புதன், 18 மார்ச், 2020

தமிழ் வழியில் பயின்றவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு முன்னுரிமை - ஜி.கே.வாசன் பாராட்டு


அரசுப் பணிகளில் நியமனம் பெறுவதற்கு பட்டப்படிப்பில் மட்டும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது என்று இருந்த நிலையில் 10, 12 ஆகிய வகுப்புகளிலும் தமிழ் மொழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சீர்திருத்தம் செய்ய தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு தமிழ் மக்களுக்கு, தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெரும் பயன் தரும்.

அதாவது, பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக இருக்கும் அரசுப் பணிக்கு 10, 12 மற்றும் பட்டயப்படிப்பை தமிழிலேயே படித்திருக்க வேண்டும் எனவும், பட்டமேற்படிப்பு கல்வித்தகுதியாக இருக்கும் அரசுப் பணிக்கு அனைத்து வகுப்புகளையும் தமிழில் படித்திருக்க வேண்டும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் மத்தியில் தமிழ் வழியில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் இன்னும் அதிகமாக ஏற்படும். மேலும் தமிழ் மொழியின்பால் உள்ள அக்கறையும், ஈடுபாடும் மேம்படும். குறிப்பாக வசதியில்லாமல் அரசுப்பள்ளிகளில் மட்டுமே தமிழில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர அதிக வாய்ப்பு இல்லாத ஒரு நிலையில் அவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தற்போது தமிழக அரசு ஒரு நல்ல முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதாவது, அரசுப்பணியிடங்களில் தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு 20% வரை முன்னுரிமை அளிப்பதற்கு ஏதுவாக இம்மசோதா வழி வகைச்செய்கிறது. தமிழ் மொழியின் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள அளவில்லா பற்றை கவனத்தில் கொண்டுள்ள தமிழக அரசு தமிழ் மொழியை ஊக்குவிக்க வேண்டும், தமிழ் மொழியில் மட்டுமே கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர கூடுதல் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

இதனால் தமிழ் மொழியில் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்ற மாணவர்களின் வருங்கால வாழ்வு மேலும் சிறக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் நடைமுறைக்கு வர இருக்கும் இந்த சட்டத்திருத்தம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் பற்றுள்ள மாணவர்களுக்கும், தமிழகத்துக்கும் வரும் காலங்களில் பெரும் பயன் தரும்.

எனவே, தமிழ் வழியில் பயின்றவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சீர்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள தமிழக அரசுக்கு தமாகா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக