வியாழன், 20 பிப்ரவரி, 2020

ரப்பர் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். - ஜி.கே.வாசன்


ரப்பர் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் கீரிப்பாறை, காளிகேசம், மணலோடை, குற்றியார், சிற்றார் உள்பட 9 இடங்களில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. மேலும் 2 இடங்களில் அரசு ரப்பர் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.


அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் இணைந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக வனத்துறை அமைச்சகத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் நாள் ஒன்றுக்கு ரூ. 40 தரலாம் என ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனையும் வழங்குவதற்கு அரசு ரப்பர் கழக நிர்வாகம் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே இது தொடர்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொழிற்சங்கத்தினர் முடிவு செய்து கடந்த 2 நாட்களாக தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு நாளைக்கு மட்டும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பீடு ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.

இந்நிலை நீடித்தால் ரப்பர் தொழிலில் ஈடுபடும் நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்திற்கும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும். மேலும் ரப்பர் தொழில் மூலம் நாள்தோறும் கிடைக்கக்கூடிய வருவாயும் கிடைக்காமல் இழப்பு ஏற்படும்.

எனவே இனிமேலும் வேலை நிறுத்தம் தொடராமல் இருக்க தமிழக அரசு உடனடியாக ரப்பர் கழக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக