புதன், 4 மார்ச், 2020

அதிமுக அரசுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் முடிவு கட்டுவோம் - மு.க.ஸ்டாலின்


"வாங்கும் கமிஷன் போதாது என கடன் வாங்கி அதிலும் கமிஷன் அடிக்கும் அதிமுக அரசுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் முடிவு கட்டுவோம்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

அனைவருக்கும் வணக்கம்.

மாற்றுக் கட்சிகளிலிருந்து குறிப்பாக அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.


நம்மை விட்டு மறைந்தாலும் நம் உள்ளத்தில் குடியிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களுடைய சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக வருக என வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழர்களுக்காக, தமிழினத்திற்காக, தமிழ் மொழிக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். 1949-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தவர். அறிஞர் அண்ணா இந்த இயக்கத்தைத் தொடங்கிய நேரத்தில், பிரச்சாரத்திற்கான செயலாளராக - ஊன்றுகோலாக இருந்து பாடுபட்டவர் தலைவர் கலைஞர். 1949-ல் வடசென்னைப் பகுதியில் கொட்டும் மழையில் அறிஞர் அண்ணா இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டதல்ல இந்த இயக்கம். மக்களுக்காக பணியாற்ற வேண்டும்; மக்களிடத்தில் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும்; மக்களில் ஒருவராக இருந்து நம்முடைய கடமையை ஆற்றிட வேண்டும் என்பதற்காக “மக்களிடம் செல். மக்களிடம் சொல். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்று” என்ற உணர்வோடு அறிஞர் அண்ணா இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி வைத்தார்.

ஏழை - எளிய மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, சிறுபான்மையின சமுதாயத்தைச் சார்ந்த மக்களுக்கு என ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பாடுபடும் நிலையில் அறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கித் தந்திருக்கிறார். அப்படி உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் ஏறக்குறைய 70 ஆண்டு காலமாக இந்த இனத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இடையில் பல காலக்கட்டங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். 1967-இல் அண்ணா தலைமையில் ஆட்சிக்கு வந்தோம். ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள் ஓராண்டுக் காலம்தான் ஆட்சிப் பொறுப்பிலிருந்தார். உடல் நலிவுற்று, நோய்வாய்ப்பட்டு அவர் இறந்துவிட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய இதயத்தை இரவலாகப் பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஒருமுறை அல்ல; தமிழ்நாட்டில் ஐந்து முறை ஆட்சிப்பொறுப்பில் இருந்து, தமிழ்நாட்டு மக்களுக்காக ஆட்சி நடத்தியிருக்கிறார்.

நீங்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது. இந்த தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியது அறிஞர் அண்ணாதான். தமிழகத்திற்காகப் பல திட்டங்களை, சாதனைகளை உருவாக்கித் தந்திருக்கிறார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளப்பரிய சாதனைகளை உருவாக்கித் தந்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான் நீங்கள் வந்து இணைந்திருக்கிறீர்கள். அப்படி இணைந்திருக்கும் உங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருக வருக வருக என வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கம் தலைவர் கலைஞர் அவர்களால்தான் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு கல்லையும் பார்த்துப் பார்த்து நமக்காக - நம்முடைய இயக்கத்திற்காக அழகாகக் கட்டித் தந்திருக்கிறார் தலைவர் கலைஞர்.

ஆகவே கட்சியில் பங்கேற்கும் நேரத்தில் பெருமைப்பட்டாலும், அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் வந்து இணைந்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குப் பெரிய பெருமை சேர்க்கும். உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத முக்கிய நிகழ்ச்சியாக இது இருக்கும் என்று இந்த நேரத்தில் பெருமையுடன் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

உங்களிடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது என்னவென்றால், முக்கியமான காலகட்டத்தில் இங்கு வந்து இணைந்திருக்கிறீர்கள். விரைவில் தேர்தல் வரப்போகிறது. சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தோம். அதற்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தோம். இதற்கிடையில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலைச் சந்தித்தோம். இடைத்தேர்தலில் நாம் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தோம். தமிழ்நாட்டின் வரலாற்றில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. அது எப்படி நடக்கிறது என்ற பிரச்சனைக்குள் நான் போகவிரும்பவில்லை. அதையும் தி.மு.க. மாற்றிக் காட்டியது. ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலில் ஏறக்குறைய 21 இடங்களில் இடைத்தேர்தல் நடந்தது. அந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.,கவை விட தி.மு.க. தான் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க.,வின் இடங்களை நாம் கைப்பற்றினோம். அது ஒரு கட்டம்.

பாண்டிச்சேரியைச் சேர்த்து 40 இடங்களுக்கு நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தேனியைத் தவிர்த்து 39 இடங்களில் வெற்றிபெற்ற கட்சிதான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். அதற்குப்பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அ.தி.மு.க.,தான் ஆட்சியில் இருக்கிறது. ஆளுங்கட்சிதான் உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிப்பது வழக்கம். ஆனால் என்ன நிலை ஏற்பட்டது? நாம் எதிர்க்கட்சி. அதுவும் தேர்தல் எப்படி நடந்தது? நீங்களும் பல கட்சிகளில் இருந்து வந்திருப்பீர்கள்? என்னென்ன காரியங்கள் நடைபெற்றன என்று உங்களுக்கும் தெரியும். தேர்தலை முறைப்படி நடத்தவில்லை; தேர்தலை விதிமுறைப்படி நடத்தவில்லை. நாம் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, உயர்நீதிமன்றத்துக்குச் சென்று நீதிமன்றம் சி.சி.டி.வி கேமரா வைக்கவேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்ட பிறகுதான் சில இடங்களிலாவது தேர்தல் முறையாக நடந்தது.

ஆனால், பல இடங்களில் தேர்தல் முறையாக நடக்கவில்லை. வாக்குப்பதிவும் முறையாக நடக்கவில்லை; வாக்கு எண்ணிக்கையும் முறையாக நடக்கவில்லை.

நாம் வெற்றிபெற்ற இடத்தில் அவர்கள் வெற்றிபெற்றதாக அறிவித்தார்கள். அவர்கள் தோற்ற இடங்களில் நாம் தோற்றதாக அறிவித்தார்கள். இப்படி அதிகார துஷ்பிரயோகம், போலீஸ் அராஜகம், ஏஜெண்ட்களை அடித்து அனுப்பிவிட்டு அவர்களே வாக்குகளை எண்ணி அறிவிப்பது, எண்ணி முடித்தபிறகு நாம் வெற்றிபெற்றால் அதை மாற்றி அறிவிப்பது, இப்படியெல்லாம் செய்தும் அ.தி.மு.க.,வைவிட உள்ளாட்சித் தேர்தலில் அதிகம் வெற்றிபெற்றது தி.மு.க.,தான்.

தேர்தல் முறையாக நடந்திருந்தால் 80 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை நாம்தான் வெற்றிபெற்றிருப்போம். அதுதான் உண்மை!

இவையெல்லாம் எதைக் காட்டுகிறது என்றால், ஆளுங்கட்சி எவ்வளவு வன்முறையில் ஈடுபட்டாலும், எவ்வளவு முறைகேட்டில் ஈடுபட்டாலும் அடுத்து அமையப்போவது தி.மு.க. ஆட்சிதான் என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க.,வில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் என்றால் உண்மையை உணர்ந்துதான் வந்திருக்கிறீர்கள். ஆட்சியில் இல்லாவிட்டாலும் தி.மு.க. நாட்டு மக்களுக்காக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுக்கிறது என்பதை அறிந்து - புரிந்து தி.மு.க.,வுக்குத்தான் போகவேண்டும் என்று முடிவெடுத்து வந்திருக்கிறீர்கள்.

இன்று ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. என்ன செய்து கொண்டிருக்கிறது?

தி.மு.க. மக்களிடம் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி ஜெயித்தது என்று குற்றம் சாட்டுகிறது. தி.மு.க. குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பதுபோல் மக்களிடம் பொய் சொல்லி ஜெயித்துவிட்டது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலேயே சொன்னார்.

நாங்கள் 39 தொகுதிகளில் மிட்டாய் கொடுத்து ஜெயித்தோம் என்றால் நீங்கள் தேனியில் மக்களுக்கு அல்வா கொடுத்து ஏமாற்றினீர்களா என்று நான் அவரிடம் சட்டமன்றத்திலேயே திருப்பிக்கேட்டேன்.

மக்கள் என்ன முட்டாள்களா, ஏமாளிகளா? கிராமத்தில், "பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாச் சொல்ல வேண்டும்" என கிராமப்புறத்தில் ஒரு பழமொழி சொல்வதுண்டு.

நாம் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டோம் என்று அவர்கள் பொய் சொல்கிறார்கள். ஒரு திருடன் திருடிக்கொண்டு ஓடும்போது மக்கள் துரத்துவார்கள். உடனே இன்னொருவனைப் பார்த்து திருடன் திருடன் என்று அவன் கத்துவான். அப்படித்தான் நாம் பொய் சொல்கிறோம் என்று இவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

‘நான் விவசாயி, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்’ என்று மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். இதைப்பற்றிப் பேசினால் அவருக்குக் கோபம் வருகிறது. சரி அவர் விவசாயி என்றே வைத்துக்கொள்வோம். சேலத்தில் எட்டுவழிச் சாலைக்கு எதிராக விவசாயிகள் போராடினார்கள், சிறைக்குச் சென்றார்கள், பலர் வழக்குகளில் சிக்கினார்கள். ஒரு விவசாயியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்? எட்டுவழிச் சாலை திட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். தடுத்து நிறுத்தினால் கமிஷன் வராது என்பதால் அவர் தடுத்து நிறுத்தவில்லை.

காவிரி டெல்டா பகுதிகளில் தி.மு.க. வலிமையாக விளங்குகிறது. அங்கே அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, தேர்தலுக்காக, மக்களை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி.

அதுதான், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்!

சிறப்பு வேளாண் மண்டலம் என்றால் அங்கே அறிவிக்கபட்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளின் நிலை என்ன என்று கேட்டேன். ஆனால் தமிழக அரசோ அந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் எல்லாம் அப்படியே இருக்கும் என்று சொல்கிறது. இப்படி முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலை நாம் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும்.

‘சிறுபான்மையினருக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம்’ என்று திடீரென்று குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி.

முத்தலாக் தடைச் சட்டம் வந்தபோது என்ன செய்தீர்கள்?

குடியுரிமைத் திருத்த சட்டம் வந்தபோது என்ன செய்தீர்கள்?

இந்தச் சட்டத்தால் முஸ்லீம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் மட்டும் பிரச்னையில்லை; நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்கும் பாதிப்பு!

தமிழ்நாட்டில் மட்டுமா போராட்டங்கள் நடக்கின்றன? கேரளாவில், மேற்கு வங்காளத்தில், உத்தரப்பிரதேசத்தில், தலைநகர் டெல்லியில் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் 49 பேர் இறந்ததாகத் தகவல்கள் வருகின்றன. இன்னும் முழுமையாகக் கணக்கு வெளியாகவில்லை. பெண்கள் போராட்டத்தில் முழுமையாகப் பங்கெடுத்து தங்கள் உணர்வுகளைத் தெரிவிக்கிறார்கள்.

மக்களவையில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையாக இருப்பதால் அங்கு எளிதில் இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டது. ஆனால் மாநிலங்களவையில் இந்தச் சட்டம் நிறைவேற வேண்டுமானால் பா.ஜ.க.,வுக்குப் பெரும்பான்மை இல்லை. அ.தி.மு.க.,வின் பத்து உறுப்பினர்களும் பா.ம.க.,வின் ஒரு உறுப்பினரும் இந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் குடியுரிமை திருத்தச் சட்டமே நிறைவேறியிருக்காது. இப்போது நாட்டில் இவ்வளவு பிரச்சினைகளே இருந்திருக்காது. இவர்கள் ஆதரித்து வாக்களித்ததால்தான் நாடு முழுவதும் போராட்டங்கள்!

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும் பச்சைத்துரோகம் செய்த கட்சிகள் அ.தி.மு.க.வும் பா.ம.கவும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது!

இந்தியாவில் பெரிய கலவரம் உருவாகக் காரணமாக இருந்தவர்கள்தான் அ.தி.மு.க.,வும் பா.ம.க.,வும். இதை மூடி மறைப்பதற்காகத்தான் ‘நாங்கள் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருப்போம்’ என்று பொய்ப் பிரச்சாரத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அதேபோல்தான் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என்ற பொய்ப் பிரச்சாரத்தையும் செய்கிறார்கள்.

இன்று அ.தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை கரப்ஷன் - கலெக்‌ஷன் - கமிஷன் என்ற மூன்று விஷயங்கள்தான். கடன் வாங்கி கடன் வாங்கித்தான் ஆட்சி நடத்துகிறார்கள். அந்தக் கடனையும் திட்டங்கள் தீட்ட வாங்கவில்லை; ஏற்கெனவே வாங்கிக்கொண்டிருக்கும் கமிஷன் போதாது என்று கடன் வாங்கி அதிலும் கமிஷன் அடிக்கிறார்கள்!

இந்த ஆட்சிக்கு முடிவுகட்டும் சூழலை ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தந்திருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அதற்கு வலுச் சேர்த்திருந்தாலும், சட்டமன்றத் தேர்தலில் இந்த ஆட்சிக்கு மொத்தமாக முடிவு கட்டவேண்டும். முடிவு கட்டுவது மட்டுமல்லாது ஊழல் செய்பவர்களை, கொள்ளை அடிப்பவர்களைச் சிறையில் தள்ள வேண்டும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான பணியில் நீங்களும் உங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.

இன்று திராவிட முன்னேற்றக்கழகத்தில் என்ன உணர்வோடு வந்து சேர்ந்திருக்கிறீர்களோ அந்த உணர்வோடு உங்களை மீண்டும் ஒருமுறை, தலைவர் கலைஞர் சார்பில், தலைமைக் கழகத்தின் சார்பில் வருக வருக என்று வரவேற்று விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக