புதன், 4 மார்ச், 2020

"ஜெயலலிதா அரசு" மூச்சுக்கு முன்னூறு தடவை ஒப்பிக்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அரசு மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா! - தி.வேல்முருகன்


"ஜெயலலிதா அரசு" மூச்சுக்கு முன்னூறு தடவை ஒப்பிக்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அரசு மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா! - தி.வேல்முருகன்

உள்ளாட்சி மற்றும் மாநிலத் தன்னாட்சி அதிகாரத்தை தானாக முன்வந்தே சரண்டர் செய்யும் விதமாக, மோடி அரசின் கட்டளைப்படி கூடங்குளம் அணுவுலைப் பகுதியில் வாழ்வாதாரக் கட்டுமானங்களுக்குத் தடை விதிப்பதையும், அது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தையும் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!


தேசம்-அரசு என்பது எல்லைகளுக்குள் அடங்கிய நிலப்பகுதியைக் குறிப்பதல்ல. மாறாக அது மக்களையே குறிக்கும். மக்கள் வாழாத பகுதிகளை காடு, வயல்வெளி மற்றும் இன்னபிற பெயர்களில்தானே குறிக்கிறோம். எனவே மக்களை மையப்படுத்தியே எல்லாமும். தேசம்-அரசு என்பதும் மக்களுக்காகத்தானே தவிர, தேசம்-அரசுக்காக மக்கள் அல்ல. ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜகவோ அனைத்து மதிப்பீடுகளுக்கும் நேர் எதிரானது.

தேசம்-அரசுக்காகத்தான் மக்கள் என்னும் புராண-புராதன பிற்போக்குக் கொள்கையுடையது. அதனால்தான் அது மக்களாட்சி-சனநாயகத்துக்கே எதிரான சர்வாதிகார, ஃபாசிச வழியில் செல்கிறது. இந்த இழிநடத்தையை பாஜகவின் அடிமையாக அதிமுகவும் பின்பற்றுவதுதான் விநோதம்.

அதாவது கூடங்குளம் பகுதியில் வீடுகள் கட்ட அணுவுலை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஓர் ஆணையைப் பிறப்பித்து, அதற்காக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தையும் நடத்துகிறது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிமுக அரசு.

இது அணுவுலைக்கெதிராகப் போராடும் மக்களின் அச்சத்தை உறுதி செய்வதல்லவா! அன்றைய முதல்வர் ஜெயலலிதா, போராடும் மக்களுக்கு அளித்த உறுதிமொழிக்கு மாறானதல்லவா! அவரது அரசுதான் இது என மூச்சுக்கு முன்னூறு தடவை ஒப்பிக்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அரசு மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா!

எல்லாவற்றையும் விட இது மக்களாட்சி-சனநாயகத்திற்கே, நமது அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானதல்லவா! கீழிருந்துதான் மேல் நோக்கிச் செல்வதுதான் மக்களாட்சி-சனநாயகம் என்கிறது அரசமைப்புச் சட்டம். அதாவது உள்ளாட்சி அமைப்புகள்தான் சனநாயகத்தின் அடிப்படை! ஆனால் அதனைத் தலைகீழாக்குகிறது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அரசு. மாநிலத் தன்னாட்சியே திராவிட இயக்கத்தின் முதன்மைக் குறிக்கோள் என வரையறுத்த அண்ணாவின் பெயரிலான கட்சியே இதைச் செய்வது அண்ணாவுக்கே செய்யும் துரோகமல்லவா!

கூடங்குளம் அணுவுலையில் இருந்து 5 கிலோமீட்டருக்குள் வீடுகள், கடைகள் கட்டுவதற்கு அல்லது விரிவாக்கம் செய்வதற்கு அணுவுலை நிர்வாகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்பது, நாளை அந்தப் பகுதி வாழ் மக்கள் தங்கள் ஊர்களையே காலி செய்ய வேண்டும் என்பதில் போய்தான் முடியும். அதற்காகத்தான் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று கருத்துக்கேட்புக் கூட்டம் நடக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எனவே ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசின் அறிவுறுத்தல்படி, கூடங்குளம் அணுவுலையில் இருந்து 5 கிலோமீட்டருக்குள் வீடுகள், கடைகள் கட்டுவதற்கு அல்லது விரிவாக்கம் செய்வதற்கு அணுவுலை நிர்வாகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற அரசாணையையும், அது தொடர்பாக ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெறும் கருத்துக்கேட்புக் கூட்டத்தையும் திரும்பப்பெற வேண்டும் எனக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக