கட்டண உயர்வு: தொடர்வண்டிகளில்
வசதிகளை மேம்படுத்த வேண்டும்!
-DR.S. ராமதாஸ்
தொடர்வண்டி பயணிகள் கட்டணம் புத்தாண்டு முதல் கிலோ மீட்டருக்கு 4 பைசா வரை உயர்த்தப் பட்டுள்ளது. தொடர்வண்டிக் கட்டணம் கிலோமீட்டருக்கு 40 பைசா, அதாவது 77% வரை உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், கட்டண உயர்வு மிகவும் குறைவாக இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே ஒரு வகையான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உண்மை.
இந்திய தொடர்வண்டி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சாதாரணத் தொடர்வண்டிகளில் குளிரூட்டி வசதி இல்லாத வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு காசு, விரைவு வண்டிகளில் இதே வகுப்புகளுக்கு இரு காசு வீதம் உயர்த்தப்பட்டுள்ளன. விரைவுத் தொடர்வண்டிகளில் குளிரூட்டி வசதி கொண்ட வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு 4 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. 66 விழுக்காடு பயணிகள் பயன்படுத்தும் புறநகர் தொடர்வண்டிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் தொடர்வண்டியின் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். அதை மனதில் கொண்டு தான் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்த காலங்கள் உள்ளிட்ட 11 ஆண்டுகளில், அதாவது 2002 முதல் 2012 வரையிலான காலத்தில் பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக, ஒரு முறை கட்டணம் குறைக்கப்பட்டது.
எனினும், கடந்த 5 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாதது; தொடர்வண்டித்துறையின் இயக்கச் செலவுகள் அதிகரித்திருப்பது ஆகிய காரணங்களாலும், சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்கும் தொடர்வண்டிகளில் அதிகபட்ச கட்டண உயர்வு ரூ.10 தான் என்பதாலும் அதிக பாதிப்புகள் இல்லாத இக்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
அதேநேரத்தில் தொடர்வண்டி கட்டணம் எந்த அளவுக்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தொடர்வண்டிகளிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா? என்ற வினா எழுகிறது. தொடர்வண்டி நிலையங்களில் பயணிகள் அமருவதற்கான இருக்கைகள், பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக இருந்த போது தான் செய்து தரப் பட்டன. தொடர்வண்டி நிலையங்கள் அழகுபடுத்தப்பட்டதும் பா.ம.க அமைச்சர்கள் இருந்த காலத்தில் தான்.
ஆனால், இன்றைய நிலையில் தொடர்வண்டிகள் மற்றும் தொடர்வண்டி நிலையங்களில் தூய்மை என்பது பெரும் பற்றாக்குறையாக உள்ளது. தொடர்வண்டிப் பெட்டிகளில் எலிகள் ஓடும் அளவுக்கு தான் அவற்றின் பராமரிப்பு உள்ளது. கழிப்பறைகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பல நேரங்களில் பயணிகள் மூக்கைப் பிடித்துக் கொண்டு பயணிக்கும் அளவுக்கு நாற்றம் அடிக்கிறது. அதேபோல் தொடர்வண்டி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்படவில்லை. இக்குறைகள் அனைத்தையும் களைந்து தொடர்வண்டி பயணத்தை மகிழ்ச்சியானதாகவும், மலர்ச்சி ஆனதாகவும் மாற்றும் அளவுக்கு பயணிகளுக்கான வசதிகளை தொடர்வண்டித்துறை செய்து தர வேண்டும்.
இவைதவிர, டைனமிக் கட்டணம் என்ற பெயரில் தொடர்வண்டிக் கட்டணத்தை விமானக்கட்டணத்தை விட கூடுதலாக உயர்த்தும் முறை நியாயமற்றதாகும். இந்த முறையில், அண்மையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான கட்டணமாக ரூ.2440 வசூலிக்கப் பட்டுள்ளது. இது இயல்பான கட்டணத்தை விட சுமார் 10 மடங்கு அதிகமாகும். இதுவும் ஒருவகையான சுரண்டல் தான் என்பதால், இம்முறையை முற்றிலுமாக கைவிட தொடர்வண்டித்துறை முன்வர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக