வியாழன், 13 பிப்ரவரி, 2020

மத்திய அமைச்சர்களை டெல்லியில் சந்தித்து அமைச்சர் ஜெயகுமார் அளித்துள்ள ’ரகசிய கடிதம்’ காவிரி டெல்டா தொடர்பானதா ? - மு.க.ஸ்டாலின் கேள்வி


”மத்திய அமைச்சர்களை டெல்லியில் சந்தித்து அமைச்சர் ஜெயகுமார் அளித்துள்ள ’ரகசிய கடிதம்’ காவிரி டெல்டா தொடர்பானதா அல்லது அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பானதா?” -மு.க.ஸ்டாலின் கேள்வி.

இன்று காலை பத்திரிகையில் ஒரு வேடிக்கையான செய்தி பார்த்தேன். அதைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை. அது என்னவென்றால் என்னைப்போல் எல்லோரும் பணியாற்றினால் போதும் என அவரது கட்சித் தோழர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை சொல்லி இருக்கிறார். நாட்டில் நடக்கும் ஊழல்கள் அனைத்திற்கும் காரணமான அவரைப் போல பணியாற்ற வேண்டுமா? நாட்டில் எங்கு பார்த்தாலும் நடக்கும் அக்கிரமங்களுக்கு அடிகோலும் அவரைப் போலவா? தன்னை விவசாயி எனக் கூறிக் கொண்டு சென்னை - சேலம் 8 வழிச் சாலை போடுவதாக சொல்லி அங்குள்ள மக்களை, விவசாயிகளைத் துன்புறுத்துகிறாரே! அதனால்தான் அவரைப்போல் நடக்க வேண்டும் எனக் கூறுகிறாரா? அதுமாதிரி நடந்தால் இந்த நாடு குட்டிச் சுவராகப் போய்விடும். அதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.


2 நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறார். இது யாரை ஏமாற்றுவதற்கு? டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக விவசாயிகளும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். திமுக மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளும் அதற்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அதை யாரும் மறுக்கவில்லை. வரவேற்கிறோம். அதை வேளாண் மண்டலமாக ஆக்கினால் விவசாயப் பெருங்குடி மக்கள் பலன் அடைவார்கள். இன்று பல கொடுமையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதை முதலமைச்சர் அறிவிக்கும்போது என்ன நிலை? இதை யார் அறிவிக்க வேண்டும்? மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும். இந்த சராசரி அறிவுகூட முதலமைச்சருக்கு இல்லை என்பதுதான் நமக்கு இருக்கும் கவலை. இங்கிருப்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாராட்டு விழா நடத்த தொடங்கி உள்ளனர். இது அரசிதழில் முறையாக பதிவாக வேண்டும். மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டும். மத்திய அரசுதான் இதற்கு நிதியைத் தருகிறது. ஏற்கனவே 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கிணறுகள் தோண்டி அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதை மூடிவிட்டீர்களா? அதை மூடிய பிறகுதான், எந்த அனுமதியும் கிடையாது என உத்தரவு பிறப்பித்த பின்னர்தான் முதலமைச்சரின் அறிவிப்பை நிறைவேற்ற முடியும். அதை மத்திய அரசுதான் நிறைவேற்ற வேண்டும். அதை முதலமைச்சரால் சொல்ல முடியவில்லை.

நேற்றுக்கூட நமது திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு இதுகுறித்து கேள்வி எழுப்பினார். மாநில முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த அறிவிப்புக்கு மத்திய அரசு என்ன சொல்கிறது என்று விளக்கம் கேட்டார். மாநிலங்களவையிலும் திருச்சி சிவா அவர்கள் இந்தப் பிரச்சனை குறித்து கேட்டுள்ளார். அதற்கு எந்தப் பதிலையும் மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசு இதற்கு என்ன சொல்கிறது என்ற விளக்கமும் இல்லை.

இதனிடையே, முந்திரிக்கொட்டை அமைச்சர் ஜெயக்குமாரை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். டெல்லியில் அமைச்சர்களைச் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அது ரகசிய கடிதம் என்கிறார்கள். என்ன கடிதம் அது. இது சம்பந்தமான கடிதமா? அல்லது ஏற்கனவே வழக்கில் சிக்கித் தவிக்கிறீர்களே அது சம்பந்தமான கடிதமா? எனத் தெரியவில்லை. அதையாவது வெளியிட வேண்டும்.

நாளை மறுநாள் சட்டமன்றம் கூடப்போகிறது. பட்ஜெட் கூட்டத் தொடர். அந்தக் கூட்டத்தில் நாங்கள் சும்மா விடப் போவதில்லை. இந்தப் பிச்சனையை எழுப்பத்தான் போகிறோம். அதற்கு விளக்கத்தை அவர்கள் சொல்லித்தான் ஆகவேண்டும். டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற காரணத்தினாலும், நாடாளுமன்றத்தில் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்த காரணத்தினாலும், தேர்தலை எதிர்நோக்கி இருப்பதாலும் அங்கிருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டு ஒரு நாடகத்தை இன்றைக்கு அவர்கள் அரங்கேற்றி இருக்கிறார்கள். உள்ளபடியே கொண்டுவந்தால் அதை வரவேற்க காத்திருக்கிறோம்.

நீட்தேர்விற்கும் அப்படித்தான் சொன்னார்கள். நீட் வராது என அதிமுகவின் பொதுக்குழுவிலேயே தீர்மானம் இயற்றினார்கள். அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் போட்டு அனுப்பி வைத்திருக்கிறோம். தொடர்ந்து அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் என்ன ஆனது? நீட் தேர்வு வந்துவிட்டது. எனவே மத்திய அரசு அதை சொல்ல வேண்டும். மத்திய அரசிடம் சென்று முறையிடுவதற்கு, வலியுறுத்துவதற்கு இவர்கள் தயாராக இல்லை. எனவே, சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசு. அதை மத்திய அரசிடம் வலியுறுத்திச் சொல்வதற்கு இங்கிருக்கும் முதலமைச்சருக்கோ, இந்த ஆட்சிக்கோ அருகதை கிடையாது.

ஏன் என்றால், மத்திய பாஜக அரசிடம் மண்டியிடும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அடிமை ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே இந்த, ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை விரைவில் வர இருக்கிறது. அப்படி வரும் நேரத்தில் நீங்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சிறப்பான வகையில் ஆதரவைத் தரவேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக