செவ்வாய், 3 மார்ச், 2020

தொல்பொருள் துறையின் கீழ் வரும் தமிழகக் கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏற்பாடா? - கி.வீரமணி


தொல்பொருள் துறையின்கீழ் வரும் தமிழகக் கோவில்களை
மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏற்பாடா?
மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட அனுமதிக்கலாமா?

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத் துறை (Hindu Religious Endowment Board Department) யைச் சார்ந்ததாகும்.

நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டம்

நீதிக்கட்சி என்ற ஜஸ்டீஸ் கட்சியாகிய திராவிடர் ஆட்சியில் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்ப்புகளை எதிர்த்துப் போராடி, அதை பிரிட்டிஷ் அரசு காலத்திலே சட்டமாக்கி சாதனை புரிந்தனர்.
கோவில் அர்ச்சகர் ‘பெருச்சாளிகள்’ ‘பூனை’களாகவும் கோவில் வருமானங்களை சரி வர தணிக்கையின்றி சுரண்டியதைத் தடுக்கவே அச்சட்டம். அதனுடைய கடமை - பக்தி பரப்புவதோ, கும்பாபிசேகம் செய்வதோ அல்ல; சட்டப்படி; வருகிற வருமானம் சரிவரச் செலவிடப்பட்டு கணக்குக் காட்டப்படுகிறதா? என்பதற்குத்தான்!

மற்ற வட மாநிலங்களில் கோவில்கள் தனித்தனியே சுரண்டல் பக்தி வியாபார நிலையங்களாக, ‘கொள்ளை கூட்டுறவு வினை’ என்று வடலூரார் சொன்னபடி நடந்துவரும் நிலையில், நீதிக்கட்சி 95 ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றுச் சாதனை செய்தது.

பார்ப்பனர் கொள்ளைக்கு வழிவகுக்கத் திட்டம்

இதனை ஒழித்து மீண்டும் பார்ப்பனர் கொள்ளைக்கு வழிவகுக்கவே இங்கு அரசுத் துறையாக அது இருக்கக்கூடாது என்று இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. தயானந்த சரசுவதி என்ற (மஞ்சக்குடி நடராஜய்யர் தான் இவர்) பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்கே போட்டு, அது நிலுவையில் உள்ளது.
அந்தத் துறைமீது தொடர்ந்து பழி சுமத்தி, கடமையாற்றும் அதிகாரிகள்மீது அழிவழக்குகள் போட்டு, மிகவும் தொல்லை கொடுத்து, எப்படியும் அந்த ஏற்பாட்டை மாநில அரசுத் துறையில் இருப்பதை ஒழிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மத்திய அமைச்சரின் அறிவிப்பு

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் ஒருவர், ‘‘ஒட்டகம், கூடாரத்திற்குள் மெதுவாக நுழைவதுபோல்’’ - தொல் பொருள் துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழ்நாட்டுக் கோவில்களை மத்திய அரசே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவிருக்கின்றது என்று கூறியிருக்கிறார்.

இது மிகவும் ஆபத்தான - மாநில உரிமையைப் பறிக்கும் விபரீத யோசனை!
இதன்படி பார்த்தால், தஞ்சை பெரிய கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் நிலை வெகுவிரைவில் கருக்கொண்டு ‘பிரசவிக்கக் கூடும்!’ இதனைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டியது தமிழக அரசின் அவசரக் கடமையாகும்.

ASI என்ற தொல்பொருள் துறையின்கீழ் இருப்பது மேற்பார்வை, சிற்பங்கள் முதலியவை மட்டுமே என்பது அறவே மாற்றப்பட்டு, மத்திய அரசு கோவில்களாகவே அவை அறிவிக்கப்பட்டு கையகப்படுத்தப்படக் கூடும்.
நீதிக்கட்சி திராவிடர் ஆட்சி செய்த இந்து சமய அறநிலையத் துறையை மெல்லக் கொல்லும் நஞ்சுபோல ஒழிக்கவே இது ஒரு முன்னோட்டம் - கவனமாக இருக்கட்டும் தமிழக அரசு!

நாத்திக - ஆத்திகப் பிரச்சினையல்ல - மாநிலங்களின் உரிமைப் பிரச்சினை

இப்படி நாம் சுட்டிக்காட்டும்போது சிலர் ‘‘நாத்திகர்கள், கோவிலுக்குப் போகாதவர்கள் ஏன் இதுபற்றிக் கவலைப்படவேண்டும்?’’ என்று குறுக்குக் கேள்வி கேட்பர். அத்தகையவர்களுக்குக் கூறுகிறோம், இது ஆத்திகர் - நாத்திகர் உரிமைப் பிரச்சினை அல்ல.
மாநிலங்களின் உரிமைப் பிரச்சினை என்பதும், தனி நபர்கள் வடநாட்டில் கோவில்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் பார்ப்பன சுரண்டலுக்காகவே பயன்படுத்தும் பேராபத்துகள் இங்கு தடுத்து நிறுத்தப்படவேண்டும். வருமுன்னர் தடுப்பதே புத்திசாலித்தனம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக