புதன், 19 பிப்ரவரி, 2020

பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூல் செய்யும் போது குளறுபடிகள் ஏற்படக்கூடாது. - ஜி.கே.வாசன்


மத்திய அரசு – காலாவதியான சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூல் செய்யாமல் இருக்கவும், பாஸ்டேக் முறையில் உள்ள குளறுபடிகளை நீக்கவும், சுங்கக்கட்டணமாக வசூல் செய்யும் பணத்தை சாலையின் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தவும், வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கவும் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம், ஊழியர்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பான போக்குவரத்துக்கும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.

குறிப்பாக 15 ஆண்டுகள் கடந்த சுங்கச்சாவடிகளை, காலாவதியான சுங்கச்சாவடிகளை கடக்கும் போது சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும், பாஸ்டேக் முறையில் வசூல் செய்யும் போது குளறுபடிகள் ஏற்படுவதாகவும், அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கு ஒரு கட்டணம் என்றால் அது இல்லாதோரிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில் வேறுபாடு இருப்பதாகவும், கட்டண சலுகைகளில் மாற்றம் இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இப்படி சுங்கச் சாவடிகளில் சுங்கக்கடணம் வசூல் செய்வதில் பிரச்சனைகள் எழுவதற்கு காரனம் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை, பாஸ்டேக்கில் குளறுபடி, மென்பொருள் பிரச்சனை என்றெல்லாம் கூறினால் அதனால் வாகன ஓட்டிகளுக்குத் தான் சிரமம் ஏற்படுகிறது.

மேலும் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகன ஓட்டிகள் சந்திக்கும் வீண் பிரச்சனையால் காலநேரம் விரயமாகிறது, பயணிகளின் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது, அவசரகாலப் பயணமும் தடைபடுகிறது. தேவையில்லாமல் அதிகப்படியான எண்ணிக்கையில் சுங்கச் சாவடிகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் மொழி தெரியாத ஊழியர்களால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு சரியான பதில் கிடைக்காமல் வீண் வாதம் எழுகிறது.

இந்நிலையில் காலாவதியான சுங்கச்சாவடிகளில் இனிமேல் கண்டிப்பாக சுங்கக்கட்டணம் வசூல் செய்யக்கூடாது; பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூல் செய்யும் போது குளறுபடிகள் ஏற்படக்கூடாது, ஒரு குறிப்பிட்ட பயணத்திற்கு ஒரு சுங்கச் சாவடியில் வசூல் செய்யப்படும் கட்டணம் வேறொரு சுங்கச் சாவடியில் அதிகமாக இருக்கக் கூடாது.

மேலும் சுங்கக்கட்டணமாக வசூல் செய்யும் பணத்தை விதிப்படி சாலையின் தரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்த வேண்டும். எனவே சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கும் சுங்கச் சாவடிகளால் ஏற்படும் பிரச்சனைகள் இனியும் தொடராமல் இருக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக