வியாழன், 13 பிப்ரவரி, 2020

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது - நெல்லை முபாரக்


தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது - நெல்லை முபாரக்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை மீத்தேன், ஹட்ரோ கார்பன் திட்டங்களின் மூலம் மத்திய அரசு தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருக்கிறது. வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நாசக்கார திட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மீத்தேண் திட்ட எதிர்ப்புக் குழு, பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். அதோடு டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.


இந்நிலையில், ‘காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதுதொடர்பாக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகள் படும் துயரத்தை கவனத்தில் கொண்டு இதை நான் அறிவிக்கிறேன். காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வராது.’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. முதல்வரின் அறிவிப்பிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். அதோடு, இது வெறும் அறிவிப்பாக மட்டும் நின்றுவிடாமல், தமிழக முதல்வர் அறிவித்தபடி சிறப்பு சட்டம் கொண்டுவர தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அதற்கான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

அதுமட்டுமின்றி, இயற்கையை, சுற்றுச்சூழலை, மக்கள் நலனை பாதிக்கக் கூடிய எந்த அழிவுத்திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தாமல் மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து அத்தகைய திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக