வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு ஆன்மாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்


இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு ஆன்மாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும் - நெல்லை முபாரக்



அரசு வேலைவாய்ப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோர எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு உரிமையை மறுத்துப் பறிப்பதுடன் இந்திய அரசியலமைப்பு ஆன்மாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். இது அரசுவேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை மறுப்பதாகும். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு அரசு வேலைகளில் போதிய பிரதிநிதித்துவம் உறுதிசெய்வது ஒவ்வொரு அரசின் கட்டாயக் கடமையாகும். துரதிஷ்டவசமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுகள் பிற்பட்டோரின் இட ஒதுக்கீட்டை மறுப்பதற்குத் துணைப்போகிறது. ஜனநாயத்தை நிலைநாட்டும் கடைசி நம்பிக்கையும், புகலிடமுமான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகத்தவறான நடைமுறையாகும். அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின்படி வரலாற்றில் பலவீனமான பிரிவினரின் இட ஒதுக்கீட்டு உரிமையை எவரும் மறுக்க இயலாது.

எஸ்.சி. எஸ்.டி. மற்றும் ஓபிசி வகுப்பினரின் இட ஒதுக்கீடு உரிமையைப் பறிக்க தொடர்ந்து நடந்துவரும் முயற்சிகளுக்கும், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை உயர்ந்த அரசு பதவிகளில் அமரவிடக்கூடாது என்ற சூழ்ச்சிகளுக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு துணைபோயுள்ளது என்பது இட ஒதுக்கீட்டுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகமாகும். ஆகவே, மத்திய அரசு இடஒதுக்கீட்டை பாதுகாக்க வலிமையான சட்டப்போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக