வியாழன், 2 செப்டம்பர், 2021

கொரோனா பெருந்தொற்று சராசரி நடைமுறைகளை பாதித்துள்ளதாகவும், எனவே ஃபிட் இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்துள்ளது.- திரு தர்மேந்திர பிரதான்


 விளையாட்டு மற்றும் உடல்நலம் குறித்த நாடு தழுவிய முதல் வினாடி வினாவான ஃபிட் இந்தியா வினாடி வினா போட்டியை  மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாகூர் ஆகியோர் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் திரு நிசித் பிரமானிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். டோக்கியோ ஒலிம்பிக் வெற்றி வீரர்கள் நீரஜ் சோப்ரா மற்றும் பி வி சிந்து ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர். பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

உடல் நலம் மற்றும் விளையாட்டு குறித்து பள்ளி குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேசிய அளவிலான களத்தில் போட்டியிடும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவது இந்த வினாடி வினாவின் நோக்கமாகும்.

ரூபாய் மூன்று கோடிக்கும் அதிகமான பரிசுத் தொகையை  அவர்களது பள்ளிகளுக்காக மாணவர்களால் இந்த போட்டியின் மூலம் வெல்ல முடியும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வரும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், உடல்நலம் மற்றும் கல்விக்கு இடையே வலுவான பிணைப்பு இருப்பதாக கூறினார். உடல்நலனை வாழ்நாள் நோக்கமாக மாணவர்கள் பின்பற்றும் வகையில் விளையாட்டு சார்ந்த கற்றல்கள் மீது தேசிய கல்விக் கொள்கை 2020 சிறப்பு கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கொரோனா  பெருந்தொற்று சராசரி நடைமுறைகளை பாதித்துள்ளதாகவும், எனவே ஃபிட் இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறினார். மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த தேசிய அளவிலான வாய்ப்பை இந்த வினாடி வினா வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு தாகூர், "உடல்நலம் எவ்வளவு முக்கியமோ மன நலமும் அந்த அளவுக்கு முக்கியமானது. ஃபிட் இந்தியா வினாடி வினாவின் மூலம் சிறு வயதிலேயே மூளை கூர்மை உருவாகி விளையாட்டு பற்றிய அறிவும் அதிகரிக்கும். இந்தியாவுக்கு பரந்துவிரிந்த விளையாட்டு வரலாறு உள்ளது. நமது ஒலிம்பிக் வெற்றியையும் அதனுடன் இணைத்து நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்க பாடுபடுவோம்," என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், முழுமையான கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார் என்றும் குழந்தைகளுடனான அவரது உரையாடல், மாணவர்கள் கற்றுக் கொண்டு வளர்ச்சி அடைவதற்கான அழுத்தம் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது என்றும் கூறினார். இதை சார்ந்து வினாடி வினா போட்டி நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

திரு நிசித் பிரமானிக் பேசுகையில், அனைத்து வயது பிரிவை சேர்ந்த மக்களும் ஃபிட் இந்தியா இயக்கத்தில் கலந்து கொண்டதாகவும், அனைத்து பள்ளிகளும் வினாடி வினாவில் பங்கேற்று புதிய இந்தியாவை உடல் நலம் மிக்க இந்தியாவாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக