வெள்ளி, 3 ஜனவரி, 2020

நம் தாய்மொழியைச் சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின்

“இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளைப் புகுத்தி - நம் தாய்மொழியைச் சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.” -  மு.க.ஸ்டாலின்

சென்னையில் இன்று மாலை (02.01.2020) நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 40ம் ஆண்டு இசை விழாவைத் தொடங்கி வைத்து, தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையையும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், முத்தமிழ்ப் பேரவை சார்பில் விருதுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

முத்தமிழ்ப் பேரவை விழாவில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:


முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கும் இந்தப் பேரவையில், தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கும் திருவாவடுதுறை ராஜரத்தினம் கலையரங்கில், தலைவர் கலைஞர் அவர்களின் மருமகன் திரு. அமிர்தம் அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையை, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் மகனாகிய நான் திறந்துவைத்திருக்கிறேன்.

இது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது என்று சொன்னால், அது நிச்சயம் மிகை ஆகாது. கலைஞர் அவர்கள் உருவாக்கிய அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்தோம். தலைவர் கலைஞர் அவர்களை உருவாக்கிய ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த மண்ணான ஈரோட்டில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்தோம்.

தலைவர் கலைஞர் அவர்களை நமக்கு உருவாக்கித் தந்த பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை திறந்து வைத்தோம்.பல்வேறு திருப்புமுனைகளைக் கலைஞருக்கு உருவாக்கித் தந்த திருச்சியில் தலைவர் கலைஞரின் அவர்களின் சிலையைத் திறந்து வைத்தோம். கலைஞரின் திரைத்துறைக்கு அடித்தளம் அமைத்த சேலத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்தோம்.

அவரது மூத்தபிள்ளையாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கும் முரசொலி வளாகத்தில் தலைவர் கலைஞரின் சிலையைத் திறந்து வைத்துள்ளோம். இன்று கலைஞர் உருவாக்கித் தந்த இந்த முத்தமிழ்ப் பேரவையில் இடம்பெற்றுள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் கலையரங்கத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்துள்ளோம்.

இப்படிக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் நகரிலும் கலைஞர் சிலையைத் திறந்தாக வேண்டும். திறக்கப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. காரணம் எல்லா ஊர்களோடும் தன்னை இணைத்து, பிணைத்துக் கொண்டவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்து திருவாரூர் நகரத்தில் படித்து வளர்ந்து, நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேறும் அளவுக்கு முத்தமிழில் பேசி திராவிட இயக்கத்தை வளர்த்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அவர் ஒரு குடும்பத்தின் சொத்து அல்ல. ஒரு இயக்கத்தின் சொத்து அல்ல. இந்த இனத்தின் சொத்தாக அவர் இருக்கும் காரணத்தால்தான் நாடு முழுவதும் அவருடைய சிலையைத் திறந்து வைக்கக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

தந்தை பெரியாராக இருந்தாலும், அறிஞர் அண்ணாவாக இருந்தாலும், தலைவர் கலைஞராக இருந்தாலும், அவர்களது சிலைகள் திறக்கப்படுவது அவர்களைப் பெருமைப் படுத்துவதற்காக அல்ல. அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றியை இதன் மூலமாக செலுத்துகிறோம். அத்தகைய நன்றியின் அடையாளமாக இந்தப் பேரவையில் தலைவர் கலைஞரின் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த முத்தமிழ்ப் பேரவை எப்படி தொடங்கப்பட்டது என்பது பற்றி, நம்முடைய மதிப்பிற்குரிய இயக்குநர் அமிர்தம் அவர்கள் நேரத்தின் அருமை கருதி சுருக்கமாகச் சொல்லி இருந்தாலும், வழுவூர் ரவி அவர்கள் விளக்கமாக உங்களிடத்தில் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறார்கள்.

முதன் முதலில் 1975 ஆம் ஆண்டு வழுவூர் இராமையா பிள்ளை அவர்களைத் தலைவராகவும், குளிக்கரை பிச்சையா பிள்ளை அவர்களை செயலாளராகவும், தஞ்சை தியாகராஜன் அவர்களைப் பொருளாளராகவும் இணைத்து உருவாக்கப்பட்டது இந்த முத்தமிழ்ப் பேரவை . இந்தப் பேரவைக்கு இயக்குநர் அமிர்தம் அவர்கள், தற்போது செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். திரு. ஈ.வி. ராஜன் அவர்கள் பொருளாளராக உள்ளனர்.

சற்றேறக்குறைய 44 ஆண்டு காலமாக இந்தப் பேரவை உற்சாகமாக, சிறப்பாக செயல்பட்டு வருவது உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒன்று. அதற்காக என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுகளை உங்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எந்த அமைப்பையும் உருவாக்குவது மிகவும் எளிது. ஆனால் அதை முறைப்படுத்தி, ஒழுங்கு படுத்தி நடத்துவது என்பது, அரிது. வள்ளுவர் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்" என்ற குறளுக்கேற்ப முத்தமிழ்ப் பேரவையை உருவாக்கி அதனை இயக்குநர் அமிர்தம் அவர்களின் கையில் தீர்க்க தரிசனத்துடன் தலைவர் கலைஞர் அவர்கள் ஒப்படைத்துள்ளார்.

இத்தனை ஆண்டு காலமாக சிறப்பாக, அந்த உற்சாகம் குறையாமல் நடத்தி வருகிறார் நம்முடைய அமிர்தம் அவர்கள். காரணம் தலைவர் கலைஞர் அவர்களால் வளர்க்கப்பட்டவர். தலைவர் கலைஞரைப் பார்த்து வளர்ந்தவர் அவர்.

தலைவர் கலைஞர் அவர்களின் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் திரு.அமிர்தம் அவர்கள். பூம்புகார், பூமாலை, மறக்கமுடியுமா என 1964 முதல் 1994 வரைக்கும் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்து பணியாற்றியவர் அமிர்தம் அவர்கள்.

‘மறக்க முடியுமா’ திரைப்படத்திற்கு கதைவசனம் தலைவர் கலைஞர் அவர்கள், ஒளிப்பதிவாளர் அமிர்தம் அவர்கள், இயக்குநர் முரசொலி மாறன் அவர்கள். அதை மறக்க முடியுமா? அத்தகைய மறக்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரர். அமிர்தம் அவர்கள் பவ்யமாக, அடக்கமாக, எந்தப் பணியாக இருந்தாலும் அதனை ஆற்றக்கூடியவர். ஆனால் கண்டிப்பானவர். பள்ளியில் படிக்கும் காலத்தில் அவரிடத்தில் நானே அடி வாங்கி இருக்கிறேன்.

அத்தகைய கண்டிப்பானவர் கையில்தான் இந்தப் பேரவை ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைவர் கலைஞர் அவர்கள் நம்பிக்கையோடு ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு, இயல் செல்வம் விருது மதிப்பிற்குரிய சுகிசிவம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இசைச் செல்வம் விருதை திரு. ஜாகீர் உசேன் அவர்களும், ராஜரத்னா விருதை திரு எம்.எஸ்.கே. சங்கரநாராயணன் அவர்களும், தவில் செல்வம் விருதை திருக்கடையூர் டி.ஜி.பாபு அவர்களும் பெற்றிருக்கிறார்கள். முத்தமிழ்ப் பேரவை சார்பில் வழங்கக்கூடிய விருதுகள் எல்லாம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதற்கு, ஏற்கனவே விருது வாங்கியவர்களை அடையாளம் காட்டினாலே போதும்.

தலைவர் கலைஞர் அவர்களே இந்த முத்தமிழ்ப் பேரவையில் விருது பெற்றுள்ளார்கள். இதை விட வேறு என்ன வேண்டும்? முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள், நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள், நாட்டியகலா கேசரி வழுவூர் ராமையா பிள்ளை அவர்கள், மதுரை என்.பி.என். சேதுராமன் அவர்கள், எம்.எல். வசந்தகுமாரி அவர்கள் , டி.கே. பட்டம்மாள் அவர்கள், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள், வீணை எஸ். பாலச்சந்தர் அவர்கள், பாலமுரளி கிருஷ்ணா அவர்கள், இளையராஜா அவர்கள், பத்மாசுப்பிரமணியம் அவர்கள், இயக்குநர் பாலசந்தர் அவர்கள், வைரமுத்து அவர்கள், அப்துல் ரகுமான் அவர்கள், இப்படி மிகப் பெரிய பட்டியலே போடலாம்..

தமிழகத்தில் சிறந்து விளங்கிய முத்தமிழ் வித்தகர்கள் அனைவருக்கும் விருது வழங்கிய பெருமை இந்த முத்தமிழ்ப் பேரவைக்கு உண்டு என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த வரிசையில் இன்றைக்கு விருது பெற்றவர்களும் தங்களது பெயரை இணைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை எண்ணி அவர்களைப் பாராட்டுகிறேன்; மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப் படுகிறேன்.

இயல் செல்வம் விருது பெற்றுள்ள சுகிசிவம் அவர்கள் - அவரே சொன்னார் - அவர் படித்த கல்லூரியில்தான் நானும் படித்தேன். அதை அவர் பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார். விருது பெறுவேன் என்று அன்று நினைக்கவில்லை என்று சொன்னார். ஆனால் விருது பெறும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். அவருக்கு விருது வழங்கும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்றும் சொன்னார். நானும் அதைத்தான் எண்ணிப் பார்க்கிறேன்.

தலைசிறந்த பேச்சாளர்கள் என்று பட்டியலிட்டால் அதில் பத்து பேருக்குள் நிச்சயமாக சுகிசிவம் பெயர் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. வாட்சப்பில் கேட்டிருப்பீர்கள். நானும் இரவு நேரங்களில், தூக்கம் வருவதற்காக அல்ல; சிலருடைய தூக்கத்தைக் கெடுப்பதற்காக அவருடைய பேச்சைக் கேட்பதுண்டு.

வாட்ஸ்அப் வாரியார் என்று ஒரு பட்டமே அவருக்கு தரலாம். அந்த அளவிற்கு இளைஞர்களை ஈர்க்கும் பேச்சாற்றல் பெற்றவர் சுகிசிவம் அவர்கள். கடவுளின் பெருமையைச் சொல்வதைப் போலவே கலைஞரின் பெருமைகளையும் எடுத்து சொல்வார். அவரிடம் இருந்து வெளிப்படக்கூடிய பேச்சில் ஒரு தனிச் சுவை இருக்கும். இளமையான அழகு கொண்ட சொற்கள் இருக்கும். சமீபத்தில் அவருடைய பேச்சு சர்ச்சைக்குள்ளனாது. ஆனால் அதில் உறுதியாக இருந்து அந்த எதிர்ப்பைச் சமாளித்தவர் சுகிசிவம் அவர்கள். அவர் அதிகமாக ஆன்மிகம்தான் பேசுவார் என்றாலும், அவருக்கு ஏன் இயல் செல்வம் விருது தரப்படுகிறது என்று சொன்னால், அவர் தமிழுக்கு விரோதமாக, தமிழர்களுக்கு விரோதமாக என்றைக்கும் இருந்ததில்லை.

அந்த அடிப்படையில் சுகிசிவம் அவர்களின் பேச்சுக்கு உன்னத மரியாதை இங்கு தரப்பட்டிருக்கிறது. அதேபோல் தான் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு இசைச் செல்வம் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவையும் கடந்து உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் டி. எம். கிருஷ்ணா அவர்கள்.

இந்த விருதைப் பெறுவதற்கு மிகப் பொருத்தமானவராக அமைந்திருக்கிறார். எத்தனையோ கலைஞர்களுக்கு மத்தியில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதற்கான காரணம் இசையோடு அவர் தனது எல்லையை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த இசைக் கலையை தத்துவமாக அனைவருக்கும் பொதுவான கலையாக மாற்றும் இசைச் சீர்திருத்தத்தைச் செய்து, இசைப் போராளியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். இசையை ஓர் அறவழி ஆயுதமாக ஏந்தி, மக்கள் நலனுக்கான டி.எம். கிருஷ்ணா அவர்கள் முன்னிற்கிறார்.

எங்கே அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கே தன் நியாயக் குரலை ஒலிக்க கூடிய கிருஷ்ணனாகவும் அவர் இருக்கிறார். அதனால்தான் டி. எம். கிருஷ்ணா அவர்களைத் தேர்ந்தெடுத்து அந்த விருதைத் தந்திருக்கிறார்கள். அதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.

திரு. ஜாகிர் உசேன் அவர்களுக்கு நாட்டியச்செல்வம் விருது வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பொறியியல் கல்லூரியில் படித்திருந்தாலும் நாட்டியத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, சென்னை வந்து குறிப்பிடத்தக்க நாட்டியக் கலைஞராகவும் நடன இயக்குநராகவும் விளங்குகிறார் திரு. ஜாகிர் உசேன் அவர்கள்.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை அறிந்து – உணர்ந்து அவற்றைத் தனது நாட்டியக் கலையின் மூலமாக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் அரும்பணியை திரு ஜாகீர் உசேன் அவர்கள் ஆற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவருக்கு எனது பாராட்டுக்களை, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து எம்.எஸ்.கே. சங்கர நாராயணன் அவர்களுக்கு ராஜரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் இசைக் கருவிகளில் நாதஸ்வரம் தனித்துவமானது. அதனை வாசிப்பதற்கு வலிமை வேண்டும். தாக்குப் பிடிப்பதற்குரிய தன்மையும் வேண்டும். இந்த அரங்கத்தின் பெயரே அவருடைய பெயரில்தான் அமைந்துள்ளது. அந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்களே நாதஸ்வர கலைஞர் தான். நாதஸ்வர கலையில் பேரரசராக விளங்கியவர். அதுமட்டுமல்ல சுயமரியாதை கொண்டவராக விளங்கி இருக்கிறார். அந்த உணர்வை சக இளைஞர்களுக்கும் ஊட்டியவர். அந்த வரிசையில் நாதஸ்வரக் கலைக்கான பெருமையையும், அந்த கலைஞர்களுக்கான சுயமரியாதையையும் தொடர்ந்து காத்து வருகின்ற திரு. சங்கர நாராயணன் அவர்களுக்கு ராஜரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவருக்கு பாராட்டுக்களை, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அடுத்து, திருக்கடையூர் பாபு அவர்களுக்கு தவில் செல்வம் விருது வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 35 ஆண்டு காலமாக உள்நாட்டில் மட்டும் அல்லாமல், வெளிநாடுகளுக்கும் சென்று தன்னுடைய தவில் இசையை, காற்றிலே தவழவிட்டு வருபவர் திருக்கடையூர் பாபு அவர்கள்.

நாதஸ்வரத்துக்கு இணையாக தமிழ் இசைக் கலையில் முக்கியத்துவம் வாய்ந்தது தவில் என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய சிறப்பான தவில் இசையை வழங்கி வரக்கூடிய, திருக்கடையூர் பாபு அவர்களுக்கு தவில் செல்வம் விருது வழங்கப்பட்டுள்ளதைப் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.

விருது பெற்றிருக்கும் அனைவரையும் இந்த முத்தமிழ்ப் பேரவையின் சார்பில், இன்றைக்கும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன். 40 ஆண்டு காலமாக கலைஞர் இருந்து இந்தப் பேரவையை வழி நடத்தி இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்; உண்மைதான்.

அவர் நம்மைவிட்டுப் பிரிந்த காரணத்தால், அதே நேரம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தால் இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பதை திரு. அமிர்தம் அவர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள். இந்த ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிராக இருந்து கவனித்தவர், இப்போது சிலையாக இருந்து இந்த நிகழ்ச்சியைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் காப்பதுதான், மறைந்த நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்மையாக நாம் செலுத்தக்கூடிய அஞ்சலி ஆகும். நாட்டில் முத்தமிழுக்கு தற்போது சோதனை வந்திருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளைப் புகுத்தி, நம் தாய் மொழியைச் சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனை எதிர்கொண்டாக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். அந்த வல்லமை நிச்சயம் நம்முடைய தமிழுக்கு உண்டு. “தமிழுக்கு அமுதென்று பேர்”என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் தமிழை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்தாக வேண்டும். தமிழை முதலிடத்திற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும். அறிஞர் அண்ணா ஆட்சி அமைந்த பிறகுதான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் பெற்றது.

தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தான் தமிழ் மொழிக்கு ‘செம்மொழி’என்ற அங்கீகாரம் கிடைத்தது. இப்படி ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை, செய்ய முடிந்ததை செய்து காட்டியிருக்கிறார்கள். அதே வழியில், ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச் செய்தால், இந்த மொழியை, இனத்தை எவராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

விருது பெற்றவர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்களைச் சொல்லிப் பாராட்டுகிறேன். முத்தமிழ்ப் பேரவையில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, அதில் முழு வெற்றி பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இயக்குநர் அமிர்தம் அவர்களுக்கு நன்றியைச் சொல்லி, பாராட்டி விடைபெறுகிறேன் வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக