வியாழன், 2 ஜனவரி, 2020

நெல்லை கண்ணன் அவர்களை உடனடியாக விடுதலை செய்க தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு வலியுறுத்தல்

தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்களை உடனடியாக விடுதலை செய்க - தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு வலியுறுத்தல்

சிறந்த தமிழ் இலக்கியவாதியும், நாடறிந்த சிறந்த பேச்சாளருமான தமிழ் கடல் என்ற அழைக்கப்படுகின்ற நெல்லை கண்ணன் அவர்கள் தமிழுக்காக பல்வேறு சேவைகளை தொடர்ந்து ஆற்றி வரக்கூடியவர். அவரின் தமிழ் சேவைக்காகவே அவர் தமிழ் கடல் என்று அழைக்கப்படுகின்றார்.

இந்நிலையில் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி. உள்ளிட்ட நடவடிக்கைக்களுக்கு எதிராக,நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில்  கடந்த டிச.29, 2019 அன்று,  எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக  தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிலையில், நெல்லை கண்ணன் அவர்கள் வன்முறையை தூண்டிவிட்டதாக பாஜகவினர் திட்டமிட்டு, நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சின் கருத்தை தவறாக சித்தரித்து, அவருக்கு எதிராக  செய்திகளை பரப்பி, அவர் மீது புகார் அளித்ததன் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு அவரை கைது செய்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி. உள்ளிட்ட நடவடிக்கைக்களுக்கு எதிராக தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய உரையானது மக்கள் விரோத பாஜக அரசின் செயல்பாடுகளை தேச நலன் மீதான அக்கறையோடு சுட்டிக்காட்டுவதாகவே அமைந்திருந்தது. அவரது உரையில் பாஜக ஆட்சியின் மோசமான செயல்பாடுகளின் மீதான விரக்தியும், அறச்சீற்றமும் வெளிப்பட்டதே தவிர, அதில் உள்நோக்கம் என்பது கடுகளவும் கிடையாது என்பதை அவரது பேச்சின் மூலம் அறிய முடியும்.

ஆனால், மக்களை பிளவுப்படுத்தும் வகையில் வன்முறையை தூண்டும் கொலைவெறிப் பேச்சுக்களை பேசுவதையே வழக்கமாக கொண்ட பாஜக உள்ளிட்ட இத்துத்துவா அமைப்புக்கள், தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்களின் உரையை தேச விரோத கண்ணோட்டத்துடன் குறைகூறுவது விந்தையானது. 

இத்தகையவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து, உடல் நலம் குன்றியவர் என்ற நிலையிலும், பாஜகவின் அழுத்தம் காரணமாக கைது செய்துள்ளது. தமிழக காவல்துறையின் இந்த கைது நடவடிக்கையை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

மோசமான மக்கள் விரோத செயல்பாட்டின் காரணமாக நாட்டு மக்களின் பெருங்கோபத்திற்கு மத்திய பாஜக அரசு ஆளாகியுள்ள நிலையில், அதனை திசைதிருப்பும் நோக்கத்தில், நெல்லை கண்ணன் அவர்களுக்கு எதிராக பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் களமிறங்கியுள்ளன.

உள்நோக்கத்துடன் வன்முறை மேடைப் பேச்சுக்களை பேசிவரும் பாஜகவின் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தை அவதூறாக பேசிய போதும், கவிஞர் வைரமுத்து தலையை, நாக்கை வெட்ட வேண்டும் என தூண்டிவிட்ட போதும், மாணவர்கள் மீது குண்டு வீசுவோம் என மிரட்டிய போதும், பாஜகவின் நயினார் நாகேந்திரன் கவிஞர் வைரமுத்து தலைக்கு விலை பேசிய போதும், அதற்லு எதிராக தமிழகம் முழுவதும் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளாத தமிழக காவல்துறை, மத்தியில் ஆட்சி அதிகாரம் கொண்டவர்கள் என்பதற்காக  பாஜகவின் புகாரின் பேரில் நெல்லை கண்ணன் அவர்களை கைது செய்திருப்பதை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

வன்முறையை நாங்கள் எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை. ஆனால், வன்முறையை நோக்கமாக கொள்ளாமல், எவ்வித உள்நோக்கமும் இல்லாமல், மோசமான ஆட்சியின் மீதான விரக்தியின் வெளிப்பாடாக அமைந்திருந்த பேச்சுக்கு மோசமாக உள்நோக்கம் கற்பித்து, போராட்டத்தை தூண்டுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆகவே, உடனடியாக நெல்லை கண்ணன் அவர்கள் மீதான வழக்கை தமிழக காவல்துறை வாபஸ் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும்  என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். வழக்குகளை வாபஸ் பெற்று விடுதலை செய்யாவிட்டால் நெல்லை கண்ணன் அவர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்தெழும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நெல்லை கண்ணன் அவர்களுடைய பேச்சின் கருத்தை திசைதிருப்பி, தேவையற்ற போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம், தமிழகத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை திசைதிருப்பி விடலாம் என்று பாஜக நம்புமென்றால், நிச்சயமாக அது ஏமாந்துவிடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக