செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

“மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது'' -ஆ. இராசா ஆவேசம்


“மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது'' 
- நாடாளுமன்றதில் ஆ. இராசா ஆவேசம்

நாடாளுமன்ற மக்களவையில் திமுக கொறடா ஆ. இராசா ஆவேசத்துடன் ஆற்றிய உரை வருமாறு :


மாண்புமிகு சபாநாயகர் அவர்களே! ஆளும் கட்சி உறுப்பினர்கள் எங்கள் கருத்தைப் பொறுமையுடன் கேட்க வேண்டும். இந்த அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று நாங்கள் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

உத்தரகாண்டில் நடைபெற்று வரும் ஆட்சிக்கும் இங்கு நடைபெற்று வரும் மத்திய ஆட்சிக்கும், இரண்டும் பா.ஜ.க.வின் ஆட்சி என்பதால் ஒரே கருத்தையே கொண்டுள்ளன. இரண்டு ஆட்சியின் அரசியல் கொள்கைகளும் ஒன்றேதான்.

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞரின் எதிரான வாதம்!

உச்சநீதிமன்றத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்குரைஞர் தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோர் உள்பட பிற்படுத்தப்பட்டோருக்கும் அளிக்கப்படும் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையோ, அரசமைப்புச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட உரிமையோ அல்ல என்று திட்ட வட்டமாக வாதிட்டுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 16 (4) மற்றும் 16(4ஏ) பிரிவுகள்தான் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் உள்பட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அடிப்படைச் சட்ட விதிகளாகும்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற பி.கே.பவித்ரா வழக்கில் இந்தப் பிரச் சினை தீர்த்துவைக்கப்பட்டுவிட்டது. மிகப்பெரிய அமர்வின் முன் நடைபெற்ற அந்த வழக்கில் இட ஒதுக்கீட்டுக்காக கணக்கெடுக்க மாநிலத்திற்குச் செல்ல வேண்டாம். ஆய்வு நடத்த வேண்டாம். பிறப்பின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு பெறுவதற்கான உரிமை பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு உள்ளது என்று அந்த பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு புதிய தீர்ப்பு செயலுக்கு வந்துள்ளது. 

உங்கள் மூலமாக இந்த அரசைக் கேட்டுக்கொள்வது இந்த அரசுக்கு உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, மலைவாழ்மக்கள் மீது அக்கறை இருக்குமானால், இரண்டு காரியங்களை உடனடியாக செய்யவேண்டும்.

1. உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்ய மனு போடவேண்டும்.

2. தேவைப்பட்டால் அரசமைப்புச்சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து அதனை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் இருக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் வைத்து இடஒதுக்கீட்டு முறையை பாதுகாத்திட வேண்டும்.

அதை செய்யாத வரை உங்கள் அரசு இந்த மக்கள்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். எனவே அதனை செய்திட முன்வர வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக