ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

சென்னையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதல்


சென்னையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதல் 

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை

இன்று வடசென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்கள்மீது காவல்துறை கொடூரமான கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கிறேன்.

தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் சாஹின் பாக் பாணியில் 167 இடங்களில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக தலைநகர் சென்னை மற்றும் மதுரை உட்பட சில நகரங்களில் இத்தொடர் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து வருகின்றது. இச்சூழலில் சென்னையில் சில நாட்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டம் நடத்த பெண்கள் முயற்சித்த போது வேறு இடத்தில் தொடர் போராட்டம் நடத்த அனுமதிப்பதாக சொன்ன காவல்துறை தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

இச்சூழலில் இன்று வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை இன்று கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க நேரடியாக அங்கு சென்ற தலைவர்களும் கைதுச்  செய்யப்பட்டிருப்பதும் வன்மையாக கண்டிக்கதக்கது.

முஸ்லிம்கள் மீது காட்டுமிரண்டித்தனமான தாக்குதலை நடத்தி காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.  கைதுச் செய்யப்பட்ட தலைவர்கள் உட்பட அனைவரையும் உடனடியாக விடுதலைச் செய்ய கோருகிறேன்.

என்பிஆர், என்ஆர்சி மற்றும் சிஏஏ ஆகிய கறுப்பு  திட்டங்களை திரும்ப பெறும் வரையில்  தமிழகத்தில் தொடர் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக