வியாழன், 13 பிப்ரவரி, 2020

இடஒதுக்கீட்டிற்கான அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகளையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. - தி.வேல்முருகன்


உத்தராகண்ட் பாஜக அரசின் வாதத்தை ஏற்று இடஒதுக்கீடு தேவையில்லை என உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு! இதையே அனைத்து மாநிலங்களிலும் திணிக்கும் ஆபத்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதுடன், ஒன்றிய அரசு உடனடியாக இதை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 16 (4) மற்றும் 16(4ஏ) பிரிவுகள் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் உள்பட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அடிப்படைச் சட்டவிதிகளாகும். அப்படியிருக்க, உச்ச நீதிமன்றத்தில் உத்தராகண்ட் மாநில பாஜக அரசின் வழக்குரைஞர், இந்த இடஒதுக்கீடு அடிப்படை உரிமையோ, அரசமைப்புச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட உரிமையோ அல்ல என்று திட்டவட்டமாக வாதிட்டுள்ளார். இந்தத் தவறான வாதத்தினையும் ஏற்று, ‘இடஒதுக்கீடு தேவையில்லை’ எனத் தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு.

இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசு உடனடியாக இந்தத் தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மக்களவையில் ஆ.ராசாவும் மாநிலங்களவையில் திருச்சி சிவாவும் வலியுறுத்தியுள்ளனர். அதேசமயம் அதிமுக உறுப்பினர்கள் யாரும் இதுவரை இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பேசியதாகத் தெரியவில்லை; அவர்களும் இந்தத் தீர்ப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இடஒதுக்கீட்டிற்கான அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகளையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது இந்தத் தீர்ப்பு. இதையே சாக்காக வைத்து ஒன்றிய பாஜக அரசு இடஒதுக்கீட்டையே காலி செய்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.

ஏனென்றால் இடஒதுக்கீட்டிற்கே எதிரான கட்சி பாஜக; காரணம், ‘மனுஅதர்ம வர்ணாசிரம சனாதனமே’ அதன் அடிப்படைக் கொள்கையாகும். எனவே உத்தராகண்ட் பாஜக அரசின் வாதத்தை ஏற்று இடஒதுக்கீடு தேவையில்லை என்ற உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வுத் தீர்ப்பினை அனைத்து மாநிலங்களிலும் திணிக்கும் ஆபத்திருப்பதை மறுக்க முடியாது.

ஆகவேதான் இந்த ஆபத்தினை வன்மையாகக் கண்டிப்பதுடன், ஒன்றிய அரசு உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும்படிக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக