வியாழன், 5 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த வைகோ கேள்விகளுக்கு அமைச்சர் பதில்


கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த வைகோ கேள்விகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், எழுத்து மூலம் அளித்துள்ள விளக்கம்


கீழ்காணும் கேள்விகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

(அ) சார்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய், சீனா மற்றும் அதன் சுற்றுப்புற நாடுகளைத் தாக்கி உள்ளதா?

(ஆ) அவ்வாறு இருப்பின், சீனாவின் அந்தப் பகுதிகளில் எத்தனை இந்தியர்கள் வேலை பார்க்கின்றார்கள்? சுற்றுலாப் பயணியாகச் சென்றவர்கள் எத்தனை பேர்?

(இ) இந்நோய்த் தாக்குதலை எதிர்க்கொள்ள, போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

(ஈ) அயல்நாடுகளில் இருந்து வருவோர், வான் ஊர்தி நிலையங்களில் முறையாக சோதிக்கப்படுகின்றார்களா? நோய்த்தொற்று இருந்தால், அவர்களைத் தனியாகப் பிரித்து, உரிய வைத்தியம் அளித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றதா?

(உ) இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, உலக நல்வாழ்வு நிறுவனம், ஏதேனும் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கின்றதா?

(ஊ) அவ்வாறு இருப்பின், அதன்படி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தருக.

மக்கள் நல்வாழ்வுத் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே அளித்துள்ள விளக்கம்

அ முதல் இ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

ஆம். சீனாவைத் தாக்கி உள்ள கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் குறித்து, அரசு கவனத்தில் கொண்டுள்ளது; அந்த நோய், இந்தியாவைத் தாக்கி விடாமல் தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாநிலத்தில், ஊஹான் என்ற நகரத்தில், இந்த நோய்த்தொற்று கண்டு அறியப்பட்டுள்ளது. எனவே, ஹூபேய் மாநிலத்தில் உள்ள இந்திய மாணவர்கள், அங்கே பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்ற இந்தியர்களை, மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.

அதன்படி, 645 பேர் மீட்டு வரப்பட்டனர். அவர்கள், இரண்டு இடங்களில் உள்ள தடுப்புகளில் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். 243 பேர் மனேசர், 402 பேர் சாவ்லா ஆகிய இடங்களில் உள்ள இந்தியப் படை முகாம் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது கண்டு அறியப்பட்டது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

கேரளாவில் 3 பேருக்கு மட்டும், கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களால் எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.



கேள்வி ஈ க்கான விளக்கம்:

இந்தியாவின் 21 பன்னாட்டு வான் ஊர்தி நிலையங்களிலும், பயணிகள் சோதிக்கப்பட்டு வருகின்றனர். சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருகின்ற அனைவரும் கட்டாயமாகச் சோதிக்கப்படுகின்றனர். அந்த வான் ஊர்திப் பயணிகளுக்காக, வான் ஊர்தி நிலையங்களில், தனி நடைவழிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

வான் ஊர்தி நிலையங்கள், துறைமுகங்கள், அண்டை நாடுகளுடன் தரைவழி நுழைவு வாயில்களில் பணிபுரிகின்ற அதிகாரிகளுக்கு, எபோலா, கொரோனா போன்ற உயிர்க்கொல்லி தொற்று நோய்கள் (ஞயவாடிபநளே) குறித்து எச்சரிக்கப்பட்டு உள்ளது. 21 வான் ஊர்தி நிலையங்களிலும், வெப்ப சோதனைக் கருவிகள் (கூhநசஅயட ளுஉயnநேச) பொருத்தப்பட்டு உள்ளன.

கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவிப் பணியாளர்கள், வான் ஊர்தி நிலையங்களில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உ,ஊ ஆகிய கேள்விகளுக்கான விளக்கம்:

மேற்கண்ட தொற்று நோய்ப் பரவலைத் தடுப்பது குறித்து, உலக நல்வாழ்வு நிறுவனம் (றுழடீ) வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கின்றது. அந்நிறுவனத்தின் இணையதளத்திலும் காணலாம்.

அதன்படி, மக்கள் நல்வாழ்வு அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கின்றது. நோய்த்தொற்றைக் கண்டுஅறியவும், மாநில எல்லைகளின் நுழைவு வாயில்களைக் கண்காணிக்கவும், சோதனைக்கான கூறுகளைச் சேகரிக்கவும், சரக்குகளைப் பொருள்களைப் பெட்டிகளில் அடைத்தல், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லுதல் ஆகிய இடங்களிலும் ஒருங்கிணைந்த மருத்துவக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் 21 பன்னாட்டு வான் ஊர்தி நிலையங்களிலும், அனைத்து பெரிய, சிறிய துறைமுகங்களிலும், எல்லைகளின் நுழைவாயில்கள், சோதனைச்சாவடிகளிலும், பயணிகள் மருத்துவ சோதனை செய்யப்படுகின்றனர்.

வான் ஊர்திகளில் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. படிவங்களில் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு, பயணிகளிடம் எழுத்து மூலம் விளக்கம் பெறப்படுகின்றது. மக்கள் கூடுகின்ற இடங்களில் எச்சரிக்கை விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துடன் இணைந்து, எல்லைப்புறங்களில் உள்ள கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, நோய்த்தொற்று குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.

ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், சீனா, ஹாங்காங், தைவான், சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளிடம் மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தகைய நோய்த் தொற்றுக் நுண்ணுயிர்களை ஆய்வு செய்வதற்கு, புணேயில் உள்ள தேசிய நுண்ணுயிர்கள் ஆய்வு நிறுவனத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 14 இடங்களில் உள்ள ஆய்வகங்களிலும் தொடக்கநிலை சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவையான கருவிகள், போதுமான அளவில் உள்ளன.

அனைத்து மாநில மொழிகளிலும் விழிப்பு உணர்வுப் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. வானொலி, தொலைக்காட்சிகளில் துறை சார்ந்த அறிஞர்கள் விளக்கம் அளித்து வருகின்றார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை, செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறையின் சார்பில் நாள்தோறும் செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகின்றது. சமூக வலைதளங்களிலும் பரப்புரைகள் செய்யப்படுகின்றன.

இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காகவே, 24 மணி நேரமும் இயங்குகின்ற ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கான தொலைபேசி எண்: 011 23978046.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் தலைமையில், அயல்உறவுத்துறை, வான்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர்கள், உள்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கப்பல் போக்குவரத்து  இணை அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம், 03.02.2020 அன்று நடைபெற்றது.

நடுவண் அரசின் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை, பாதுகாப்பு, அயல்உறவு, வான்வழிப்போக்குவரத்து, உள்துறை, துணித்துறை, மருந்தகங்கள், வணிகத்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளோடும், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களோடும், தொடர்ந்து தொடர்பு கொண்டு, நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், நாள்தோறும் இப்பணிகளைக் கண்காணித்து வருகின்றார்.  இரண்டு நாள்களுக்கு ஒருமுறை, மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர்களுடன் காணொளி மூலம் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு, அனைத்து வழிகளிலும் அரசு கண்காணித்து வருகின்றது.

இவ்வாறு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், எழுத்து மூலம், பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு விளக்கம் அளித்து இருக்கிகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக