புதன், 12 பிப்ரவரி, 2020

எஸ்சி/எஸ்டி மாணவர்களின் கல்வி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. - தொல்.திருமாவளவன் மனு


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் இராம் விலாஸ் பஸ்வான் அவர்களிடம் அளித்த கோரிக்கை மனு:


கடந்த 30 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வந்த வரலாற்று சிறப்புமிக்க பட்டியலினத்தவருக்கான துணைத் திட்டம்(SCSP) மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம்(TSP) திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இதனால் எஸ்சி/எஸ்டி மக்கள் நலன்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் குறையும். நடப்பு நிதிநிலை அறிக்கையில் கூட இந்த அரசு, குறிப்பாக எஸ்சி/எஸ்டி மாணவர்களின் கல்வி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. எனவே, நிதிஆயோக்கின் (NITIAYOG) கீழ் பட்டியலினத்தவருக்கான துணைத் திட்டம்(SCSP) மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டத்திற்கான (TSP) சட்டப்பாதுகாப்பை ஏற்படுத்திட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அம்பேத்கர் நவோதயா பள்ளிகளை உருவாக்கிட வேண்டும்:

தலித் குழந்தைகளுக்கு தரமான கல்வி தேவை. தற்போது இவர்கள் மிகவும் புறந்தள்ளப்பட்ட அரசு பள்ளிகள் அல்லது நலப் பள்ளிகளில் பயிலுகிறார்கள். இது இவர்களின் உயர்கல்வி கனவுகளை சிதைக்கிறது. எனவே, தலித்துகள் பெருமளவில் வாழும் மாவட்டங்களில் நவோதயா வித்யாலயா போன்ற சிறப்புப் பள்ளிகளை நிறுவிட வேண்டும்.

இடஒதுக்கீட்டைப் பாதுகாத்திட சட்டம் இயற்றுக:

கடந்த 08.02.2020 அன்று உச்சநீதிமன்ற இரு நீதிபதி அமர்வு, முகேஷ்குமார் & மற்றொருவருக்கும் உத்தரகண்ட் அரசுக்குமான சிஏ.எண்: 1226 / 2020 மேல்முறையீட்டு வழக்கில் அதிரச்சிகரமான தீர்ப்பை வழங்கியுள்ளது. “மாநில அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை” அதோடு “அரசு பணிகளில் எஸ்சி எஸ்டிக்கான பிரதிநிதித்துவம் இல்லை என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால்கூட மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்க உத்திரவிடக்கூடிய எந்த ஆணையையும் நீதிமன்றம் வழங்காது”என்று சொல்லியிருக்கிறது. ஐந்து நீதிபதி அமர்வு 26.09.2018ல் ஜர்மாயில் சிங்குக்கும் லட்சுமி நாராயன் குப்தாவுக்குமான வழக்கிலும், 10.05.2019ல் இருநீதிபதி அமர்வு பி.கே.பவித்ரா வழக்கிலும் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு முரணானது இந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்வதாடு நடப்பு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலேயே இட ஒதுக்கீட்டை பாதுகாக்கக் கூடிய உரிய சட்டத்தை இயற்ற வேண்டும். இயற்றப்படும் இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்.

நீதித்துறை நியமனங்களில் உரிய பிரதிநிதித்துவம்:

உயர் நீதித்துறைக்கான நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். தற்போதைய கொல்லீஜ்ஜியம் முறை பலனளிக்கவில்லை. நீதித்துறையின் உயரிய பதவிகளில் எஸ்சி/எஸ்டி மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக