வியாழன், 2 ஜனவரி, 2020

இந்தியஅரசு இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும் - ஜி.கே.வாசன்

இந்தியஅரசு இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும் - ஜி.கே.வாசன் 
இலங்கையின் தேசிய சுதந்திர நிகழ்வில் தேசியகீதம் ஏற்கனவே தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்டு வந்தது போல தொடர்ந்து தமிழ் மொழியிலும் இசைக்கப்பட வேண்டும் என்பதை இந்தியஅரசு இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும்

இலங்கையின் 2020 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசு தீர்மானித்திருப்பது ஏற்புடையதல்ல. 

காரணம் இதுவரையில் தேசிய கீதம் தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் பாடப்பட்டு வந்த நிலையில் திடீரென்று சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்திருப்பது தமிழர்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் அமைந்து விடும். 

குறிப்பாக இலங்கையின் அரசியல் அமைப்பில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 1978 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மற்றும் தமிழ் மொழியில் எப்படி இசைக்கப்பட வேண்டும் என்று தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என்று தீர்மானித்தால் அது மத நல்லிணக்கத்திற்கும், இன நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இருக்காது. அது மடுமல்ல இலங்கையின் தேசிய கீதமானது தமிழ் மொழியிலும் பாடப்பட வேண்டும் என்பது தான் இலங்கை வாழ் தமிழ் மக்களின் உரிமையாக இருக்கிறது.

 இதனையே உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  இலங்கையை சிங்கள மக்களுக்கு மட்டுமல்லாமல் அங்குள்ள தமிழ் மக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவான நாடாக எண்ணி ஏற்கனவே நடைமுறையில் பின்பற்றியபடி தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் பாட வேண்டியது இலங்கை அரசின் கடமை. 

அதே போல சிங்கள மக்களுக்கு உள்ள அதிகாரம், உரிமைகள், பாதுகாப்பு, சலுகைகள் போன்றவை அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடில்லாமல் கிடைக்க வேண்டும். 

தற்போது இலங்கை அரசு தீர்மானித்தபடி சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றால் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்கும் ஊறுவிளைவிக்கும். 

எனவே இந்திய அரசு இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு இலங்கையில் தேசிய கீதமானது தமிழ் மொழியிலும் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்பட தெரிவித்து இலங்கை வாழ் தமிழ் மக்களின் சுதந்திரமான, பாதுகாப்பான வாழ்விற்கு பாதுகாப்பாக விளங்க வேண்டும் என்று இப்புத்தாண்டின் தொடக்கத்தில் த.மா.கா சார்பில் இந்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக