ஞாயிறு, 15 மார்ச், 2020

தமிழ்நாடு - “தமிழர் தாயகம்” என்ற தகுதியை இன்னும் சிறிது காலத்தில் இழந்துவிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நுழைவுக்கு வரம்பு கட்ட உள் அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit System) கொண்டு வரக் கோரி உண்ணாப் போராட்டங்கள்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் ஐந்தாவது கூட்டம், இன்று (2020 மார்ச்சு 14), காலை முதல் மாலை வரை சிதம்பரம் பெல்காம் அனந்தம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம் – 1

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நுழைவுக்கு வரம்பு கட்ட இந்திய அரசு
உள் அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit System) கொண்டு வரக் கோரியும், தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே உறுதி செய்ய தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும் உண்ணாப் போராட்டங்கள்!

மொழிவழி தேசிய இன மாநிலமாக 1956இல் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட மாநிலச் சீரமைப்புச் சட்டத்தின் நோக்கங்களையே சீர்குலைக்கும் வகையில் தமிழ்நாட்டிற்குள் மிகை எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் நுழைவு பெருகி வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து குடியேறி வரும் இந்தி உள்ளிட்ட வெளி மாநிலத்தவரால் தமிழ்நாடு - “தமிழர் தாயகம்” என்ற தகுதியை இன்னும் சிறிது காலத்தில் இழந்துவிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் திட்டமிட்ட முறையில், பல்வேறு மோசடிகள் வழியாக வடமாநிலத்தவர் திணிக்கப்படுவதும், தமிழ்நாட்டு அரசுத் துறை நடத்தும் தேர்வுகளிலும், “நீட்” போன்ற மருத்துவக் கல்விக்கான தேர்விலும் இந்திக்காரர்கள் மோசடியாக “வெற்றி” பெறுவதும் தொடர்ச்சியாகி உள்ளது. இவ்வாறு சற்றொப்ப, ஒரு கோடி வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் குடியேறியுள்ளனர். மறுபுறம், இந்தி மாநிலங்களில் குடியேறியுள்ள தமிழர்களின் எண்ணிக்கையோ 8 இலட்சம் பேர்தான்!

எனவே, வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுக்க அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் உள்ளதைப் போல் “உள் அனுமதிச் சீட்டு முறையை” (Inner Line Permit System) தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசு விரிவுபடுத்த வேண்டும் என இந்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. அதன் மூலம், தமிழ்நாடு அரசின் சிறப்பு அனுமதி பெற்றால்தான், வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் வர முடியும் என்ற வரன்முறை ஏற்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

கர்நாடகம், போன்ற மாநிலங்களில் உள்ளதைப் போல், தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டு மக்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க சட்டம் வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசுப் பணிகள் மற்றும் தனியார் நிறுவனப் பணிகளில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கே உறுதி செய்ய தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வரும் 2020 மே 12 அன்று சென்னை, விருத்தாச்சலம், தஞ்சை, திருச்சி, மதுரை, தருமபுரி, புதுச்சேரி ஆகிய இடங்களில் உண்ணாநிலை அறப்போராட்டங்கள் நடத்த தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழுக் கூட்டம் ஒரு மனதாகத் தீர்மானிக்கிறது! இதையொட்டி, 2020 மே 1 முதல் 10 முதல் பத்து நாட்கள் பரப்புரை இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்படுகிறது. தமிழ் மக்களும், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களும் இக்கோரிக்கைக்கு ஆதரவளித்து, இப் போராட்டங்களில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமெனவும் இப்பொதுக்குழு அழைக்கிறது!

தீர்மானம் – 2

தமிழ்நாட்டு இந்துக் கோயில்களில் தமிழ் மந்திரங்களை அன்றாட வழிபாட்டு மொழியாக்கிட தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டும்!

உலகத் தமிழர்களின் ஆன்மிகம் மற்றும் கலைச் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடந்திருப்பது தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழர்களின் இந்துக் கோயில்களில் மட்டுமின்றி, குடும்ப நிகழ்வுகளையும் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டுமென்ற விழிப்புணர்வு பெருகியுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் திருஆவினன்குடியான பழநி திருக்கோயில் குடமுழுக்கும் தமிழிலேயே நடைபெற வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆயினும், தமிழ்நாட்டிலுள்ள இந்துக் கோயில்களின் அன்றாட வழிபாட்டில் தமிழ் மொழி இல்லாமல் இருப்பது வேதனை தரும் மெய்நடப்பாகும். எந்தவொரு தேசிய இனத்திற்கும் தாய்மொழி அல்லாத சமற்கிருதம், தமிழ்நாட்டுக் கோயில்களில் கேள்விமுறையற்று ஏகபோகமாக இருப்பது, “அனைவரும் சமம்” எனக் கூறும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

தமிழர்களின் இறைநேசத்தையும், மெய்யியலையும் வெளிப்படுத்தும் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், ஆண்டாள் பாசுரம் போன்ற இறை வணக்க மந்திரங்கள், சொந்த மண்ணிலேயே இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுவதும், தமிழர்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத சமற்கிருத வைதீக மந்திரங்கள் கோயில் கருவறைகளில் ஒலிக்கப்படுவதும் தமிழுக்கு மட்டுமின்றி, தமிழர் கடவுள்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.

தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்ற அரசாணையும், சைவ – வைணவ – அம்மன் கோயில்களுக்கு தமிழ் மந்திரங்களை இந்து சமய அறநிலையத்துறை அச்சிட்டு அணியப்படுத்தி வைத்திருப்பதும் செயலுக்கு வரவில்லை. தமிழ்நாடு அரசின் பயிற்சியும், தகுதிச் சான்றிதழும் பெற்றுள்ள நூற்றுக்கணக்கான அர்ச்சகர்கள் பணி கிடைக்காமல் வாடுவது தொடர்கிறது.

எனவே, தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக செயல்பட தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென்று தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு கோருகிறது!

வடமொழியில் மாற்றப்பட்ட திருக்கோயில்களின் இறைவன் – இறைவிகளின் பெயர்களை, கல்வெட்டுகளிலும், தமிழ் இலக்கியங்களிலும் உள்ளதைப் போல் மீண்டும் தமிழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது!

இக்கோரிக்கைகளை தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், தமிழர் ஆன்மிகச் சான்றோர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து விரிவான களம் அமைத்து மக்களைத் திரட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது!

தீர்மானம் – 3

மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்!

தமிழ்நாடெங்கும் வயது வேறுபாடின்றி பரவி வரும் மதுப்பழக்கம், பல்வேறு சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கும் முகாமையான காரணமாக மதுப்பழக்கம் விளங்குகிறது.

மது போதையால் பெருகி வரும் சாலை விபத்துகளும், அதிகரித்து வரும் கைம்பெண்களின் எண்ணிக்கை, மதுச்சீரழிவின் பேராபத்தை எடுத்துக் காட்டுகிறது. இன்னொருபுறத்தில், தமிழர்களை உடல் உழைப்பிலிருந்து மதுப்பழக்கம் வெளியேற்றி வருகிறது.

வெளிப்படையாக இவ்வளவு சமூகச் சீரழிவுகளும் தெரிந்த போதிலும், மாநில அரசே மதுக்கடைகளை நடத்துவது மக்கள் நலனை துச்சமாகக் கருதும் நடவடிக்கையாகும். மக்களை அழிக்கும் மது விற்பனையைப் பெரிதும் சார்ந்து, தமிழ்நாடு அரசின் சொந்த வருவாய் இருப்பதாகக் கூறுவது அறம் கொன்ற செயலாகும்!

இந்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் கோடி ரூபாயை வரிப் பணமாகத் திரட்டுகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சேலம் இரும்பு, காவிரிப்படுகை எரிவளி மற்றும் எரிவாயு என தமிழ்நாட்டின் கனிம வளங்கள் வழியாகக் கிடைக்கும் பல இலட்சம் கோடி ரூபாய் வருவாய் இந்திய அரசுக்கே செல்கிறது. கடந்த 2019ஆம் நிதியாண்டில், சரக்கு மற்றும் சேவை வரிகளின் வழியே தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சற்றொப்ப 60,000 கோடி ரூபாய் இந்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதில் பாதியை இந்திய அரசிடம் கேட்டுப் பெற்றாலேயே, தமிழ்நாடு அரசு மது விற்பனையை நிறுத்த முடியும்.

எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் நீடிப்பது ஏற்கக் கூடியதல்ல! தமிழ்நாடு அரசு உடனடியாக மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், இலட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் மது ஆலைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 4

தமிழ்நாட்டில் மக்கள் தொகைப் பதிவேட்டுத் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்!

தமிழ்நாட்டில் மத வேறுபாடுகளின்றி தமிழர்களாக மத நல்லிணக்கத்தோடு இணைந்து வாழ்ந்து வரும் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்டோரிடையே வெறுப்பையும், பகைமையையும் விதைப்பதோடு, அனைத்து சமூக மக்களுக்கும் அவர்கள் காலங்காலமாக வாழ்ந்து வரும் தாயகத்தையே கேள்விக்குள்ளாக்கும் மக்கள் பகைத் திட்டமே – இந்திய அரசின் மக்கள் தொகைப் பதிவேட்டுத் திட்டமாகும் (என்.பி.ஆர்.).

ஏற்கெனவே, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (சென்சஸ்) இந்திய அரசால் பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் நிலையில் - ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற அரசு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தேவையற்ற வகையில் நடத்தப்படவிருந்த மக்கள் தொகைப் பதிவேட்டுத் திட்டத்தை எதிர்த்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இசுலாமிய மக்களும், பல்வேறு இயக்கங்களும் அறவழிப் போராட்டங்களை நடத்தினர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் இப்போராட்டங்களில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், 12.03.2020 அன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள், “மக்கள் தொகைப் பதிவேட்டின் போது கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து இந்திய அரசிடம் சில விளக்கங்கள் கேட்டுள்ளோம். அதற்கான பதில் இன்னும் வராததால், அத்திட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

இதை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு வரவேற்கிறது! ஆயினும், தமிழ்நாடு அரசு மக்கள் தொகைப் பதிவேட்டுத் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிடுவதாகத் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டுமென இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 5

முறைகேடுகளில் ஈடுபட்டு சிதம்பரம் நகராட்சி நிர்வாகத்தை சீர்குலைத்து வரும் ஆணையரைக் கைது செய்க!

நகராட்சிகளுக்கு இன்னும் தேர்தல் நடைபெறாத நிலையில், அதிகாரிகளின் ஆட்சியே நகராட்சி, மாநகராட்சிகளில் நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் நகரம், குண்டும் குழியுமான சாலைகளோடு சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள் பெருகும் நகரமாகவும், குடிநீர் வழங்கல் அரைகுறையாக நடைபெறும் நகரமாகவும் இருக்கிறது.

சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா இந்த சீர்கேடுகளை கண்டு கொள்ளாததோடு, சகிக்க முடியாத ஊழல் மற்றும் முறைகேட்டு நபராக விளங்குகிறார்.

இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாக சிதம்பரம் நகராட்சிக்கு வரும் பல கோடி ரூபாய் தொகை முறையாக செலவிடப்படாமல், இந்த ஆணையரால் கையாடப் படுகிறது. இவர் பதவியேற்ற கடந்த 16 மாதங்களில், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் 4 இலட்சம், சாக்கடைத் தூய்மைப்படுத்தும் வண்டிகளை புதிதாக வாங்கியதிலும், சீரமைப்பதிலும் 6½ இலட்சம், சுண்ணாம்பு வாங்குவதில் கூட 3 இலட்சம் என்று தொட்ட இடங்களிலெல்லாம் அரசுப் பணத்தை சுருட்டுவதிலேயே கவனமாக இருக்கிறார் என்பது ஊரறிந்த இரகசியமாக உலவுகிறது.

குப்பை வரி விதிப்பதிலும், கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவதிலும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு இவர் கையூட்டு வாங்கிக் குவிக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் எதிரொலித்த வண்ணம் உள்ளன. 5,200 வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு கொடுத்ததில் இவர் நடத்திய முறைகேடுகள் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளது. ஆயினும், நடவடிக்கை ஏதுமில்லை!

சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி சிதம்பரம் வணிகர்கள் 2020 பிப்ரவரி 3 அன்று 24 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். அதன்பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை. இவர் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி ஆணையராக பதவியில் இருப்பது, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்ற அவநம்பிக்கையையே மக்களிடம் ஏற்படுத்தும்.

எனவே, அளவற்ற ஊழல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டு சிதம்பரம் நகராட்சி நிர்வாகத்தை சீர்குலைத்து வரும் ஆணையர் சுரேந்தர்ஷாவை தமிழ்நாடு அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதோடு, அவரை ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக