ஞாயிறு, 8 மார்ச், 2020

பெண்களுக்குப் பெண்களே எதிரிகளா? உலக மகளிர் நாளில் சிந்திப்போம்! - கி.வீரமணி


பெண்களுக்குப் பெண்களே எதிரிகளா?
உலக மகளிர் நாளில் சிந்திப்போம்! - கி.வீரமணி

இன்று உலக மகளிர் நாள்!

இந்நாளில் மகளிர் உரிமை குறித்து சிந்திக்கப்பட வேண்டியவை ஏராளம்!

மக்கள் தொகையில் சரி பகுதி பெண்கள் என்ற நிலை மாறி, ஆண்டுக்கு ஆண்டு உலகில் பெண்களின் தொகை வீழ்ச்சி அடைந்து வருவது ஏன் என்பது சிந்தனைக்குரியதும், கவலைக்குரியதுமாகும்.

பெண்களுக்கான சமத்துவம் என்று வரும் பொழுது  எந்த மதத்திலும் பெண்கள் தலைமை தாங்க முடியாது என்பதுதான் உண்மையான நிலை.

இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் வெளிப் படையாகவே சொல்லுகிறார்.

“ஆண்களைவிட பெண்கள் அதிகம் படித்து அதிகம்  சம்பாதிப்பதால் ஆண்களுக்குக் கட்டுப்படும் நிலையில் இல்லை; குடும்ப வாழ்வுச் சிதைகிறது. ஆணவம் அதிகரிக்கிறது. அது மாதிரியான நிலை வரும் பொழுது அவர்களை விலக்கிட வேண்டும்” என்று தயக்கம் இல்லாமல் சொல்லுகிறார். இந்து மதத்தின் உண்மை நிலைப்பாட்டைத்தான் அவர் கூறுகிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

 இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துக் கொண்டே போகிறது; நாள் ஒன்றுக்கு 63 திருமணமான பெண்கள் தற்கொலை என்பது எதைக் காட்டுகிறது?

படித்த பெண்கள் வேலையில்லாமல் கூலி வேலைகளுக்குச் செல்லும் நிலை இந்தியாவில் அதிகரிக்கிறது. ராஜஸ்தானில் போர்ட்டர் வேலைக்குக் கூடப் படித்த பெண்கள் செல்லும் நிலை உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாட்டில் கோவையில் எம்.எஸ்.ஸி. படித்த ஒரு பெண் நகர சுத்திப் பணியில் சேர்ந்துள்ளார் என்பது இன்றையச் செய்தி.

ஊதிய விகிதத்தில் பாலின வேறுபாடு இந்தியாவில் அதிகம். கிட்டதட்ட 30 விழுக்காடு இடைவெளி இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கூறுகிறது.

இந்த நிலை தொடருமேயானால், இப்பொழுது இந்தியாவில் ஆண்கள் - பெண்கள் இவர்களுக்கிடையே உள்ள ஊதிய வேறுபாடு சமநிலையைத் தொட இன்னும் 170 ஆண்டுகள் தேவைப்படும் என்பதிலிருந்து,  இந்தியாவில் ஜாதியைப் போலவே பெண்ணடிமையும் பிறவிப் பேதத்தின் பெயரால் கட்டமைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது 1996ஆம் ஆண்டு முதல்  நிலுவையில் உள்ளது. இதற்கான சட்டம் நிறைவேற்றப்படாமைக்குக் காரணம் கட்சி களைக் கடந்த ஆண்களின் ஆதிக்க உணர்வே என் பதில் அய்யமில்லை. பெண்கள் வாழ முடியாத 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 77ஆம் இடத்தில் உள்ளது என்பது பெருமைக்குரியது தானா?

பெண்களின் உரிமை மீட்பு குறித்து தந்தை பெரியார் கூறுவது என்ன?

“பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அது போன்றே ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதும்” என்று கூறுகிறார்.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது” என்று தந்தை பெரியார் கூறுவது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை  இந்த உலக மகளிர் நாளில் சிந்திக்க வேண்டும்.

உசிலம்பட்டி அருகேயுள்ள புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது என்பதற்காக அக்குழந்தையைக் கள்ளிப்பால் கொடுத்துக் கொன்ற  கொடுமையை என் சொல்ல! தாய்ப்பால் கொடுக்க வேண்டியவர்களே கள்ளிப்பால் கொடுக்கிறார்களே!

பெண்களே பெண்களுக்கு எதிரி என்று நினைக்கும் அளவுக்கு பெண் களின் மனநிலை மனுதர்மச் சிந்தனைக்கு நீண்ட காலமாக ஆட்படுத்தப்பட்டதன் கொடிய விளைவுதான் இது.

இந்த 2020லும் ஜாதி ஆணவக் கொலைகள் என்பது தலைகுனியத்தக்கது.

சட்டப்படியான வயது அடைந்த ஆணும், பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதை நாடகக் காதல் என்பதும், ஜாதி வெறியால் பெற்றோர்களே கூட தங்கள் பிள்ளைகளைப் படுகொலை செய்வதும் எந்த விலை கொடுத்தேனும் தடுக்கப்பட்டாக வேண்டும்.

திருமண முறிவு  - காதல் திருமணத்தினால் தானா? ஜாதகம் பார்த்து, பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வைத்த  திருமண தம்பதியர் களிடையேதான் மணமுறிவு அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மகளிர் காவல் நிலையங்கள் நாடு தழுவிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். அதன் நோக்கம் நிறைவேறும் வகையிலும் அவை செயல்படவும் வேண்டும். ஆணவக் கொலையில் ஈடுபடுவோர்களை சட்டத்தின் முன் நிறுத்தி காலதாமதம் செய்யாமல் கடுந்தண்டனை அளிக்க வகை செய்யப்பட வேண்டும். மகளிர் உரிமை நாள் என்பது வெறும் சடங்காச்சாரமாக இருக்கக் கூடாது அல்லவா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக