வெள்ளி, 6 மார்ச், 2020

‘மோடி எங்கள் டாடி’ என்று சொன்னவர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? - தி.வேல்முருகன்


அதிமுக அமைச்சரவையே ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசின் கட்டுப்பாட்டில்தான் என்கிறபோது, 
செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு அமைச்சர் மீது, அதுவும் ‘மோடி எங்கள் டாடி’ என்று சொன்னவர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?
 - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

‘விருதுநகர் மாவட்ட அதிமுக அரசியலில் அமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல்போக்கு’ எனச் செய்தி வெளியிட்டது ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ பத்திரிகை. உடனே அந்தப் பத்திரிகையின் செய்தியாளர் கார்த்தி, சிவகாசியில் கொலைவெறித் தாக்குதலுக்கே உள்ளானார்.
உயிருக்கே போராடும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் கார்த்தி. இந்தக் கர்ணகொடூரத்திற்குக் காரணம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்பது அவர் பேசிய தடித்த வார்த்தைகளிலிருந்தே தெளிவாகிறது. “அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன்” - இப்படியான நாராச வார்த்தைகள் அவை.

செய்தியாளர் கார்த்தி மீதான தாக்குதல் என்பது கருத்து சுதந்திரத்தையே காவு கொண்டதாகும்; அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையையே குழி தோண்டிப் புதைத்ததாகும். ஆனால் இதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.


ஏன் நடவடிக்கை இல்லை என்பது தமிழக மக்களுக்குத் தெரியாததல்ல. அதிமுக அமைச்சரவையே ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதும், அதிலும், செய்தியாளர் தாக்கப்பட்டதற்குப் பின்னால் இருக்கும் அமைச்சரோ ‘மோடி எங்கள் டாடி’ என்று சொன்னவர் என்பதும் யாருக்குத்தான் தெரியாது? அப்படியிருக்கையில் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?

ஆனால் மக்களாகிய நாம் இந்த அடாவடியை, ஆணவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.இந்தக் கொலைவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, “நியாயப்படி, சட்டப்படி இதற்குக் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்; அதை அதிமுக அமைச்சரவைக்குத் தலைமை வகிக்கும் பழனிசாமி நிறைவேற்றியாக வேண்டும்” எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக