சனி, 22 பிப்ரவரி, 2020

திரைத்துறை ஊழியர்களின் நலனை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் -CPIM


திரைத்துறை ஊழியர்களின் நலனை பாதுகாக்க
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னைக்கு அருகில் உள்ள நசரத்பேட்டையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தியன் 2, சினிமா தயாரிப்பு நடவடிக்கையின் போது மூன்று ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார்கள். சிலர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தோர் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அதேபோல காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தரமான சிகிச்சையும், நிவாரணமும் வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

பல படபிடிப்புத் தளங்களில் இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள், மருத்துவ சிகிச்சை, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றில் போதிய அக்கறை காட்டப்படாத நிலை நீடித்து வருகிறது. சினிமா படபிடிப்பு உரிய காலத்தில் நடைபெற வேண்டும் என்ற நோக்கோடு அவசர அவசரமாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை வழங்கப்படாமல் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படுவதாக பரவலாக தகவல்கள் வருகின்றன. இதேபோன்று படபிடிப்பு ஊழியர்களுக்கு சொற்ப சம்பளமும், அந்த சம்பளமும் கூட உரிய காலத்தில் வழங்கப்படாத நிலையும் இருக்கிறது. பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீடும், நட்சத்திர நடிகர்களுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளமும் வழங்கும் திரைப்பட தயாரிப்புகளில் கூட சாதாரண ஊழியர்களுக்கு உரிய சம்பளமும், குறித்த காலத்தில் சம்பளத்தை வழங்காத நிலையும் நீடிக்கிறது.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழக அரசு திரைத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு, சம்பளம், விபத்து தடுப்பு, நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் உரிய தீர்வு காண ஒரு உயர்மட்டக்குழுவை அமைத்து இத்தகைய பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக