சனி, 7 மார்ச், 2020

பேராசிரியர் என்றும் நமக்கு மங்காத ஒளியாவார்! பாடம் எடுக்கும் பாசறையின் மங்காத முழக்கம்! அவர் வரலாறாகி வழிகாட்டுவார்.


அந்தோ, கொள்கை மாவீரர்
எம் இனமானப் பேராசிரியர் மறைந்தார்
என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம்! - கி.வீரமணி

நமது இனமானப் பேராசிரியரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற பொதுச் செயலாளராக 43 ஆண்டுகள் இருந்தவரும், எவரைச் சந்தித்தாலும் கைகுலுக்கி தமது அன்பினையும், பண்பினையும் வெளிப்படுத்தி, எந்த மேடையிலும் தந்தை பெரியார் தம் சுயமரியாதைச் சூரணத்தை, ஒரு மருத்துவர் நோயாளிக்குத் தருவதைப் போல் தவறாது தருபவரும், அறிஞர் அண்ணாவின் உள்ளம் கவர்ந்த தம்பிகளில் முதன்மையரும், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் தலைமையை ஏற்று கடைசி வரை கட்டுப்பாடு காத்தவருமான, கொள்கை மாவீரர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம்! அவர் 98 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்றாலும் எப்படி அவரது பிரிவை தாங்கி கொள்வது என்று; அவரை இழந்து தவிக்கும் அளவுக்கு நமது இலட்சியப் பயணத்தின் ஒளி கூட்டிய இனமானச்சுடர் அவர்.

அவரது பொதுவாழ்க்கை 85ஆண்டு காலம் என்ற வரலாற்றுச் சாதனை இந்தியப் பொதுவாழ்வுக்கே ஒரு தனித்தன்மையான எடுத்துக்காட்டு.

தி.மு.க.வில் கலைஞர் மறைந்தவுடன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தலைவராக ஏற்று கழகத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு இலக்கணமாக திகழ்ந்த பண்பின் இமயம் அவர் - எடுத்துக்காட்டுக்கு எப்போதும் இவரே என்ற தனித் தகுதி படைத்தவர்.

அந்த கொள்கை மாவீரரின் மறைவுக்குத் தாய்க்கழகம் தனது வேதனை மிகுந்த துயரத்தை தெரிவிப்பதுடன், அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகள் ஏழு நாட்களுக்குத் தள்ளி வைக்கப்படுகின்றன.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், கொள்கைக் குடும்பத்துத் தலைவர் தளபதி உட்பட அனைவரது துயரத்திலும், தாய்க்கழகம் பங்குபெற்று, நாம் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டு, இலட்சியச் சுடரை அணையாது காத்து, கொள்கைப் பயணத்தை தொடருவோமாக!

பேராசிரியர் என்றும் நமக்கு மங்காத ஒளியாவார்! பாடம் எடுக்கும் பாசறையின் மங்காத முழக்கம்! அவர் வரலாறாகி வழிகாட்டுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக