வெள்ளி, 3 ஜனவரி, 2020

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மத்தியஅரசு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன் 


மத்திய அரசு நம் நாட்டில் விவசாயத்தொழிலை மேம்படுத்தவும், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடந்த பல ஆண்டுகளாக விவசாயத் தொழில் பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததும், விவசாயக்கடன் உதவி காலத்தே கிடைக்காததும், கடும் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றாலும் விவசாயம் சரிவர நடைபெறவில்லை.

இருப்பினும் கடன் வாங்கி விவசாயம் செய்தாலும் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயக் கூலித்தொழிலாளர்களும், விவசாயிகளும் பொருளாதாரத்தை ஈட்ட முடியவில்லை.

இந்நிலையில் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர். அதாவது தேசிய கிராமப்புற வேலாய்வாய்ப்பு உறுதித் திட்டத்தில் 250 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், கூலியை 600 ரூபாயாக உயர்த்த வேண்டும்; 60 வயதான விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் முழுமையாக கணக்கெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் ரூ. 5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

வேளாண் விளைபொருட்களுக்கு சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி விலை வழங்க வேண்டும்.

விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் வருகின்ற 8 ஆம் தேதி (08.01.2020) மறியல் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.
பொதுவாக விவசாயிகளை போராட்டக்களத்திற்கு தள்ளக்கூடாது.

எனவே விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும். விவசாயத் தொழிலை மேம்படுத்த அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

விவசாயத்திற்கு தண்ணீர், உரம், கடன் உள்ளிட்ட அனைத்து அடிப்படையான தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். எனவே மத்திய அரசு விவசாயத்தொழிலைக் காப்பாற்றி, விவசாயிகளையும், விவசாயக்கூலித் தொழிலாளர்களையும் வளம் பெறச்செய்ய வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக