வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

வளர்ச்சி அல்ல அதிர்ச்சி அளிக்கும் பட்ஜெட் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்து


வளர்ச்சி அல்ல அதிர்ச்சி அளிக்கும் பட்ஜெட்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்து

தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் வளர்ச்சிக்கு வழிவகுக்காது. மாறாக கடன் சுமையைத்தான் அதிகரிக்கும். இது அடித்தட்டு மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிற பட்ஜெட் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த ஆண்டுக்கான பற்றாக்குறையை சமாளிக்க சுமார் 60,000 கோடி புதிய கடன்களை பெறப் போவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. அதன் மூலம் தமிழக அரசின் கடன் நாலரை லட்சம் கோடியைத் தாண்டும் என்று தெரிகிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதால் கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படும், சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்படும், டெல்டா மாவட்டங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் என்றெல்லாம் ஊகங்களை ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. ஆனால் இந்த பட்ஜெட் அறிவிப்புகளில் அப்படி எந்தவொரு கவர்ச்சியும் இல்லை.

மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய சுமார் 7 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி பாக்கியை வலியுறுத்திக் கேட்டுப்பெற இயலாத தமிழக அரசு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு வலித்து விடாமல் மென்மையான வார்த்தைகளில் அதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய சிறப்புக்கூறுகள் திட்ட நிதி முறையாக இந்த ஆண்டும் ஒதுக்கப்படவில்லை . ஆதிதிராவிட மாணவர்களின் உயர்கல்வி கனவைக் கருகச்செய்யும் விதமாக, போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்கன நிதியை கணிசமாகத் தமிழக அரசு குறைத்துள்ளது. இந்த ஆண்டும் அது உயர்த்தப்படவில்லை.

பள்ளிக்கல்வித் துறையின் தெளிவற்ற நடைமுறை காரணமாக ஏற்கனவே உயர்நிலை வகுப்புகளில் இடைநிறுத்தம் அதிகரித்துள்ளது அதை சரி செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது திண்டிவனத்தில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதியளித்தார். அது தேர்தல் காலப் பொய் என்பதை இந்த பட்ஜெட் நிரூபித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் இது மத்திய அரசின் பட்ஜெட்டைப்போலவே வளர்ச்சிக்கோ, வேலை வாய்ப்புக்கோ வழிவகுக்காத பட்ஜெட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக