வியாழன், 2 ஜனவரி, 2020

முதலமைச்சரின் மைத்துனர் திரு. வெங்கடேசன், வாக்கு எண்ணும் மையத்திலேயே இருந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

”உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் முறைகேடுகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் துணை போகிறது” -  மு.க.ஸ்டாலின்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கி முந்திக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 85 சதவீதத்திற்கு மேல் எங்களுடைய கூட்டணி எல்லா இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த வெற்றியை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக அரசு, அதிகாரிகள், காவல்துறையினரின் துணையோடு, திட்டமிட்டு, சதி செய்து பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. 

குறிப்பாக முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் சொந்த  மாவட்டத்தில், தொகுதியில் உள்ள எடப்பாடியில் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய வெற்றியை இதுவரை அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்ற புகாரை, அந்த பகுதியில் இருக்கக்கூடிய எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். 

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இருக்கும் கொளத்தூர் தொகுதியில் 800 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார். அதை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அதே பகுதியில் சில அதிமுகவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். அதை அறிவித்துவிட்டு பிறகுதான் இதை அறிவிப்போம் எனக் கூறி அதிகாரிகள் கலைந்து சென்றுள்ளனர். அதேபோல் கொங்கநாதபுரம், எடப்பாடி, சங்ககிரி, போன்ற பகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருப்பதாகவும், முன்னணியில் இருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. அவற்றையும் இதுவரை அறிவிக்கவில்லை.

முதலமைச்சரின் மைத்துனர் திரு. வெங்கடேசன், வாக்கு எண்ணும் மையத்திலேயே இருந்து கொண்டு,  செல்போன் மூலமாக கூறிவரும் வழிகாட்டுதலின்படித்தான் அங்கிருக்கும் அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் எங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் திண்டுக்கல் வத்தலக்குண்டு ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் 112 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதை அறிவிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார்கள்.

மீஞ்சூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் 176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதையும் இன்னும் அறிவிக்கவில்லை. துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டத்தில் உள்ள போடி ஒன்றியத்தில், திமுக முன்னணியில் இருக்கிறது. அதையும் இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள். தூத்துக்குடி பூதலூர் ஒன்றியத்தில் திமுக முகவர்களை அடித்து விரட்டிவிட்டு அதிமுக வேட்பாளர்களை வைத்து வாக்குகளை எண்ணுகின்றனர். வந்தவாசி கீழ்கொவலவேடு ஒன்றியத்தில் 1வது வார்டிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், 3 வாக்குப் பெட்டிகளையே காணவில்லை. ஆகவே இவையெல்லாம் திட்டமிட்டு நடைபெறுகிறது. கிடைத்த செய்திகளை வைத்துத்தான்  இவற்றைச் சொல்கிறேன். இதுபோல் பல இடங்களில் ஆளும்கட்சி முறைகேட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. திமுக பல இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது என்ற காரணத்தால், இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை குறித்தெல்லாம் கழக வழக்கறிஞர்கள், தொடர்ந்து இங்கிருக்கும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தந்து வருகிறார்கள். அந்தந்த மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், எதற்கும் எந்த பதிலும் கிடையாது. அதனால்தான் நானே பொருளாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு நேரடியாகவே தேர்தல் ஆணையரை வந்து சந்தித்து இந்தப் புகார்களை அளித்திருக்கிறேன். இது போன்று பல புகார்களைச் சொல்லி இருக்கிறோம். எந்த பதிலும் இல்லை. இதற்காவது பதில் வேண்டும் என்று கூறி இருக்கிறோம். எங்கள் முன்னிலையிலேயே தேர்தல் ஆணையர் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் அழைத்து புகார்கள் குறித்துப் பேசினார். அரைமணிநேரத்தில் நடவடிக்கை எடுப்போம் என்ற உறுதியையும் அளித்திருக்கிறார். அந்த உறுதியை நம்பித்தான் நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்கிறோம். 

இதனிடையே,  இன்று மாலை நீதிமன்றத்திற்கும் இந்தப் பிரச்சனையை எடுத்துச் செல்ல இருக்கிறோம். அங்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அரைமணி நேரத்தில் ஒரு நல்ல முடிவு வரவில்லை என்று சொன்னால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்து பேசி, ஒருவேளை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பதா? அல்லது நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதா? என்பது குறித்து முடிவெடுப்போம்.


செய்தியாளர்:  தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? எப்படி பார்க்கிறீர்கள்? தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் முதல் அதிமுக அமைச்சர்கள் அனைவரும், தோல்வி பயம் காரணமாக திமுக தேர்தலை நிறுத்தப் பார்க்கிறது என சொன்னார்களே?

மு.க.ஸ்டாலின் : இப்போதும் தோல்வி பயம் காரணமாகத்தான் திமுக தேர்தல் ஆணையத்தை நாடி உள்ளது என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள் இப்போது திமுகவின் வெற்றியைத் தடுக்கிறார்கள். வெற்றியைத் தடுப்பதால்தான் நீதிமன்றத்தை நாட உள்ளோம்.  முன்னர் முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றத்திற்கு சென்றோம். இதுபோல் முறைகேடுகள் செய்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் முன்கூட்டியே முறைகேட்டை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.  திருடிய பிறகு திருடன், திருடன் என்று சொல்வதை விட, திருடுவதற்கு முன்பே அதைத் தடுக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் ஈடுபட்டோமே தவிர வேறு ஒன்றும் இல்லை.


செய்தியாளர் :  தேர்தல் ஆணையம் முறைகேட்டுக்கு துணைபோவதாக கருதுகிறீர்களா? 

மு.க.ஸ்டாலின் :  உறுதியாக, நிச்சயமாக, சத்தியமாக, அண்ணா மீது ஆணையாக தேர்தல் ஆணையமும் இந்த முறைகேட்டுக்கு துணை போகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக