனெனில், மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதல், நாடு முழுவதும் வெறுப்பு பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வருகின்றன.



 உள்ளூர் தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரை பாஜகவின் பிரச்சார யுக்திகளில் வெறுப்பு பிரச்சாரம் ஒரு அங்கமாக இருந்து வருகின்றது. ஆனால், வளர்ச்சியின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜகவின் தொடர் பாசிச போக்கை மக்கள் புறந்தள்ளி வருவது, கடந்த ஓராண்டில் நடந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ராஜஸ்தான், ம.பி., சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தொடங்கி தற்போது டெல்லியிலும் மக்கள் தோல்வியை அளித்துள்ளனர். சிஏஏ போராட்டத்தை தீவிரவாத போராட்டமாக சித்தரித்த பாஜகவின் பிரச்சாரத்திற்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவை குறிவைத்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கட்சித் தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாக்குதலின் பின்னணி குறித்து கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுகொள்கின்றோம்.

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:

அரசமைப்பு சட்டவிரோத சி.ஏ.ஏ. என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கேரளா, மே.வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இன்னும் இந்த சட்டம் நிறைவேறக் காரணமான பல மாநிலக் கட்சிகளும் அந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளன. சிஏஏவுக்கு பாராளுமன்றத்தில் ஆதரித்த மாநில கட்சிகள் கூட மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து தங்கள் மாநிலங்களில் இதனை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்துள்ளன. ஆனால் தமிழக அரசு மக்களின் கோரிக்கைக்கு இன்னும் செவிசாய்க்கவில்லை.

சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவற்றை பிரித்துப் பார்ப்பது கூடாது. ஆகவே, தமிழக அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி. சட்டங்களுக்கு எதிராக சட்டமன்ற தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் இத்தகைய குடியுரிமை தொடர்புடைய கருப்புச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் அடக்குமுறைகளை தாண்டியும் நடைபெற்று வருகின்றது. டெல்லியிலும், உ.பியிலும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை வன்முறை ஏவப்படுகின்றது. ஜாமியா மாணவர்கள் மீது மிருகத்தனமான வன்முறைகள் ஏவப்படுகின்றன. பெண்கள் மீது மிகமோசமான பாலியல் ரீதியான தாக்குதல்கள் ஏவப்படுகின்றன.

பாஜக அரசின் இத்தகைய வெறுப்பு நடவடிக்கைகள் காரணமாகத் தான் டெல்லி மாநில தேர்தலில் மிகப்பெரும் தோல்வியை மக்கள் அளித்துள்ளார்கள். கருப்புச் சட்டங்களை திரும்பப்பெறாமல் வன்முறையை ஏவும் பட்சத்தில் பாஜகவுக்கு மக்கள் இன்னும் பலத்த அடியை வழங்குவார்கள். ஆகவே, நாட்டின் வளர்ச்சியை கைவிட்டு மக்களை மதரீதியாக பிரிக்கும் சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி. சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோல் உச்சநீதிமன்றம் நாட்டில் பெரும் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள அரசமைப்பு விரோத சி.ஏ.ஏ. சட்டத்தை ரத்து செய்து நாட்டின் அமைதியையும், ஜனநாயகத்தை காக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுகொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக