வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

மத்தியில் ஆட்சி பொறுப்பிற்கு பிஜேபி வந்த நாள் முதலாய், விலைவாசி உயர்வு என்பது அன்றாட செய்தியாகி வருகிறது. - CPIM


மானியமில்லாத சமையல் எரிவாயு உருளை 
விலை உயர்வை திரும்ப பெறுக 
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மத்தியில் ஆட்சி பொறுப்பிற்கு பிஜேபி வந்த நாள் முதலாய், விலைவாசி உயர்வு என்பது அன்றாட செய்தியாகி வருகிறது.


இந்நிலையில் மானியமில்லாத சமையல் எரிவாயு உருளை விலை (14.2 கிலோ) 12.02.2020 முதல் ரூ. 147/- உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் எரிவாயு உருளை ரூ. 734/-லிருந்து ரூ. 147/- உயர்த்தி தற்போதைய விலை ரூ. 881/-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆகஸ்ட் 19 முதல் தொடர்ந்து 6வது முறையாக எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. புத்தாண்டு பரிசாக 2020 ஜனவரியில் (1ம் தேதி) எரிவாயு உருளை ரூ.19 உயர்த்தப்பட்டது.

சமீபத்திய மத்திய அரசின் பட்ஜெட்டில், சாதாரண மக்களின் வாழ்வாதாரம் சார்ந்து எவ்வித திட்டமோ, சலுகைகளோ அறிவிக்காமல் வார்த்தை ஜாலங்களுடன் நீண்ட உரை நிகழ்த்தி- நெடிய துயரத்தை நாட்டு மக்கள் எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்திற்குண்டான வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை நிர்ணயம் குறித்து இதுவரை எந்த விதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில் திடீரென்று ரூ. 147/- விலை உயர்வு என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும், கோப அதிர்வுகளையும் உருவாக்கியுள்ளது.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையின் விளைவாகவும், பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை அள்ளி தருவதின் காரணமாக, சாதாரண மக்களின் மீது வரிச்சுமைகளை ஏற்றி வாட்டி வதைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசை கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக