வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

மத்திய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் இடதுசாரி கட்சிகள் அறைகூவல்


மத்திய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் இடதுசாரி கட்சிகள் அறைகூவல்

இடதுசாரி கட்சிகளின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் (06.02.2020_ அன்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் செல்வசிங், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் கோ.பழனிசாமி, நா.பெரியசாமி, மற்றும் பி.சேதுராமன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் &-லெனினிஸ்ட் &- விடுதலை) மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய,மாநில அரசுகளின் மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், மத்திய அரசின் மோசமான நிதிநிலை அறிக்கையைகண்டித்தும் 12.02.2020 முதல் 18.02.2020 முடிய நாடு தழுவிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற இடதுசாரி கட்சிகளின் முடிவை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

1. மக்கள் சேமிப்பின் ஆதாரமாக உள்ள வங்கிகளையும், ஆயுள் காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும்.

2. முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ள வேலையின்மைக்கு முடிவுகாணும் வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். உயர் மதிப்பு பண நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழிற்சாலை மூடல்கள், இதன் விளைவாக ஏற்பட்ட வேலையிழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் நிர்ணயித்து வழங்க வேண்டும்.

கிராமப் பொருளாதாரத்தை நிலைகுலைத்துள்ள விவசாய நெருக்கடிகளுக்கு தீர்வு காண தவறிய மத்திய அரசு, விவசாயக் கடன்கள் அனைத்தையும் ஒருமுறை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

அரசு செலவினங்கள் குறைப்பு என்ற பெயரில் உணவு மானியம் ரூ.75,532கோடி, மீன் வளம் உள்ளிட்ட வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களுக்கு ரூ.30,683கோடி, ஊரகப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு ரூ.9,500 கோடி, சமூக நலத் திட்டங்களில் ரூ.2,640 கோடி, நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் ரூ.5,765 கோடி, சுகாதாரத் துறையில் ரூ.1,169 கோடி என மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை கோடிக்கணக்கான மக்களை வறுமைப் படுகுழியில் தள்ளி விடும். 

எனவே மேற்கண்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு தேவையான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.அரசமைப்பு சட்டத்தை சிறுமைப்படுத்தி, சிதைத்து, சீர்க்குலைக்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கு பதிவேடு என்று மக்களையும், மக்கள் ஒற்றுமையை பிளவுபடுத்தி, தேச பாதுகாப்பை பலவீனப்படுத்தும் செயல்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

- என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொது மக்களிடம் விரிவாக எடுத்துச் செல்லவும், மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தி12.02.2020 முதல் 18.02.2020 முடிய ஒருவார காலத்தில்வாய்ப்பான தேதிகளை தீர்மானித்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டுமென முடிவுசெய்யப்பட்டுள்ளது. 

இவ்வியக்கத்தையொட்டிவிரிவான துண்டு பிரசுர விநியோக இயக்கமும், மாவட்ட (அல்லது) வட்ட தலைநகரங்களில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெறும். இடதுசாரி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூடி இவ்வியக்கத்தைவலுவான இயக்கமாக மாவட்ட அல்லது வட்ட தலைநகர்களில் நடத்திட திட்டமிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

இடதுசாரி கட்சிகளின் சார்பில் நடைபெறும் இவ்வியக்கத்திற்கு பொதுமக்கள்பேராதரவு தர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக