திங்கள், 2 மார்ச், 2020

பாட்டாளி மக்கள் கட்சி 2021 தேர்தல் சிறப்பு பொதுக் குழு அரசியல் தீர்மானம்


பாட்டாளி  மக்கள் கட்சி 2021  தேர்தல் சிறப்பு பொதுக் குழு 
அரசியல் தீர்மானம்

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகார இலக்குகளை எட்ட மருத்துவர் அய்யா வகுத்துத் தரும் பாதையில் உழைக்கவும், வெற்றி பெறவும் உறுதியேற்போம்!


தமிழ்நாட்டில் வளர்ச்சியை முன்வைத்து அரசியல் செய்துவரும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே. பா.மக. என்றால் வளர்ச்சி.... வளர்ச்சி என்றால் பா.ம.க என்று கூறும் அளவிற்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஏராளமான புரட்சிகரமான திட்டங்களை மக்கள் மன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி முன் வைத்திருக்கிறது.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை, 2019-ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் அறிக்கை, கடந்த காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட 18 பொது நிழல் நிதிநிலை அறிக்கைகள் உள்ளிட்ட 45 ஆவணங்களை ஆய்வுசெய்து பார்த்தாலே தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாட்டாளி மக்கள் கட்சி எத்தகைய வியத்தகு திட்டங்களையும், யோசனைகளையும் உருவாக்கி வெளியிட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.

வளர்ச்சிக்காக பாடுபடும் அதே நேரத்தில், வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்துக்கும் கேடு விளைவிக்கும் திட்டங்களை எதிர்த்து போராடுவதிலும், அத்தகைய திட்டங்களை விரட்டியடித்து விவசாயத்தைக் காப்பதிலும் பாட்டாளி மக்கள் கட்சி ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறது. இவை அனைத்தையும் விட சமூக பாதுகாப்புத் திட்டங்களை பா.ம.க. உயிர்மூச்சாக கருதுகிறது. அதுமட்டுமின்றி மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற பெருமளவில் செலவு செய்ய வேண்டும்; அது தமிழக வளர்ச்சிக்கு செய்யப்படும் பயனுள்ள முதலீடாக இருக்கும் என்பதே பாமகவின் நிலைப்பாடு.

தமிழகத்தின் வளர்ச்சிக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தொலைநோக்குத் திட்டங்கள், நடுவண் அரசில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்திய திட்டங்கள், உழவர்கள் நலனை பாதுகாப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ள அக்கறை, சமூகநீதிக்காக மருத்துவர் அய்யா நடத்திவரும் போராட்டங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, அவற்றின் அடைப்படையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரத்தை மக்கள் இன்னமும் வழங்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக்கும் உண்மை ஆகும்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக உழைப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியான பாட்டாளி மக்கள் கட்சி தான் அதன் களப்போராட்டங்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு அளித்த அறிவுசார் அழுத்தம் ஆகியவை காரணமாக கடந்த சில ஆண்டுகளில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது, கடலூர், நாகை மாவட்டங்களில் விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தை ரத்து செய்ய வைத்தது, குழந்தைகளின் உரிமைக்கு எதிராக இருந்த 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வைத்தது உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை பாட்டாளி மக்கள் கட்சி படைத்திருக்கிறது. தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டம் அறிவிக்கப்பட்டாலும் அதனை எதிர்க்கும் முதல் எதிர்ப்புக்குரல் பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து தான் எழுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பொறுப்புள்ள, உண்மையான எதிர்க்கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது.

தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இன்னும் எண்ணற்ற கனவுத் திட்டங்கள் பாட்டாளி மக்கள் கட்சியிடம் உள்ளன. அவை அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கான அதிகாரம் பாமகவுக்கு தேவை. அதுதான் பாமகவின் அதிகார இலக்காகும். அந்த இலக்கை அடைவதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிப் பயணம் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தொடங்குகிறது.

தேர்தல் வெற்றிக்காக ஆயிரமாயிரம் தந்திரங்கள் இருந்தாலும், மருத்துவர் அய்யா அவர்கள் நமக்கு கற்றுத்தந்த ஒற்றை மந்திரம் மக்களை சந்திக்க வேண்டும் என்பது தான்.

‘‘மக்களிடம் செல்லுங்கள்.
அவர்களில் ஒருவராக வாழுங்கள்.
அவர்களை நேசியுங்கள்.
அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
அவர்களிடமிருந்து தொடங்குங்கள்.
அவர்களுடன் சேர்ந்து உழையுங்கள்.
அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டமையுங்கள்.’’

என்ற சீன தத்துவஞானி லாவோ சீ-யின் வரிகள் தான் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கான மருத்துவர் அய்யாவின் வழிகாட்டுதல் ஆகும். பாமக நிர்வாகிகளுக்கு மருத்துவர் அய்யா ஒவ்வொரு நாளும் பிறப்பிக்கும் கட்டளை மக்களை சந்திக்க வேண்டும் என்பது தான். மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றினால் அவர்கள் நம்மை அதிகார இலக்கை நோக்கி அழைத்துச் செல்வார்கள் என்பது தான் நமது நிறுவனர் மருத்துவர் அய்யா நமக்கு கற்பிக்கும் வெற்றி மந்திரம் ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 32 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை பக்கங்களைப் பார்த்தால், அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் தான் நிறைந்திருக்கும். மக்கள் நலனுக்கான அறிக்கைகள், போராட்டங்கள், நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான உத்திகள் என மக்கள் நலனுக்காக பா.ம.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி ஆற்றிய பணிகளுக்கு இணையாக, தமிழகத்தில் மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்தியாவிலும் எந்த கட்சியும் செய்ததில்லை. இது தான் பாமகவின் பெருமை.

 ஆனால், அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது மட்டும் தொடுவானமாகவே நீண்டுகொண்டே செல்கிறது. இதற்கு காரணமான நமது செயல்பாட்டில் உள்ள குறைகளை களைந்து மக்களுடன் மக்களாக கலந்து பணியாற்றுவதன் மூலம் அதிகார இலக்கை அடைய வேண்டும். அதற்காக மருத்துவர் அய்யா அவர்கள் வகுத்தளிக்கும் பாதையில் பயணித்து, அவர் நம்மிடம் ஒப்படைக்கும் வேலைத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அதிகார இலக்குகளை அடைய உண்மையாக பாடுபடுவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தீர்மானிக்கிறது; உறுதியேற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக