வியாழன், 12 மார்ச், 2020

“NPR கணக்கெடுப்புக்கு 'ஒத்துழையாமை இயக்கம்’ நடத்தினால் திமுக துணை நிற்கும்” - மு.க.ஸ்டாலின் உரை



“NPR கணக்கெடுப்புக்கு 'ஒத்துழையாமை இயக்கம்’ நடத்தினால் 
திமுக துணை நிற்கும்” - மு.க.ஸ்டாலின் உரை.

உங்களை நான் முன்கூட்டியே வந்து பார்த்திருக்க வேண்டும். ஆனால், மிகவும் லேட்டாக வந்திருக்கிறேன். லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறேன். நான் ஏன் வந்திருக்கிறேன் என்றால், எங்களை போன்றவர்கள் உங்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவதாக ஒரு தவறானப் பிரச்சாரத்தை பலர் செய்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.


அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிடக்கூடாது என்று தான் கூடுமான வரையில் தவிர்த்துக் கொண்டு வந்தேன். நான் தவிர்த்திருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உங்களை வந்து சந்தித்து, உங்களுக்கு ஆறுதல் தருகின்ற நிலையில் இருந்தார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

இன்று நான் சட்டமன்றத்தில் இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பற்றி எடுத்துப் பேசிய நேரத்தில், அங்கு நடந்திருக்கக்கூடிய விவாதங்கள், அதற்கு பிறகு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தோழர்கள் இன்று மாலை சந்தித்து நன்றி தெரிவித்து, “நாங்கள் நடத்தும் போராட்டத்தில் பங்குபெற்று எங்களை பெருமைப்படுத்த வேண்டும்” என்று சொன்னார். நான் பெருமைப்படுத்துவதற்காக வரவில்லை. உங்களிடத்தில் ஒரு வேண்டுகோளை எடுத்து வைப்பதற்காக நான் வந்திருக்கிறேன்.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி இந்தப் போராட்டம் தொடங்கியிருக்கிறது. ஏறக்குறைய 27 நாட்களாக இந்த மண்ணடி பகுதியில் இருக்கும் நீங்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன், ஒருமித்த கருத்துடன், உறுதியுடன் மிகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் போராட்டம் மண்ணடி பகுதியில் மட்டுமல்ல. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஏன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தப் போராட்டம் பல்வேறு கோணங்களில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்தப் போராட்டம் தொடர் போராட்டமாக, உண்ணவிரதப் போராட்டமாக, பேரணியாக, ஆர்ப்பாட்டமாக, கண்டனக்கூட்டங்களாக, மனித சங்கிலி போன்ற பல்வேறு போராட்டங்களாக நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி சிஏஏ என்ற இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து, அதன் மூலமாக என்.பி.ஆர்., என்.ஆர்.சி. என்கிற சட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தச் சட்டத் திருத்தம் இஸ்லாமியப் பெருமக்களுக்கு மட்டும் ஏற்பட்ட இன்னல்கள் அல்ல. ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட துன்பம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பொதுவாக முஸ்லீம்களுக்காக, இந்துக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்களின் உரிமைக்காக நாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடந்தது. நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை, மக்களவை என்ற இரண்டு சபைகள் உள்ளது. மக்களவையைப் பொறுத்தவரையில், பா.ஜ.க. அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதனால் அந்தத் தீர்மானம் எளிதாக அங்கு நிறைவேறிவிடும். அந்த சபையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நமது கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார்கள். இருந்தாலும், பா.ஜ.க. உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்த காரணத்தினால் அங்கு வெற்றி பெற்றது. ராஜ்ய சபாவில் வெற்றி பெற்றால் தான் சட்டம் நிறைவேறும். ராஜ்ய சபாவைப் பொறுத்தவரையில், பா.ஜ.க.வுக்கு பெரும்பாண்மை கிடையாது.கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்தால் பெரும்பாண்மை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் பா.ஜ.க வெற்றி பெற முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் அந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் அதிமுகவைச் சார்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் 11 பேர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த அன்புமணி ராமதாஸ் உட்பட 12 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த 12 உறுப்பினர்களும் ராஜ்யசபாவில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, இந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தச் சட்டமே நிறைவேறியிருக்காது. ஆனால், ஆதரித்து வாக்களித்ததனால் இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டது. அது தான் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை. இந்தக் கொடுமை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் மிகப்பெரிய கொடுமையை, அநியாயத்தை செய்திருக்கிறார்கள். இந்தத் துரோகத்தை செய்த அவர்களை நாம் சும்மா விடலாமா? அதனால் தான் இந்தப் பிரச்சனை இன்று உருவாகியிருக்கிறது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தான் முதலில் குரல் கொடுத்தது. எந்த மாநிலத்திலும் செய்ய முடியாத நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினோம். நம்முடைய தோழமைக் கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, உடனடியாக இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் போட்டோம். முதன்முதலில் இந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய பேரணியை நடத்தியது நாம் தான். திமுகழகத்தைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய பேரணியை நடத்தினோம்.அதன்பிறகு பல மாநிலங்களில் பேரணி, போராட்டங்கள் எல்லாம் நடக்கத் தொடங்கியது. கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 8 நாட்கள் நடந்தது. ஒருகோடி கையெழுத்தை வாங்க வேண்டும் என்றுதான் திட்டமிட்டோம். மக்கள் தாங்களாகவே முன்வந்து கையெழுத்து போடுகிறோம் என்று எல்லாத் தரப்பு மக்களும் நம்முடைய நாட்டிற்கு ஆபத்து என்று அவர்களே மனமுவந்து இரண்டு கோடி பேர் கையெழுத்து போட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக