புதன், 18 மார்ச், 2020

பெரியார் பணிகளை முடிக்கும் கடமை இந்த சிறிய ‘‘குருவியின் தலையில் பனங்காயாக’’ விழுந்தது.


‘‘குருவியின் தலையில் பனங்காய்தான்’’ என்றாலும் - 
தோழர்களின் தோள்களின் துணையால், பணிகள் சுமையல்ல; சுகமே!
பணிகள் காத்திருக்கின்றன - பணிகளைத் தொடருவோம்! - கி.வீரமணி

பாசமிகு கழகக் கொள்கைக் குடும்பத்தவர்களே, இன்று (18.3.2020) எனது தனிப் பொறுப்புக்கு ஆளாக்கிய பணிகளின் 42 ஆவது ஆண்டு தொடக்கம் ஆகும். நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் இயற்கையெய்தி அவர்கள் விட்ட அய்யா பணிகளை முடிக்கும் கடமை இந்த சிறிய ‘‘குருவியின் தலையில் பனங்காயாக’’ விழுந்தது.

‘‘குருவி தலையில் பனங்காயா?’’

குருவி தாங்குமா என்ற அச்சமும், அய்யமும் பலருக்கும் இருந்தது; மக்கள் தலைவராக இருந்து மறைந்த மதிப்பிற்குரிய ஜி.கே.மூப்பனார் அவர்கள் குடந்தையில் நமது மாநாடு மூர்த்தி கலையரங்கில் முன்பு நடந்தபோது குறிப்பிட்டு,  ‘இந்தக் குருவி அந்தப் பனங்காய் போன்ற பெருங்கட மையைச் சரியாகவே செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது’ என்று தட்டிக் கொடுத்து, இலட்சியப் பயணத்தை அய்யா - அம்மா காலத்திற்குப் பின் முன்னெடுத்து முனைப்புடன் செய்திட உதவியது.

இந்த சிறு குருவியால் அந்த பெரும் பனங்காயைத் தாங்கி நடத்திட முடி வதற்குரிய இரகசியம் என்ன தெரியுமா? குருவியின் பலம் அல்ல - தாங்கும் தோழர்களின் தோள்கள்!

குருவியின் பலம் அல்ல; இந்தக் குருவி அமர்ந்துள்ள தோள்கள் தந்தை பெரியாரின், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் தோள்கள் மட்டுமல்ல, ‘‘கடமையாற்றுவதில் துறவிக்கும் மேலான தொண்டர்கள்’’ என்ற அய்யாவால் பெருமைப்பட்ட நமது கருஞ்சட்டை கழக வீரர்களின் தோள்களும்கூட! எனவே ‘குருவிக்கு சுமையல்ல; சுகமே!’ எனவேதான், எத்தனை எதிர்ப்புகள் கடல்போல - எத்தனைத் துரோகம் மலைபோல! எத்தனை அவதூறுகள் புயல்போல - வீசியது, நாளையும் வீசும்; வீசினாலும், நம் பயணத்தைத் தடுத்திட முடியாத வெற்றிப் பயணமாகவே ஒவ்வொரு ஆண்டும் சரித்திர சாதனை செய்து வருகிறோம்! நமது இயக்கம் எப்படிப்பட்டது? நம் இயக்கம் - ஒரு கட்சி அல்ல - சதா இயங்கிக் கொண்டே இருக்கும் உயிரோட்ட இயக்கம் ஆகும்.

பன்முகச் செயற்பாடுகள் - களங்கள் பற்பல!
சலிப்பில்லை! களைப்பில்லை!!

ஊடகங்களும், பார்ப்பனர் ஏடுகளும் அவர்களுக்கு ஆலவட்டம் சுற்றும் சுற்றுக் கோள்களான வேறு பல ஊடகங்களும் நம் செயற்பாடுகளை திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தாலும், அன்றாடம் மக்களை நேரடி யாகச் சந்தித்து நம் கொள்கைகளை விளக்கிடும் வாய்ப்பை வழமையாக்கிக் கொண்ட நமக்கு அது ஒரு பாதிப்பில்லை.  பழக்கப்பட்டதுதான்! விளம்பர வெளிச்சத்தாலா சுவாசிப்பது நடைபெறுகிறது? இல்லையே! மூக்குத் தெரிகிறது; சுவாசிப்பது அனைவர் காதிலும் விழுகிறதா என்பதா முக்கியம்? எப்படிப்பட்ட இயக்கம்? நம் இயக்கம் ஓர் திறந்த புத்தகம்! நம் இயக்கம் வெளிப்படைத் தன்மை கொண்ட நிகரற்ற இயக்கம். ரகசிய இயக்கமோ - பயங்கரவாத இயக்கமோ அல்ல. தீவிரவாத இயக்கமோ, வன்முறை இயக்கமோ அல்ல. மாறாக, மக்கள் மனதை மாற்றி - மனதில் ‘புகுந்து’ அதை போராட்டக் களமாக்கி, ரத்தம் சிந்தாமல், ஆயுதம் ஏந்தாமல், அமைதிவழி அறிவியக்கப் புரட்சியை ஏற்படுத்திவரும் தனித்தன்மையான அதி சய இயக்கம்! நன்றி பாராட்டாத இயக்க மும்கூட! இதனை எளிதில் தோற்கடிக்கலாம் என்று கனவு கண்டவர்களின் - மனப்பால் குடித்தவர்களின் - இன எதிரிகளின் அந்த முயற்சி தோற்றுப்போன வரலாறு - மறுக்கப்பட முடியாத ஒன்றே! அறிவுப்போர் என்பதால், அதன் வெற்றிக்கனியைப் பறிக்க அவசரப்பட்டு விட முடியாது என்பதும் வரலாற்று உண்மை! ஆட்சிக்குப் போகாமலேயே ஆட்சி செய்த அறிவு ஆசான் கண்ட இந்த அறிவியக்கத்தின் சாதனை ஆற்றொழுக்கான அருவியின் ஓட்டமாகும்.

42 ஆண்டுகள் - திரும்பிப் பார்க்கலாமா?

42 ஆம் ஆண்டுப் பொறுப்பில் வரும் இன்று சற்றே திரும்பிப் பார்ப்போமா?
பிரச்சாரக் களம் - போராட்டக் களம் - தந்தை பெரியார் - அன்னை ஈ.வெ.ரா.மணி யம்மையார் உருவாக்கிய அறப் பணிகள் அனைத்துத் துறையும் அப்பழுக்கின்றி - தோழர்களின் தொடர்ந்த ஒத்துழைப்பால், கூட்டுப் பணித் தோழர்களின் நாணயம்மிக்க பணித் திறத்தாலும், சீரோடும், சிறப்போடும், தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன!

பெரியார் பன்னாட்டு அமைப்பும், அமெரிக்க மனிதநேய அமைப்பும் இணைந்து வாஷிங்டன் அருகில் உள்ள மேரிலாண்டில் இரண்டு நாள் மாநாடு.

அதையொட்டி தொடர்ந்து நான் கலந்து கொண்ட பெரியார் விழாக்கள் -  பாஸ்டனில், சிகாகோவில், கலிபோர்னியாவில் என்று அமெரிக்காவில் பெரியார்தம் கருத்து மழை அடைமொழியாக நடந்ததே!

16.11.2019 இல் விருதுநகரில் பகுத்தறி வாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு.
போராட்டக் களத்தில்...

7.02.2019 இல் மனுதர்ம எரிப்புப் போராட்டம்!

16.3.2019 - பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலின வன்கொடுமைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் (திராவிடர் கழக மகளிரணியினர் ஏற்பாடு).

15.6.2019 - மாநில உரிமைகள், சமூக நீதிக்கு எதிராக இந்தி, சமஸ்கிருத, ‘நீட்’ தேர்வு திணிப்புகளுக்கு எதிரான ஆர்ப் பாட்டம் (தஞ்சையில்).

1.10.2019 - அண்ணா பல்கலைக் கழ கத்தில் - பொறியியல் கல்வி பாடத் திட்டத் தில் பகவத் கீதையா? கண்டன ஆர்ப் பாட்டம்.

25.2.2020 - பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் என்பதில் இந்துத்துவாவை நுழைக்கும் ‘ஹரேராமா ஹரேகிருஷ்ணா’ இயக்கத்தையும் (இஸ்கான்), அதனை மத்திய அரசின் வற்புறுத்தலுக்கு அடி பணிந்து செயல்படுத்தத் துடிக்கும் தமிழக அரசின் போக்கைக் கண்டித்தும் போராட் டம். (இரண்டும் திராவிட மாணவர் கழக அணியினர் முனைப்புடன் செய்தனர். சென்னை பெரியார் திடலில் உள்ள  பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்மூலம்...

2019 ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் டிசம்பர் 31 ஆம் தேதிவரை நடைபெற்ற சுயமரியாதை இணையேற்பு நிகழ்வுகள் மொத்தம் - 461.
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வுகள் - 420
இதில், வேற்று மாநிலத்தவர் இணையேற்பு நிகழ்வுகள் - 13
பார்ப்பனர் இணையேற்பு நிகழ்வுகள் - 9
மணமுறிவு பெற்ற இணையேற்பு நிகழ்வுகள் - 19
2020 ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் மார்ச் மாதம் 16 ஆம் தேதிவரை நடைபெற்ற இணையேற்பு நிகழ்வுகள் மொத்தம் - 118
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வுகள் - 110
இதில், வேற்று மாநிலத்தவர் இணை யேற்பு நிகழ்வுகள் - 6
மணமுறிவு பெற்ற இணையேற்பு நிகழ்வுகள் - 5
பார்ப்பனர் இணையேற்பு நிகழ்வுகள் - 2 ம் அடங்கும்
இப்படி தொடர் சங்கிலிகளாக செயல் பாடுகள்!

நீட் தேர்வு போராட்டம் - கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அறப்பணிகள் - அறிவுப் பணிகள் - தொடர் பணிகள்.

கிராமங்களில் மருத்துவ சேவை முகாம் - புற்றுநோய் கண்டறியும் முக்கிய பணிகள். புத்தகக் கண்காட்சி - புதிய வெளியீடுகள் அறிமுகமும், பரப் புதலும். ‘உண்மை’ ஏட்டின் பொன்விழாக் கொண்டாட்டம்  மார்ச் 16 இல் அன்னையார் நூற்றாண்டு நிறைவு - சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அஞ்சல் தலை, நூற்றாண்டு மலர், படக்கதை நூல், அன்னையாரின் தொண்டு பற்றிய பிரபல கவிஞர்கள் இசைப் பாடல் ஒலிநாடா வெளியீடு.
பயணம் தொடர்கிறது....

இப்படி அடைமழையாகப் பெய்து கொண்டிருக்கிறது. அத்தனைக்கும் காரணம், கட்சி, ஜாதி, மதங்கள் கடந்து பெரிதும் நம்மை ஊக்கப்படுத்துவதால் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இமை கொட்டாத போர் வீரர்களாக களத்தில் நிற்கும் நம் கருஞ்சட்டை உறவு களுக்கும், தொண்டறத் துறவுகளுக்கும், எமது தலைதாழ்ந்த நன்றி! நன்றி!!

பயணம் தொடர்கிறது - பணிகள் காத்திருக்கின்றன! அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக