சனி, 4 செப்டம்பர், 2021

இன்றைய தேவை, பொருள் செல்வம் மட்டுமல்ல, ஆன்மீக செல்வமும் தான் என்பதை ஒவ்வொரு மனிதரும் உணர வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 மதம், பகுதி, மொழி, சாதி, இனம் அல்லது நிறத்தின் அடிப்படையில் சமுதாயத்தை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

நமது 75-ஆவது சுதந்திர ஆண்டில்  பரந்த சமூகத்தில் ஒற்றுமை மற்றும் இணக்கத்தை மேலும் வலுப்படுத்த ஒவ்வொரு இந்தியரும் உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச பள்ளியில் ஸ்ரீ  அரவிந்தரின் வாழ்க்கை குறித்த புகைப்படக் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் சிறப்பான எதிர்காலத்திற்காக, அனைத்து பிரிவினைகளையும் களைவது அவசியம் என்று கூறினார். மதத்தின் நேர்மறை அம்சங்களை எடுத்துரைத்த அவர், ஒவ்வொருவரும் தமது மதத்தின் உண்மையான உணர்வு நிலையை பின்பற்றினால், மத சச்சரவுகளே ஏற்படாது என்றார்.

சிறப்பான கலாச்சார மற்றும் ஆன்மீக இந்தியாவை மீண்டும் உருவாக்க ஸ்ரீ அரவிந்தர் அறைக்கூவல் விடுத்ததை நினைவுகூர்ந்த திரு நாயுடு, இந்தியாவின் தலைசிறந்த கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக ஆன்மீகம் விளங்குவதாகவும், நமது அன்றாட வாழ்க்கையில் அதனைப் பின்பற்றுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார். ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியும், செல்வத்தின் உருவாக்கமும் முடிவு அல்ல என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், மாறாக அவை, மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுவதற்கான காரணிகள் மட்டுமே என்றும் இதுவே நமது நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“இன்றைய தேவை, பொருள் செல்வம் மட்டுமல்ல, ஆன்மீக செல்வமும் தான் என்பதை ஒவ்வொரு மனிதரும் உணர வேண்டும்”, என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக ஒற்றுமைக்கான ஸ்ரீ அரவிந்தரின் தொலைநோக்குப் பார்வையை புதுச்சேரியில் உள்ள ஆரோவில் எடுத்துரைப்பதாக குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக