சனி, 4 செப்டம்பர், 2021

பிரிக்ஸ் செயல்திட்டம் 2025-ன் லட்சியங்களை அடைவதற்காக வர்த்தகம் மற்றும் முதலீட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கான பொது செயல்பாடுகளை இந்தியா வகுத்துள்ளது.- திரு பியுஷ் கோயல்


 பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்களின் 11-வது கூட்டம் இந்தியாவின் தலைமையின் கீழ் காணொலி மூலம் 2021 செப்டம்பர் 3 அன்று நடைபெற்றது.

வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியுஷ் கோயல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பிரிக்ஸ் நாடுகளின் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா) வர்த்தக மற்றும் பொருளாதார அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். 

தொடக்கவுரை ஆற்றிய திரு கோயல், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்சவம் கொண்டாடப்படும் வேளையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை வரவேற்றார்.

கொவிட்-19 பாதிப்பு குறித்து குறிப்பிட்ட அவர், இந்தியாவால் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி வழங்கலில் எட்டப்பட்டு வரும் மைல்கள் மற்றும் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக வழங்கப்பட்ட நிதி ஆதரவு குறித்தும் எடுத்துரைத்தார்.

பிரிக்ஸ் செயல்திட்டம் 2025-ன் லட்சியங்களை அடைவதற்காக வர்த்தகம் மற்றும் முதலீட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கான பொது செயல்பாடுகளை இந்தியா வகுத்துள்ளது.

பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை அளிப்பதற்காக பிரிக்ஸ் அமைச்சர்கள் இந்தியாவை பாராட்டினர். 11-வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்களின் கூட்டறிக்கை மற்றும் இந்தியாவால் முன்மொழியப்பட்ட ஐந்து இதர ஆவணங்களுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்தனர்.

பணிசார்ந்த சேவைகள், மரபணு வளங்கள், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மின் வணிகம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திரு பியுஷ் கோயல் நன்றி தெரிவித்ததோடு, எதிர்வரும் ஜி-20 மற்றும் எம்சி-12 கூட்டங்களில் மீண்டும் சந்திப்பதற்கான ஆவலை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக