வியாழன், 5 மார்ச், 2020

பெண்களின் திருமண வயதை 21- ஆக உயர்த்த வேண்டும் என்ற கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன? - DR.S.ராமதாஸ்


பெண்களின் திருமண வயதை 21- ஆக
உயர்த்த வேண்டும் என்ற கர்நாடக உயர்நீதிமன்றத் 
தீர்ப்பு சொல்வது என்ன? - DR.S.ராமதாஸ்

திருமண வயதை அடையாத சிறுமியை இளைஞர் ஒருவர் கட்டாயத் திருமணம் செய்து கொண்டது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் டாக்டர். கே.பக்தவச்சலா, கே.கோவிந்தராஜுலு ஆகியோர் அந்த திருமணம் செல்லாது என்று அறிவித்தனர். அதுமட்டுமின்றி, பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:


ஓடிப்போய்திருமணம் செய்துகொண்டது தொடர்பான பல வழக்குகளையும், அவ்வாறு திருமணம் செய்து கொண்ட பெண்களின் பெற்றோருக்கு சொல்ல முடியாத வேதனைகளும், துன்பங்களும் ஏற்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அனைத்து காதல் திருமணங்களும் வெற்றி பெறுவதில்லை. 

ஒரு பெண்ணின் காதல் திருமணம் தோல்வியடையும் பட்சத்தில் அப்பெண்ணும், அவரது பெற்றோரும் தான் வாழ்க்கை முழுவதும் துயரப்பட வேண்டும். திருமணத்திற்குப் பிறகுதான் தாங்கள் அவசரப்பட்டு திருமணம் செய்துகொண்டு, பின்னர் வருந்தும் தவறை செய்துவிட்டோம் என்பதை உணர்கிறார்கள்.

திருமணச் சட்டம்

ஹிந்து திருமணச் சட்டம் 1955-ன் ஐந்தாவது பிரிவு கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

’’பிரிவு 5: ஹிந்து திருமணத்திற்கான நிபந்தனைகள்: கீழ்க்கண்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே இரண்டு ஹிந்துக்களுக்கு இடையே புனிதமான முறையில் திருமணம் செய்துவைக்கப்பட வேண்டும். அந்த நிபந்தனைகள் வருமாறு:

(அ). திருமணத்தின்போது மணமகனுக்கோ அல்லது மணமகளுக்கோ வாழ்க்கை இணை எவரும் உயிருடன் இருக்கக்கூடாது;

(ஆ-1).திருமணத்தின் போது , திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாதவர்களாக இருக்கக்கூடாது;

(ஆ-2). திருமணத்தின் போது ஒப்புதல் அளிக்கும் நிலையில் மணமக்கள் இருந்தாலும், மனநல பாதிப்புக்கு ஆளாகியோ அல்லது திருமணத்திற்கோ, குழந்தை பெறுவதற்கோ தகுதியற்றவர்களாகவோ இருக்கக்கூடாது;

(ஆ-3) கடந்த காலங்களில் இருவரும் அடிக்கடி மனநல பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கக்கூடாது;

(இ) திருமணத்தின்போது ,மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும்;

(ஈ) இரு தரப்பினரும் தடை செய்யப்பட்ட உறவு வளையத்துக்குள் இருக்கக்கூடாது.

(உ) இருவரும் திருமணம் செய்து கொள்ளமுடியாத உறவுக்காரர்களாக இருக்கக்கூடாது.

ஹிந்து திருமணச் சட்டம் 1955-ல் ’புனிதமான முறையில் திருமணம் செய்துவைக்கப்பட வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருப்பது, அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே திருமணம் செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. திருமணத்தை யார் நடத்தி வைக்க வேண்டும்; திருமணத்திற்கு மணமகன் அல்லது மண மகளின் பெற்றோர்களுடைய ஒப்புதல்பெறப்படவேண்டுமா? ....வேண்டாமா? என்பது குறித்து எதுவும் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.ஹிந்து திருமணச் சட்டத்தின் 5-ஆவது பிரிவு என்பது தெளிவான ஒன்றல்ல. இந்தசட்ட மசோதா கொண்டுவரப்பட்ட போது காதல் திருமணங்களை நாடாளுமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்றே எங்களுக்கு தோன்றுகிறது.

புனிதமான முறையில் திருமணம்

புனிதமான முறையில் திருமணம் நடத்திவைக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை , மணமகனின் பெற்றோரும், மணமகளின் பெற்றோரும் சேர்ந்து தான் திருமணம் செய்து வைக்க வேண்டும்; அதன்மூலம் திருமணத்திற்கு அவர்களின் ஒப்புதல் அவசியம் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா? சட்டத்தை இயற்றுவது நாடாளுமன்றத்தின் பணி என்பதால் எங்களால்சட்டத்தை மாற்றி எழுதவோ அல்லது அத்ற்கு வேறு அர்த்தம் தருவதோ முடியாது.ஹிந்து திருமண சட்டத்தின் 5-ஆவது பிரிவின்படி 01.10.1978-க்கு முன்புவரை மணமகன், மணமகளின் திருமண வயது முறையே18ஆண்டுகள், 15 ஆண்டுகள் என இருந்தது. ஆங்கிலேய சட்டத்தின்படி, 21 வயதை பூர்த்தி செய்தவர் தான் மேஜராக கருதப்படுகிறார். இந்திய பெரும்பான்மையினர் சட்டம் 1875-ன் 9-இல் 3-ஆவது பிரிவும் ஒரு மைனரின் சொத்துக்களுக்கோ அல்லது அவருக்கோ அல்லது இரண்டுக்குமோ பாதுகாவலராக இன்னொருவர் நியமிக்கப்படும்போது , மைனருக்கு 21 வயது நிறைவடையும் போது தான் அவர் மேஜராகிறாரே தவிர, அதற்கு முன்பாக இல்லை.எனவே, எங்களின் கருத்துப்படி, 21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண் தங்களுக்கு ஏற்ற துணையா என்பதை பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது.ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டு, அந்த முடிவுக்காக பின்னர் தான் வருத்தப்படுகிறார்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்.

நடிகர் சிரஞ்சீவி மகள் திருமண தோல்வி

பெண்களுக்கு ஏற்ற மணமகனைத் தேர்வு செய்ய வேண்டும், தங்களின் மகள் மகிழ்ச்சியான மன வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். காதல் திருமணங்கள் குறித்து ஹிந்து திருமணச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால், இது போன்று காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் மற்றும் பெற்றோர்களின் துயரங்கள் மற்றும் கொந்தளிப்புகளை கருத்தில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ற வகையில் சட்டத்தைத் திருத்த இதுவே சரியான நேரம் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த நேரத்தில் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ( இப்போது மத்திய அமைச்சர்) திரு. சிரஞ்சீவி மகளின் காதல் திருமணம் தொடர்பான நிகழ்வுகளை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் போது , அத்திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சேர்க்கவேண்டும் இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துச் செய்யத் தகுந்தவை என அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக