புதன், 18 மார்ச், 2020

சேலம் மாவட்டம், தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அமைப்பது குறித்து அளித்த விளக்கம்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (17.3.2020) சட்டப்பேரவையில், சேலம் மாவட்டம், தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அமைப்பது குறித்து அளித்த விளக்கம்.

மாண்புமிகு பேரவைத் துணை தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா பிரம்மாண்டமான விழாவாக நடந்தது என்று சொன்னார்கள். உண்மையிலேயே பிரம்மாண்டமான விழா தான். விவசாயிகளுக்கு யாரும் விழா எடுக்க வில்லை. விவசாயிகளுக்காக எடுக்கப்பட்ட மிகப் பெரிய விழா அது. நீங்கள் விழாவில் வந்து பார்த்தீர்களோ என்று தெரியாது, வந்திருந்தால் விழாவினுடைய சிறப்பு அம்சங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். வேளாண்மைத்துறை சம்பந்தப்பட்ட அனைத்தையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அடிக்கல் நாட்டு விழா மட்டுமல்ல, அது வேளாண் பெருமக்களுக்கு எப்படி எல்லாம் வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டும், அத்தனையும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டது.

அதுபோல கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள், வேளாண் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் எல்லாம் அங்கே வந்து, நாள் முழுவதும் பார்வையிட்டு சென்றார்கள். அங்கேயே அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இது ஒரு விழாவாக மட்டுமின்றி, அறிவுப்பூர்வமாக விவசாய பெருமக்களுக்கு தேவையான நன்மைகளை கிடைக்கின்ற ஒரு விழாவாக தான் எடுத்தோம். மூன்று நாட்கள் விழா நடைபெற்றது. முதல் நாள் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இரண்டாவது நாள் சுமார் 1 லட்சம் பேர் தானாக அந்த விழாவை பார்ப்பதற்கு வந்தார்கள். அங்கே வேளாண்மைத் துறையில் இருக்கின்ற சிறப்பம்சங்களை பார்ப்பதற்கும், அதேபோல விவசாய இயந்திரங்களை பார்ப்பதற்கும், நான்கூட பார்த்ததில்லை, மரியாதைக்குரிய மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் வந்து பார்த்தார்கள். நீங்கள் எல்லாம் கூட வந்து பார்த்திருக்க வேண்டும். தவறவிட்டு விட்டீர்கள். உங்கள் மாவட்டத்தில் நடந்தது, பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அவ்வளவு இயந்திரங்கள், கிட்டத்தட்ட 200 அரங்குகள், முழுக்க முழுக்க வேளாண் பெருமக்கள் பயன்படுத்துக்கின்ற இயந்திரங்கள் எல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டன. தேங்காய் பறிப்பது, நடவு செய்வது, களை பறிப்பது, உங்களுக்கு அக்கறை இருக்கிறதோ இல்லையோ, எங்களுக்கு அக்கறை இருக்கின்ற காரணத்தினாலே, எங்களுடைய அரசு விவசாயிகளுக்கு விஞ்ஞான பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட இயந்திரங்கள் எல்லாம் அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். அதற்காக இப்படிப்பட்ட பொதுக்கூட்டத்தின் வாயிலாக அதை கொண்டு வந்து விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தி அறிவுபூர்வமான திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னொன்றை சொன்னார்கள், இப்பூங்கா விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டம் இரண்டிற்கும் இடையில் தான் இருக்கிறது. கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவது சேலம் மாவட்டத்தில். ஆனால் அதற்குண்டான பயிர் தீவனங்கள் எல்லாம் விழுப்புரம் மாவட்டத்தில் பயிரிடுகிறார்கள். கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டடம் மற்ற கட்டடங்கள் எல்லாம் சேலம் மாவட்ட பகுதியில் கட்டப்படுவதால் சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தான் இப்பூங்காவால் முழுக்க முழுக்க பயன்பெறுகிறது. இப்பூங்காவிற்கு எடப்பாடியில் இருந்து வர வேண்டும் என்றால் 140 கிலோ மீட்டர் வர வேண்டும். இது உங்களுடைய பகுதியில் தான் இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே மாண்புமிகு பேரவை துணை தலைவர் அவர்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆடம்பர விழா அல்ல. விவசாயிகளுக்காக எடுக்கப்பட்ட அற்புதமான விழா என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே,

 ஒரே ஆண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஏற்படுத்திய அரசு எங்களுடைய அரசு, மாவட்டம் தோன்றி ஆறே மாதத்தில் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்ததும் நாங்கள் தான். இவ்வளவும் செய்த பிறகும், உங்களுக்கு திருப்தி வரவில்லையே. 

உங்களுக்கு அதிகமான பயன் இருக்கிறது என்பதற்காக தான் இந்த நேரத்திலே சுட்டிக்காட்டினேன். அதுமட்டுமல்ல, இந்த கால்நடை பூங்கா என்பது நாட்டின் மாடுகளை காப்பதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் பசுக்கள், காளைகள், ஆடுகள், எல்லாம் நம்முடைய பாரம்பரியமாக இருக்கின்றன. நமது மாட்டினங்களையும், கால்நடைகளையும் வளர்க்கக் கூடிய பண்ணையாக இது இருக்கும். கலப்பின பசுக்களை உருவாக்கி நம்முடைய விவசாய பெருமக்களுக்கு கொடுக்கும் போது அவர்களுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். ஒரு பசு 10 லிட்டர் பால் கொடுக்கும் என்றால், நம்முடைய சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி, விவசாய குடிமக்கள் அதை வாங்கி பயன்படுத்துகின்ற போது 10 லிட்டர் பால் கொடுக்கின்ற பசு 25 லிட்டர் பால் கொடுக்கும். அதற்குதான் இந்த கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக